பாக்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாக்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 செப்டம்பர், 2015

மீட்கப் பட்ட ஏதேன் தோட்டக் கனி .


மீட்கப் பட்ட ஏதேன் தோட்டக் கனி .

இரக்கம் வந்தது மனிதன் மீது.
இறங்கி வந்தார்
கடவுள் தரைக்கு...
மூட்டையாக்கிச் சுமந்து சென்றார்
மனித பாவங்களை தலை மீது ...
இளைப்பாற நினைத்து
இறக்கி வைத்து
இமைகள் செருகி
தூங்கி எழ மூட்டையில்லை ...
வைத்த இடத்தில் .
பாவமே இல்லாமல்
வாழ்வது எப்படி ? “
தூரத்தே நின்று
மனிதன் கேட்டான்
மூட்டையைப் பிரித்தவாறு ... !
[ பாக்யா பிப்ரவரி 13 – 15 ; 2015 ]


ஞாயிறு, 4 ஜனவரி, 2015

ஏன் ?


ஏன் ?

ஒவ்வொரு கதவு
மூடப் படும் போதும்
இன்னொரு கதவு
திறக்கப் படுமாம் .
உண்மைதான் !
ஆனால் -
மூடிய கதவின் சாவி
நம் கையில் இருந்தால்
இன்னொரு கதவு திறக்க
ஏன் காத்திருக்க வேண்டும் ?

[ பாக்யா ஜனவரி 09 – ஜனவரி 15  – 2015 ]




வெள்ளி, 19 டிசம்பர், 2014

இலக்குகள்



இலக்குகள் 

ஊர்ந்து கொண்டேயிருக்கும்
எறும்புகளுக்குத் தெரிந்துதானிருக்கிறது
அவற்றின் இலக்குகள் தெளிவாக .
உட்கார்ந்து கவனிக்கும் நம்மிடம்தான்
எஞ்சியிருக்கின்றன
பயணம் குறித்த பயங்களும்

குழப்பங்களும் . 

[ முகநூல் பதிவு ]


[ பாக்யா டிசம்பர் 26 – ஜனவரி 01 – 2014 ] 
 வார இதழிலும் “ எறும்புகளும் எஞ்சியவைகளும் “ என்று தலைப்பிடப்பட்டு 
வெளியாகியுள்ளது .


திங்கள், 15 டிசம்பர், 2014

குறைந்தது .

குறைந்தது .

எடையைக் குறைக்க
நடக்கச் சொன்னார் மருத்துவர் .
நடந்து நடந்தே 
குறைந்து விட்டது
வங்கி கையிருப்பு 
அடிக்கடி நடந்தது
என் வீட்டிற்கும்
அவரது மருத்துவமனைக்கும்
என்பதால் .

[பாக்யா - டிசம்பர் 19  – 25 , 2014 ] 

வெள்ளி, 21 நவம்பர், 2014

பொடி விஷயம் .


                      
                      பொடி விஷயம் .                       

