காக்கைச் சிறகினிலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காக்கைச் சிறகினிலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 அக்டோபர், 2015

அகல மறுப்பவை ....


அகல மறுப்பவை ....

மலையில் இருந்து இறங்கிய போது
வளைவருகில்
கீழே கண்ட பச்சைப் புல்வெளி .
முன்னிரவு நேரத்தில்
பாலத்துச் சுவரில் அமர்ந்திருந்த போது
தொட்டுச் சென்ற தென்றல் காற்று .

அழைக்காமலே
அருகில் வந்து படபடத்த பட்டாம்பூச்சியின்
வர்ண இறைப்பு .

துருவேறிய ஜன்னல் கம்பிகளுக்கு
வெளியே சிரித்த
சிவப்புச் செம்பருத்தி .

நிலாவற்ற கரு வானத்தில்
இறைத்திருந்த நட்சத்திரங்கள் .
சாளரங்களை மூடிய பின்னும்
காதுகளை வருடிய தூரத்து இசை
காரணமே இல்லாமல்
தொலைந்து போன நட்பு .

மறந்து போன இன்னும் சில...
இனி வரலாம் மேலும் பல ...

[ காக்கைச் சிறகினிலே “  -  ஆகஸ்ட் 2015 ]

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

மக்குபவையும் , மக்காதவையும் .


மக்குபவையும் , மக்காதவையும் .

ஆடிக் காற்றில்
மஞ்சனத்தியும் , வேம்பும்
உதறிய பூக்களும் , இலைகளும்
நிரம்பிக் கிடந்த தோட்டத்தைக்
கூட்டித் தள்ளி மாளவில்லை .

வேலைக்காரப் பெண்மணி
சலித்துக் கொண்டதால்
வெட்டியாகி விட்டது
அடிக்கட்டையை மட்டும் விட்டுவிட்டு
மழை வரும்போது
மறுபிறப்பு எடுத்துக் கொள்ளுமென
மனதைச் சமாதானப்படுத்தி .

தோட்டத்துக் குப்பைகளைக் குறைத்தாயிற்று
காலியாகக் கிடக்கும் பக்கத்து மனையில்
தினசரி வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளை
வசதியாக மறந்தவாறு
ஏனென இதுவரை யாரும் கேட்காததால் . 

[ காக்கைச் சிறகினிலே “  -  ஆகஸ்ட் 2015 ]

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

அவர்களும் இவர்களும் ...



அவர்களும் இவர்களும் ...

அவர்கள் அப்படி இருக்கிறார்கள்

அவர்கள் இப்படி இருக்கிறார்கள்

அவர்கள் அதைச் செய்தார்கள்

அவர்கள் இதைச் செய்தார்கள்

அவர்கள் அதை வாங்கினார்கள்

அவர்கள் இதை வாங்கினார்கள்

அவர்கள் அப்படிச் சொன்னார்கள்

அவர்கள் இப்படிச் சொன்னார்கள்

அவர்கள் அது வைத்திருக்கிறார்கள்

அவர்கள் இது வைத்திருக்கிறார்கள்

இப்படி

அவர்களைப் பற்றியே

பேசிக் கொண்டும்

நினைத்துக் கொண்டும் இருப்பதினால்

வாழாமலே கழிந்து விடுகிறது

சிலரது வாழ்க்கை .


[ காக்கைச் சிறகினிலே மார்ச் 2015 ]