மலைகள் இணைய இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலைகள் இணைய இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

நதியில் மிதக்க விட்ட கவிதை .


 நதியில் மிதக்க விட்ட கவிதை .

நதி நிலவைச் சுமந்த
ஒரு முன்னிரவு நேரத்தில்
பேருந்து பாலத்தில் ஓடியது .
ஜன்னலோர இருக்கையிலிருந்த
எனது பார்வையில்
நதியும்
அதில் மிதக்கும் நிலவும்
பட்டபோது
சட்டென்று தோன்றியதால்
மனதிலிருந்த எனது கவிதையில்
ஒன்றை வீசியெறிந்தேன்
ஜன்னல் வழியே வெளியே .

மிதக்க விட்ட கவிதையை
மறந்து விட்ட
ஒரு முன்மாலை நேரத்தில்
இலேசாய் வெளிச்சம் போர்த்திய
நதியின் கரையில்
நின்றிருந்த போது
தூரத்தில்
மிதந்து வந்து கொண்டிருந்தது
என் கவிதை
நிலவின் கைகளைக் கோர்த்தபடி
மேலும் அழகு கூடி .

 [ புதுப்புனல் டிசம்பர் 2014 ] 

 [ மலைகள் இணைய இதழ்  - 63 ஆவது இதழ் – டிசம்பர் 2 , 2014 ]



வெள்ளி, 19 டிசம்பர், 2014

கவிழாத படகுகள் .

கவிழாத படகுகள் .
இளம் வயதில் தோன்றிய
தனித் தீவுக் கற்பனைகள்
இன்னும் மறக்கப் படாத ரகசியங்களை
வழுக்கும் மேசையின்
இரு புறமும் அமர்ந்து
பறிமாறிக் கொண்ட நேரத்தில் ,
இனிய காற்றிலும் ,
ஆற்று நீரில் பட்டுத் தெளித்த
மழைத் துளிகளின் அழகிலும்
மனம் ஒன்றி ,
படகு கவிழ்ந்த பயணம்
வாய்க்காமலே போய் விட்ட
சோகத்தில் ஆழ்ந்ததினால்
கவிழாத படகின் பயணம்
ரசிக்கப் படாமலே
கழிந்து போய் விட்ட

இளம் வெயில் காலம் .

 [ மலைகள் இணைய இதழ்  - 64 ஆவது இதழ் – டிசம்பர் 17 , 2014 ]

புதன், 3 டிசம்பர், 2014

கணிப்பு -


கணிப்பு .


அவர்கள் இவர்களுக்குள் .
இவர்கள் அவர்களுக்குள் .
தெரிந்தும் தேடிக்
கொண்டேதான் இருக்கிறார்கள் .
இவர்கள் அவர்களையும் .
அவர்கள் இவர்களையும் .
சுயமாக அமைத்துக் கொண்ட
சுவர்களுக்குள் ஒளிந்திருக்கும்
இருட்டில் தேடுவதால்
இது வரை
அவர்களால் இவர்களையும்
இவர்களால் அவர்களையும்
கண்டு கொள்ளவே இயல வில்லை .
எனினும்
தொடர்ந்து கொண்டேதான்
இருக்கிறது தேடல் .
சுவர்களில் துளை போட்டு
உருவாகும் வெளிச்சத்தில்
அவர்கள் இவர்களையும்
இவர்கள் அவர்களையும்
கண்டு கொண்டு
ஒன்றாக ஆகிப் போகலாம் ;
அல்லது
அவர்கள் இவர்களாகவும்
இவர்கள் அவர்களாகவும்
மாறியும் போகலாம் .
எல்லாமே ஒரு கணிப்புதான் .

[ மலைகள் இணைய இதழ்  - 63 ஆவது இதழ் – டிசம்பர் 2 , 2014 ]


நன்றி : மலைகள் இணைய இதழ்

திங்கள், 3 நவம்பர், 2014

பதிவுகள்.

பதிவுகள்.

எல்லாவற்றையுமே
ஞாபகத்தில் பதிந்தாகி விட்டது.
ஒவ்வொரு கணமும்
தெளிவாக
மூளையின் ஒவ்வொரு பகுதியில்.
மனதில் துடிப்பு
ஒவ்வொரு கணத்தையும்
மீண்டும் வாழ
உறைந்த ஞாபகங்கள்
மீண்டும் உயிர் பெற
எதிர் காலமும்
கடந்த காலமாகவே மாற
எனினும்
எதுவும் செய்யாது
நினைத்துக் கொண்டும்
கனவுகளில் குளித்துக் கொண்டும்
எப்போதும்
நம்பிக்கையோடு
மனிதர்கள் .


 வலைப்பதிவிற்கு பின்  மலைகள் இணைய இதழ்  - 64 – டிசம்பர் 17 , 2014  இதழிலும் பிரசுரமாகியுள்ளது ]