காலையில் கிளம்பும் போதே பரபரப்போடுதான் கிளம்பினார் ரங்கசாமி . ஆறு மாதமாக காலியாக இருந்த பக்கத்து இருக்கைக்கு இன்று புதிதாக ஆள் வருகிறான் .
அலுவலகத்தில் அவர் பிரிவில் இரண்டு கண்காணிப்பாளர் பதவிகள் . ஒன்று காலி . ரங்கசாமிதான் ஆறு மாதமாக கூடுதல் பொறுப்பில் அந்த இடத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் .
கால் மணி நேரத்திற்கு முன்பே இருக்கையில் இருந்தார்  ரங்கசாமி . ஐந்து நிமிடத்தில் புதியவனும் வந்து விட்டான் .
வந்தவுடன் அறிமுகம் செய்து கொண்டான் . இருவரும் சென்று மேல் அதிகாரிகளை பார்த்து விட்டு வந்தார்கள் .
இருக்கையில் அமர்ந்ததுமே வெற்றிலை போட ஆரம்பித்தான் . அவருக்கும் நீட்டினான் . பெட்டியை இருவருக்கும் நடுவில் இருந்த ரேக்கில் வைத்தான் .
கால் மணி நேரம் கழிந்ததும் ரங்கசாமிக்கு மூக்கு அரித்தது . கை அனிச்சை செயலாக ரேக்கிற்கு நீண்டது . வழக்கமாக வைக்கும் இடத்தில் பொடி டப்பா இல்லை . .திரும்பிப் பார்த்தார் . டப்பாவில் இருந்து உரிமையோடு எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தான் .
பொடி டப்பாவை அவன் ரேக்கில் வைத்ததும் அவசரமாக எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினார் .
கால் மணி நேரம் போயிருக்கும் பொடி உறிஞ்சும் ஓசை கேட்டுத் திரும்பினார் . அவன்தான் .
அதன் பின் கால் மணி நேரத்திற்கு ஒரு தடவை பொடியை உறிஞ்சிக் கொண்டிருந்தான் . போற போக்கில் பயல் டப்பாவை காலி பண்ணி விடுவான் போலிருந்தது .
மாலையில் அவசரமாக பொடி டப்பாவை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டார் . டப்பா அநேகமாக காலி . நாளை டப்பாவை பைக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் . கொஞ்சமும் நாசூக்கு இல்லாத பயல் .
வீட்டிற்குள் நுழையும் போதே மனைவியின் குரல் ஒலித்தது .
ஆபிஸ்ல எப்படி வேலை ஓடுச்சு ? பொடி டப்பாவை எடுக்காமலேயே போயிட்டிங்களே . “ மனைவி கையில் அவரது பொடி டப்பா .
அவரது கை பைக்குள் அதே போலிருந்த டப்பாவை வருடியது .  
 [ நவம்பர் 21 – 27 , 2014 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளிவந்த எனது சிறுகதை . ] 
                                    



செவ்வாய், 18 நவம்பர், 2014

ஏமாற்றம் .- பாக்யாவில் என் கவிதை .

ஏமாற்றம் .

ஏனோ தெரியவில்லை
பாட்டி வடை சுடத்
துவங்கவில்லை இன்று .
எண்ணெய் வாங்க மறந்ததினாலோ
அல்லது
உடம்புக்கு முடியாமல் போனதினாலோ
இருக்கலாம் .

காகம் கூட பறந்து விட்டது
வேறு இரை தேடி .

மரத்தடியில்
அமர்ந்திருந்த நரி
சோர்ந்து போய் விட்டது .

கதைக்காக
காத்திருந்த குழந்தை
இன்னொரு பாட்டியின் மடியில்
தூங்கி விட்டது
ஏமாற்றத்தோடு .


[ நவம்பர் 21 – 27 , 2014 பாக்யா ] 

புதன், 5 நவம்பர், 2014

வேண்டாம் விளையாடாதே .


வேண்டாம் விளையாடாதே .         -    சிறுகதை  [ சுப்ரா ]



கடைவீதியில் கூட்டமேயில்லை . பின்னால் வந்து கொண்டிருந்தவன் செயல் திலகாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது . திரும்பிப் பார்த்தாள் . அவன் பத்தடி தள்ளி ஒன்றுமே தெரியாதவன் போல வந்து கொண்டிருந்தான் .
ஐந்தாறு அடிதான் நடந்த்திருப்பாள் . மீண்டும் சில்மிஷத்தை ஆரம்பித்துவிட்டான் . திலகாவிற்கு கோபம் வந்தது . திரும்பிப் பார்த்து முறைத்தாள் . அவன் ஜவுளிக் கடை பொம்மையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் .
திலகா மீண்டும் நடையைத் தொடர்ந்தாள் . சிறிது தூரம் செலவதற்குள் மீண்டும் குறும்பை ஆரம்பித்துவிட்டான் . திலகாவின் கோபம் அதிகமானது . கையில் இருந்த கூடை கனத்தது . அதை அப்படியே அவன் தலையில் கவிழ்த்துவிட வேண்டும் போல் எரிச்சல் உண்டாக்கியது .
கண்களில் கோபம் தெறிக்க முறைத்தாள் . அவன் எதுவுமே அறியாத அப்பாவியாக இட்து கைமுட்டிகளில் வலது கை விரல்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தான் .
கணவரில்லாமல் கடை வீதிக்கு வந்தது தவறு என்று நினைத்துக் கொண்டாள் . அவரோடு வந்திருந்தால் இந்த தொல்லைகள் இராது .
“ வேண்டாம் ...! விளையாடாதே ! செருப்பு பிஞ்சிடும் . “ குரலில் கோபத்தோடு எச்சரித்தாள் .
அவள் குரலின் கடுமையில் அவன் பயந்திருக்க வேண்டும் . அதன்பின் சிறிது நேரம் எந்த தொந்தரவும் இல்லை . ஆனால் சற்றூ நேரத்தில் மீண்டும் ஆரம்பித்துவிட்டான் .
“ சர்க்க் ... “
திலகா கூடையை கீழே வைத்து விட்டு திரும்பி சட்டென்று அவனைப் பிடித்தாள் .
“ சொன்னேன்ல்ல . பின்னாடியே வந்து என் செருப்பை மிதிக்காதேன்னு . இப்ப பாரு . பிஞ்சிடுச்சு . “
“ அப்புறம் என்னம்மா , எத்தனை தடவை சொல்லிட்டேன் . கேட்காம இந்த கிழிஞ்ச செருப்பை விடாம எல்லா இடத்துக்கும் அதையே போட்டுக்கிட்டு போயிட்டிருக்கே . இது பிஞ்சாத்தான் வேற வாங்குவேன்னுதான் இப்படிச் செஞ்சேன் . “
சிரித்தபடியே சொல்லிவிட்டு அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த செருப்புக் கடைக்குள் நுழைந்தான் அவளது எட்டு வயது மகன் வினோத் .
------------ --------------- -------------- ---------------

