இன்மை இணைய இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்மை இணைய இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஜனவரி, 2015

இழப்புகள் .


இழப்புகள் .

சென்ற வேகத்தில்
நின்று கவனிக்காமல் போன
வழியோரத் தும்பைப் பூக்களும்
பக்கத்துத் தெரு
கடைசி வீட்டின் பல வண்ண
செம்பருத்தி மலர்களும்
வீடு திரும்பி தளர்ந்து சாய்ந்த கணத்தில்
மனதிற்குள் பூத்துக் குலுங்கிய போதுதான்
உணர்ந்து கொண்டேன்
இழந்து விட்டோமென்று நினைக்குமெதுவும்
இழக்கப்படுவதில்லை
வாழ்வில் என்ற உண்மையை .
                  
[ இன்மை இணைய இதழ் ஜனவரி 2015 ]


சாத்தியங்கள் ....


சாத்தியங்கள் .

இப்படியும் எழுத இயலும் எனக்கு
இப்படியுமெழுத இயலுமெனக்கு
எனக்கு இப்படியும் எழுத இயலும்
எனக்கிப்படியும் எழுதவியலும்
எழுத இயலும் எனக்கு இப்படியும்
எழுதவியலும் எனக்கிப்படியும்
எழுத எனக்கு இயலும் இப்படியும்
எழுதவெனக்கு இயலுமிப்படியும்
எப்படி எழுதினாலும்
அவரவர் கவிதை
அவரவருக்குரியதாகவே இருக்கிறது .


இன்மை இணைய இதழ் ஜனவரி 2015 ]

புதன், 31 டிசம்பர், 2014

தோன்றியது ....


தோன்றியது ....
எட்டாவதுவரை கூடப் படித்த ஈஸ்வரனை
எரித்துவிட்டு வந்தபோது மூடப்பட்டிருந்தது
எதிர்ப்பட்ட ரயில்வேகேட் .
வாகனம் நிறுத்தி
பக்கத்தில் புதிதாய் முளைத்திருந்த
டீக்கடையில் வாங்கிச் சுவைத்த
கீரைவடையின் ருசியில் தோன்றியது
கடை பெரிதாகிவிடும் விரைவிலென்று .
தொடர்வண்டிக்காக இருபுறமும் காத்திருந்த
வாகனங்களை கண்டபோது தோன்றியது
தேவை கட்டுப்பாடு வாகனங்களுக்கும்
ஓசோனின் ஓட்டை தவிர்க்கவென்று .
கடைக் கல்லாவிற்கு மேலிருந்த
தொலைக்காட்சிப் பெட்டிச் சதுரத்தில்
நாயகனும் நாயகியும் கட்டிப் புரண்ட
காட்சியைப் பார்த்தபோது தோன்றியது
இது தொலைக்காட்சியா இல்லை
தோல்காட்சியாவென்று .
இடைஇடையே தோன்றிமறைந்த
விளம்பரங்கள் கண்ணில் படுகையில்
தோன்றியது அவை
விற்பது பொருட்களையா
அல்லது பொய்களையாவென்று .
சிகரட் பற்ற வைத்த இடைவெளியில்
எதிரில் இருந்த சூடான தேநீரில்
விழுந்து தத்தளித்த ஈயைப் பார்த்த போதுதான்
தோன்றியது
தீக்காயம் பட்டு பத்து நாளாய்
படுக்கையில் கிடந்த ஈஸ்வரனை
உயிரோடு இருக்கையிலேயே
போய் பார்த்துவிட்டு வந்திருக்கலாம்
ஒரு தடவையேனும் என்று .


[ இன்மை இணைய இதழ் டிசம்பர் 2014 ]

வெள்ளி, 7 நவம்பர், 2014

கடைசி மனிதனின் மரணம் .



கடைசி மனிதனின் மரணம் .

ஒரு மனிதன்
புதைக்கப் பட்டு விட்டான்
பக்கத்துக் குழி இன்னும்
திறந்தே இருக்கிறது .
ஒரு மனிதன்
எரிக்கப் பட்டு விட்டான்
அடுக்கிய அடுத்த சிதை
தயாராக இருக்கிறது .

ஒரு மனிதன்
கழுவிலேற்றப் பட்டு விட்டான்
கழுமுனை இன்னும்
கூராகவே இருக்கிறது .
ஒரு மனிதனின் கழுத்தில்
இறுக்கப் பட்டு விட்டது தூக்குக் கயிறு
இழுக்கப் படாத இன்னொரு முடிச்சு
காத்திருக்கிறது .

சிலுவையில் காயவில்லை
இரத்தம் இன்னும்
இன்னொரு சிலுவை
காலியாகவே இருக்கிறது .

கண்ணுக்கு தெரியாத
கடைசி மனிதனின்
மரணத்துக்காக
காத்திருக்கின்றன
எல்லாமே .
[ இன்மை இணைய இதழ் நவம்பர் 2014 ]