நந்தலாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்தலாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

பரிணாம வளர்ச்சி .

பரிணாம வளர்ச்சி .

நல்லா நினைவிருக்கு
நல்ல தண்ணிக் கிணற்றருகே
உப்புக் கிணறு .
ஒன்று குடிப்பதுக்கு ;
உப்புக் கிணறு மற்றதுக்கு .
சிமெண்ட் பூசிய
உப்புக் கிணறு சுற்றி
ஒரே கூட்டம் .
எம்பி எம்பிப் பார்த்த
எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்
உள்ளே மிதந்தவளுக்கு
அறுபதிருக்கும் .
தாளமுத்துக் கிழவனின்
மனைவியாம் .
தினம் தினம்
சாராயம் சாப்பிட்டதை
தட்டிக் கேட்டதினால்
தகராறாம் .
தண்ணியில் மிதந்தாளாம்
போன மாதம்
ஊருக்குப் போயிருந்த போதும்
சிமெண்ட் பூச்சு உதிர்ந்த
உப்புக் கிணறு சுற்றி
ஒரே கூட்டம் .
எட்டி நின்று பார்த்த போது
உள்ளே மிதந்தவனுக்கு
என் வயதே இருக்கும் .
தாளமுத்துக் கிழவனின்
பேரன் தாளமுத்துவாம் .
கைக்குழந்தையோடு
பகல் காட்சி
பார்க்கப் போனவளை
திட்டியதால் தகராறாம் .
தண்ணியில் மிதந்தானாம் .

[ நந்தலாலா இணைய இதழ் – 019       ஆகஸ்ட்  – 2014 ]

[ புதுப்புனல் டிசம்பர் 2014 ]


செவ்வாய், 23 செப்டம்பர், 2014


தொலைந்து போன கேள்விகள் .


தெரியாமல்தான் 
கேட்க வேண்டியதிருக்கிறது 
நிறைய கேள்விகளை .
தெரிந்தும் 
கேட்க வேண்டியதிருக்கிறது 
சில கேள்விகளை சில சமயங்களில் .
கேட்கப் படும் கேள்விகளுக்குத்தான் 
பதில்கள் அளிக்கப் படுகின்றன .
சில சமயங்களில் 
கேட்கப்படாத கேள்விகளுக்கும் 
பதில்கள் அளிக்கவே நேர்கின்றன .
எனினும் 
பல நேரங்களில் 
தெரிந்த பதில்களையும் 
அளிக்க முடியாமல் 
சில கேள்விகள் 
தொலைந்துதான் போகின்றன .

[ புதுப்புனல் ஆகஸ்ட் 2014 ]

[ நந்தலாலா இணைய இதழ் – 019       ஆகஸ்ட்  – 2014 ]



செவ்வாய், 16 செப்டம்பர், 2014



அருவி இதழ் 21 , 22 ஏப்ரல் - செப்டம்பர் 2014 ல் வெளியான என் கவிதை .


எழுதப் படும் எல்லா வரிகளும்
ஏற்கனவே எழுதப்பட்டு விட்டதாகவே
இருக்கின்றன .

யாரால்... எப்போது ... எங்கே ...
எதுவும் தெரியவில்லை .

எனினும்
எழுதப்பட்டு விட்டன என்றே
உணரத் தோன்றுகிறது .

வாழ்க்கையும் அப்படியேதான்
எத்தனை விதமாக வாழ முயற்சித்தும்
ஏற்கனவே யாராலோ
எப்போதோ
வாழப்பட்டு விட்டதாகத்தான்
தோன்றுகிறது .

அதனால்தான்
வாழ்க்கையும் கவிதையும்
அதனதன் போக்கில்
இயங்கிக் கொண்டே இருக்கின்றன .

[ நந்தலாலா இணைய இதழ் – 017   வைகாசி – 2014  இதழிலும் வெளியாகி உள்ளது ]

நன்றி : அருவி மற்றும் நந்தலாலா .