அக் 28 – நவ 03 , 1994 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளியான எனது சிறுகதை .

வெள்ளி, 24 அக்டோபர், 2014

பாட்டியின் பாம்படம் .




பாட்டியின் பாம்படம் .         சிறுகதை  -  சுப்ரா 

ஓவியம்  - மருது .


   
பூவரச மரத்து நிழல் இதமாக இருந்தது . முத்தையா பனியனுக்கு மேல் போட்டிருந்த துண்டை உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டான் .
களத்து மேட்டு மூலையில் பூவரச மரத்தின் அடியில் இருந்த திண்டின் மீது துண்டை விரித்து உட்கார்ந்தான்  .
“ என்ன முத்தையா ! இந்த வருஷம் வெளைச்சல் எப்படி ? “
மண் சுவருக்கு மறுபுறம் கந்தசாமி நின்று கொண்டிருந்தார் .
“ நல்ல வெளைச்சல்தான் அண்ணாச்சி . எனக்கு வெவரம் தெரிஞ்சு இத்தனை மேனி போனதில்லை . இந்த வருஷம் தண்ணி நல்ல நேரத்தில விட்டான் . உரமும் நல்லா புடிச்சுகிச்சு “
“ வெலையும் எக்கச்சக்கமா இருக்குதாம் . நல்ல பார்ட்டியா பார்த்துப் போடு . சவத்துப் பயலுவ ஏமாத்திடுவானுக . “
கந்தசாமி போய் விட்டார் . முத்தையாவுக்கு அப்பா ஞாபகம் வந்தது.
முத்தையா ! மழை இல்லாம பூமியில வெளைச்சல் சரியில்லைன்னு வித்துடாதே . என்னைக்காவது ஒருநாள் அள்ளித் தரும்.“ அப்பா அடிக்கடி கூறுவார் .
அந்த வருடத்து அமோக விளைச்சலைப் பார்க்க அப்பா இல்லாமல் போய் விட்டாரே என்று நினைத்தான் . அப்பாவின் நினைவில் மனம் கனமாகிப் போனது .
முத்தையாவையும் தம்பி பழனியையும் உட்கார வைத்து பரிமாறினாள் லட்சுமி . சாப்பிட்டு விட்டு வாசலில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது கண்ணம்மா ஆச்சி வந்தாள் . முதையாவின் தந்தை வழிப் பாட்டி .
“ ஆச்சி , எங்க போயிட்டு வாறே ? “
“ கோவிலுக்குப் போனன்டா முத்தையா . கூட யாரு பழநியா ? மூதேவி , கீழே இறங்கி உட்காருலே . அண்ணாச்சிக்கு சமமா உட்காருவியோ ? “
“ இருக்கட்டும் ஆச்சி . நீ உட்காருபழநி . ஆச்சி ! இந்த வருஷம் நல்ல வெளைச்சல் . நாளைக்கு நெல்லை வித்ததும் முதல்ல ஒனக்கு தங்கத்துல ஒரு ஜோடி பாம்படம் செஞ்சுடலாம் .
“ அது கிடக்கட்டும் . முதல்ல லட்சுமிக்கு ஒரு சங்கிலி செஞ்சு போடு . எனக்கென்னா கெழவி . “ ஆச்சியின் வார்த்தைகளை மீறி அவளுடைய சந்தோஷம் வெளிப்பட்டது .
“ அதையும் பண்ணிடலாம் . “
பாட்டி உள்ளே போய் விட்டாள் .
நெல் விற்ற பணத்தை முத்தையா எண்ணிப் பார்த்தான் . எட்டாயிரம் இருந்தது .
“ பழநி ! நீ போய் ஆசாரியை வரச் சொல்லிடு . ஆச்சிக்கு பாம்படமும் லட்சுமிக்கு செயினும் செய்யணும் . டவுனுக்குப் போய் தங்கம் வாங்கியாந்திடலாம் . “
தனது ரொம்ப நாளைய ஆசை நிறைவேறப் போகிறது என்ற எண்ணத்தில் ஆச்சி ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் .
“ உங்க அப்பங்கிட்ட சொல்லி சொல்லி சலிச்சுப் போயிட்டேன். அவனைச் சொல்லியும் குத்தமில்லை . வந்த காசு வீட்டு செலவுக்கே சரியாப் போச்சு . மிஞ்சினாத்தானே தங்கத்தில பாம்படமும் ஒட்டியாணமும் . ஏதோ இப்பவாவது நேரம் வந்துச்சே . “
முதையாவிற்கும் சந்தோஷமாக இருந்தது . ஆச்சியின் வெகுநாளைய ஆசையை நிறைவேற்றி வைக்கப் போகும் சந்தோஷம் .
இரண்டு நாட்களும் ஆச்சியின் பேச்சு முழுவதும் தங்கப் பாம்படங்களைப் பற்றிதான் . மூன்றாம் நாள் ஆசாரி பாம்படங்களை காகிதத்தில் பொதிந்து கொண்டு வந்தார் . காகிதத்தைப் பிரித்து பாம்படங்களைக் காட்டியதும் ஆச்சியின் உற்சாகம் உச்சத்தை அடைந்து விட்டது .
“ என்னம்மா மின்னுது பாரேன் ! ஏ அப்பா ! தங்கம் நயம்தான் . என்னமா ஜொலிக்குது ! “
பழைய பித்தளைப் பாம்படங்களை கழற்றி விட்டு ஆச்சியின் காதுகளில் தங்கப் பாம்படங்களை மாட்டி விட்டாள் லட்சுமி . கண்ணாடியைக் கொண்டு வந்து காட்டினாள் . பாட்டி மின்னும் பாம்படங்களை கண்ணாடியில் பார்த்து பூரித்துப் போனாள் . காதுகளையும் பாம்படங்களையும் மாறி மாறி தடவி விட்டுக் கொண்டாள் .



ஆச்சி பக்கத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் போய் தங்கப் பாம்படங்களை காட்டி வரப் போய் விட்டாள் . ஊரிலேயே முதல் தங்கப் பாம்படங்கள் என்ற பெருமையோடு .
அன்று இரவு முத்தையாவும் பழநியும் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் போதே ஆச்சியின் குரல் கேட்டது . கூட இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள் . பக்கத்தில் லட்சுமியும் நின்றாள் .
முத்தையாவைக் கண்டதும் ஆச்சியின் குரலில் சோகமும் , எரிச்சலும் அதிகமாயின .
“ முத்தையா ! கேட்டியாலே அநியாயத்தை . நீ ஆசையா வாங்கிப் போட்ட பாம்படத்தை எந்த சண்டாளப் பாவியோ அவுத்துட்டுப் போயிட்டாம்ல . அம்மன் அவனைச் சும்மா விட மாட்டா . அவன் கை புளுத்துப் போகும் . காலு மடங்கிப் போகும் . “
வடக்குத் தெருவில் இருந்த சொந்தக்காரர்களிடம் பாம்படத்தைக் காட்டுவதற்காக போய் விட்டுத் திரும்பும் போது பனையன் மடம் அருகில் ஆச்சியை யாரோ ஒருவன் வழிமறித்து மிரட்டி பாம்படங்களை கழற்றிக் கொண்டு ஓடி விட்டிருக்கிறான் .
ஆச்சியின் புலம்பல் அதிகமானது .
“ சரி ஆச்சி விடு , போனது போனதுதான் . நல்ல வேளை காதோட சேர்த்து பிய்க்காம விட்டானே . நாளைக்கு நம்ம ஆளுங்களை விட்டுத் தேடச் சொல்லுவோம் . திருட்டுப் பய அகப்படாமலா போயிடப் போறான்?
கட்டிலில் வந்து படுத்தான் முத்தையா . பாம்படம் போனதை விட ஆச்சியின் வருத்தம்தான் முத்தையாவை அதிகமாக பாதித்திருந்தது .
கட்டிலில் படுத்ததும் தூக்கம் வரவில்லை . உள்ளே ஆச்சியின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது . திருடனை பலவிதமாக திட்டிக் கொண்டிருந்தாள் .
முத்தையாவின் எண்ணங்கள் வேறு திசையில் ஓடின . எழுந்து உட்கார்ந்தான் . பக்கத்தில் கீழே பாய் விரித்து சாய்ந்திருந்த பழநியும்  எழுந்து உட்கார்ந்தான் .



“ அண்ணாச்சி ! ஆச்சி பாம்படத்தை திருடினது யாரா இருக்கும் ? “
“ தெரியலடா பழநி ! ஆனா ஒண்ணு கவனிச்சியா . இந்த வருஷம் நல்ல வெளைச்சல் . அதனால நம்ப பொருளாதார நெலைமை ஆச்சிக்குத் தங்கத்துல பாம்படம் செஞ்சு போடற அளவுக்கு உயர்ந்திருக்கு . இந்த வருட வருமானத்தில் அது ஒரு சின்ன செலவுதான் . ஆனா அந்த அரைக்காப் பவுன் பாம்படத்தைத் திருடித்தான் சாப்பிடனும்கற அளவுக்கு நாட்டில சில பேரோட பொருளாதார நிலைமை மோசமா இருக்கு பார்த்தியா ? “
“ அது எப்படி அண்ணாச்சி ? திருடறவன் உடலை வருத்தி உழைக்கச் சோம்பேறித்தனம் பட்டு திமிறிலதான திருடறான் . “
“ திருடறது தப்புதாண்டா பழநி . ஆனா இப்படி ஒரு கிழவியோட அரைக்காப் பவுன் பாம்படத்தை ஒருத்தன் திருடுறான்னா அவனோட சந்தர்ப்ப சூழ்நிலைங்க ரொம்ப மோசமாத்தான் இருக்கணும் . வேற வழியில்லாமத்தான் தப்பு பண்றான்ணு தோணுது . உழைச்சு சாப்பிட வாய்ப்பே கெடைக்காதவனா இருக்கலாம் . இப்படி சின்னத் திருட்டில ஆரம்பிச்சு பெரிய திருட்டுக்குப் போகும் போது வேணும்னா அது அவனோட தப்புங்கலாம் . திமிருங்கலாம் . ஆனா இது ... “
முத்தையா பேச்சைத் தொடர்ந்து சிந்தனையில் ஆழ்ந்து போனான் . ஒரு பெருமூச்சு வெளிவந்தது . ஆச்சியின் குரல்தான் மெளனத்தை கலைத்தது .
“ முத்தையா ! நாளைக்கு அம்மன் கோவில் பூசாரிகிட்ட மைபோட்டுப் பார்க்கணும்ல . “
சற்றுமுன் பழநியிடம் பேசியவை ஞாபகம் வந்தது . ஆச்சியிடம் அதையெல்லாம் சொன்னால் புரியாது . அவளைச் சமாதானப் படுத்த ஒரே ஒரு வழிதான் தோன்றியது .
“ சரி ஆச்சி . பாத்துடுவோம் . அது கெடைச்சதுன்னா பார்ப்போம் .     இல்லாட்டி ஆசாரிகிட்ட சொல்லி புதுசா வேற ஒரு ஜோடி செஞ்சிடுவோம். 
கொஞ்ச நேரத்தில் ஆச்சி தூங்கி விட்டாள் .
----------- -------------- --------------- --------------
அக்டோபர் 06 – 12 , 1989 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளி வந்த எனது சிறுகதை .
----------- ------------- ------------ -----------------
 

சனி, 4 அக்டோபர், 2014

விதை .



                       விதை .                           சிறுகதை . 
 பாக்யா வார இதழ் . அக்டோபர் 19 – 25 , 1990ல் வெளியானது                       
நாலரை மணிக்கு கடைசி மணி அடித்தார்கள் . முத்துசாமி வேக வேகமாக புத்தகங்களை பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே வந்தான். வழக்கமாகவே பள்ளி முடிந்தவுடன் அடிக்கப்படும் கடைசி மணி அவனுக்கு சந்தோஷம் கொடுக்கும் . அன்று வழக்கத்தை விட அதிக சந்தோஷமாக இருந்தது . பள்ளியின் தேசிய சேவை இயக்கத்தில் அவன் உறுப்பினன் . ஒவ்வொரு வாரமும் ஐந்து பேர்களைத் தேர்ந்தெடுத்து , நகரத்தின் ஒரு பகுதியில் உள்ள டிராபிக் போலீஸ்காரரோடு நிற்க வைத்து , போக்குவரத்து விதிகளையும் , போக்குவரத்தைக் கட்டுப் படுத்தும் முறைகளையும் கற்றுக் கொடுப்பது இயக்கத்தின் செயல்களில் ஒன்றாகும். அந்த வாரம் முத்துசாமியும் ஒருவன் .
வகுப்பை விட்டு வெளியே வந்தவன் , பைக்குள் இருந்த பாட்ஜை எடுத்து மாட்டிக் கொண்டான் . அவனுக்கு ஒதுக்கப் பட்டிருந்த இடம் பக்கத்தில்தான் . பள்ளியில் இருந்து பத்து நிமிட நடைதான் . ஐந்து மணிக்குதான் அங்கு இருக்க வேண்டும் . முத்துசாமி நிதானமாக நடந்தான். மனம் ஒருவித உற்சாகத்தில் திளைத்திருந்தது .
சாலைகளில் அங்கங்கே நின்று , போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் போலீஸ்காரர்களை அவன் எப்போதுமே ஒருவித ஆச்சரியத்தோடு பார்ப்பான் . அவர்களது கை அசைவிற்கு பஸ்களும் , கார்களும் , லாரிகளும் நிற்பதும் , போவதும் அவனுக்கு பிரமிப்பை உண்டாக்கும் .
தானும் அதைப் போலவே எல்லா வாகனங்களையும் கட்டுப் படுத்தப் போகிறோம் என்ற எண்ணம் அவன் மனதினுள் பிரமாண்டமான சந்தோஷத்தை உருவாக்கியிருந்தது .

பதினைந்து நிமிட நடையில் அவன் அந்த இடத்தை அடைந்து விட்டான் . அது நான்கு சாலைகள் இணையும் இடம் . நடுவில் சற்று உயரமாக இருந்த வட்ட வடிவமான மேடை . அதன் மீது ஏற சின்ன இரும்பு ஏணி . நடுவில் பெரிய இரும்புக் குடை .
நகரத்தின் அரிமா சங்கம் ஏற்படுத்திக் கொடுத்த அமைப்பு அது . அவ்வப்போது சுத்தம் செய்து வர்ணம் அடித்து பராமரித்து வந்ததால் பளிச்சென்று இருந்தது .
மேடையின் மேல் அந்த போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார் . தெற்குப் புறச் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி வைத்து , மற்ற வாகனங்களைப் போக விட்டுக் கொண்டிருந்தார் .
வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்ததால் , நடைபாதையிலேயே நின்றான் முத்துசாமி . சிறிது நேரத்தில் சாலை ஓய்ந்து விட்டது . வேகமாக சாலையைக் கடந்து மேடையின் அருகில் போய் நின்றான் .
“ என்ன தம்பி ? “ போலீஸ்காரரின் குரல் கரகரவென்றிருந்தது .
அவன் பாட்ஜைக் காண்பித்தான் .
“ ஓஹோ , நீதானா ! வா , வா . ஏணியிலே ஏறி மேல வா . “
அவன் ஏறி மேலே வந்தான் . பையை ஓரமாக வைத்தான் . அதற்குள் இரண்டு புறமும் இருந்து வாகனங்கள் நிறைய வர , போலீஸ்காரர் தன் கையைக் காட்டி போக்குவரத்தை சீராக்க ஆரம்பித்தார்.
இன்னும் சிறிது நேரத்தில் தானும் அதைப் போலச் செய்யப் போகிறோம் என்ற எண்ணம் பிரமிப்பை ஏற்படுத்த , நின்று கொண்டிருந்தான் முத்துசாமி . அந்த இடத்தில் இருந்து சாலைகளையும் , அவற்றில் ஓடும் வாகனங்களையும் பார்ப்பது ஆனந்தமான அனுபவமாக இருந்தது .
“ தம்பி பேரென்ன ? “
“ முத்துசாமி . நல்லசாமி மேல்நிலைப் பள்ளியில ஏழாவது படிக்கிறேன் . “
“ சந்தோஷம் . இன்னும் கொஞ்ச நேரத்தில் டிராபிக் ஹெவியாயிடும் . நான் செய்யற மாதிரியெல்லாம் செய்யணும் . நான் அப்பப்ப சொல்ற விஷயங்களை எல்லாம் கவனமாக கேட்டுக்கணும் . சரியா ? “
வாகனங்கள் அவ்வளவாக இல்லாதபோது போலீஸ்காரர் சாலை விதிகளை அவனுக்கு கற்றுக் கொடுத்தார் . சாலையில் வாகனங்கள் எந்தப் பக்கமாக போக வேண்டும் , எப்படித் திரும்ப வேண்டும் , எப்போது நின்று போக வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொடுத்தார் .
அவ்வப்போது சந்தேகங்கள் வந்தபோது அவன் கேட்ட கேள்விகளுக்கு விரிவாக பதில் கொடுத்தார் . அவன் புரிந்து கொண்டிருக்கிறானா என்று பார்க்க , அவ்வப்போது கேள்விகள் கேட்டார் . அவன் சரியாக பதில் சொன்னதைப் பாராட்டினார் .
இடையிடையே அவர் கைகளை வெவ்வேறு விதமாக ஆட்டி அசைக்கும் போதெல்லாம் , தானும் அதைப் போலவே செய்தான் .
போலீஸ்காரர் சொன்னதைப் போலவே சிறிது நேரத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து விட்டது . அலுவலகங்கள் முடியும் நேரமாதலால் பஸ்களும் , கார்களும் , ஸ்கூட்டர்களும் நான்கு புறங்களில் இருந்தும் விரைந்தன . போலீஸ்காரர் பேசுவதை நிறுத்தி விட்டு சுறுசுறுப்பானார் . அவனும் அவர் செய்வதைப் போலவே செய்து கொண்டிருந்தான் .

போக்குவரத்து சற்று குறைந்த போது , அவர் கையைக் காட்டுவதைக் கவனியாமல் கோட்டைக் கடந்து ஒரு மோட்டார் சைக்கிள் வந்து விட்டது . போலீஸ்காரர் சட்டென்று விஸிலை வாயில் வைத்து ஒலியெழுப்பியதும் , தன் தவறையுணர்ந்து , மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டார் அந்த மனிதர் . கையைக் காட்டி மேடையருகில் அழைக்கப்பட்டதும் மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே மேடையருகில் வந்து நின்றார் . போலீஸ்காரர் அவர் பெயர் , முகவரி எல்லாம் கேட்டு நோட்டில் குறித்துக் கொண்டார் .
“ தெரியாம வந்துட்டேன் சார் . கவனிக்கலே . மன்னிச்சு விட்ருங்க சார் “ அந்த மனிதர் மெல்லிய குரலில் கேட்டார் .
“ எப்படிய்யா விட முடியும் ? இந்தா , இதில ஒரு கையெழுத்துப் போடு . சம்மன் வரும் . கோர்ட்டில வந்து ஃபைன் கட்டிட்டுப் போ . “
அந்த மனிதர் கையெழுத்துப் போட்டு விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய் விட்டார் .
“ எப்படி கேஸ் புக் பண்றதுன்னு பார்த்துட்டியா ? அந்த ஆளு நிற்காமப் போயிருந்தான்னா வண்டி நம்பரைக் குறிச்சுக்கிட்டு கேஸ் புக் பண்ணிடலாம் . “
முத்துசாமியின் மனதில் வருங்காலம் பற்றிய கற்பனைகள் நிறைய உண்டு . டாக்டராக வேண்டும் , வாத்தியாராக வேண்டும் , வக்கீலாக வேண்டும் ... புதிதாக ஒரு ஆசையும் சேர்ந்து கொண்டது . டிராபிக் போலீஸாக வேண்டும் .
அவரது கையசைவுகளினால் எவ்வளவு விபத்துகள் தவிர்க்கப் படுகின்றன ! அது ஒரு பெரிய சமூக சேவை என்று நினைத்துக் கொண்டான் .
ஆறரை மணிக்கு போக்குவரத்து குறைய ஆரம்பித்து விட்டது .
“ சரி தம்பி , இன்னைக்குப் போதும் . இருட்டிடும் . நீ கெளம்பு என்றார் போலீஸ்காரர் .
முத்துசாமிக்கு மனம் கஷ்டமாக இருந்தது . அங்கேயே நின்று கொண்டு இருக்க வேண்டும் போலிருந்தது . மனமில்லாமல் பாட்ஜைக் கழற்றினான் .
“ கெட்டிக்காரனா இருக்கே . சட்னு புரிஞ்சுக்குறே . நாளைக்கும் வந்துடு “ அவரது பாராட்டுகள் உற்சாகத்தை அதிகப் படுத்தின .ஏணி வழியாக இறங்கத் தொடங்கினான் .

அப்போதுதான் அது நிகழ்ந்தது . கிழக்குப் புறச் சாலையில் வந்த வெள்ளை நிறக் கார் ஒன்று சட்டென்று வலது கைப்புறம் திரும்பி வடபுறச் சாலையில் சென்றது .
பார்த்த மாத்திரத்திலேயே அந்தக் கார் சாலை விதிகளை மீறி விட்டது புரிந்தது . கிழக்குப்புறச் சாலையில் இருந்து வடபுறச் சாலைக்கு வர வேண்டுமானால் மேடையைச் சுற்றி வந்து மீண்டும் வடபுறச் சாலையின் இடது கைப் பக்கமாகத்தான் போயிருக்க வேண்டும் .
போலீஸ்காரர் வண்டியை நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்போடு நின்று விட்டான் முத்துசாமி . ஆனால் போலீஸ்காரர் விஸில் அடிக்கவில்லை . அவரும் அதைப் பார்த்தார் . அப்புறம் ஏன் நிறுத்தவில்லை ?
மீண்டும் மேடைக்கு ஏறினான் .
“ ஸார் , அந்தக் கார் சாலை விதிகளை மீறிப் போச்சே , அப்புறம் ஏன் நிறுத்தலை சார் ? நான் நம்பரை நோட் பண்ணிட்டேன் . “
போலீஸ்காரர் லேசாகச் சிரித்தார் .
“ அது யார் கார்னு தம்பிக்குத் தெரியாதா ? நம்ம லோக்கல் எம்.எல். ஏ. காரு . அதை புக் பண்ணா அவரு மேலதிகாரிங்க கிட்டச் சொல்லி என்னை ஒரு வழி பண்ணிருவாரு . எதுக்கு வம்பு ? “ மிக நிதானமாகச் சொன்னார் .
“ சட்டம்னா எல்லோருக்கும் ஒண்ணுதானே சார் ? “ அவன் குரலில் கோபம் தெரிந்தது .
“ அதெல்லாம் உனக்கு இப்ப புரியாது . சரி , நீ கெளம்பு . இருட்டிடும் . “
அவன் கீழே இறங்கினான் . போலீஸ்காரரைப் பற்றியிருந்த நல்ல எண்ணங்களும் இறங்கி விட்டன .

போலீஸ்காரர் நடந்து கொண்ட விதம் அவனுக்குப் புரியவில்லை ; பிடிக்கவும் இல்லை .நாளைக்கு வரக் கூடாது என்று முடிவெடுத்தவாறே நடக்கத் தொடங்கினான் .
விதிகளையும் , கட்டுப்பாடுகளையும் கற்றுக் கொள்ள வந்த அந்த இளைய தலைமுறைக்கு , சட்டங்களை உருவாக்குபவர்களே அவற்றை உடைத்துக் கொண்டிருக்கும் நிலைமையையும் , அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் ஒருவித கையாலாகாத்தனத்தையும் கற்றுக் கொடுத்து விட்டு தன் கடமையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அந்த போலீஸ்காரர் .
நாட்டின் வளர்ச்சியையே பாதித்துக் கொண்டிருக்கும் ஒருவித மனோபாவத்தின் விதை அந்த இளம் நெஞ்சில் ஊன்றப் பட்டு விட்டதை உணரும் பக்குவம் அவருக்குக் கிடையாது .
விதைக்கப் பட்ட விதை முளைத்து அதற்குரிய விஷ விருட்சமாக வளரப் போகின்றதா , அல்லது அந்த விதை அழுகி அழிந்து போய் , வேறு நல்ல விதை ஊன்றப் பட்டு அழகிய மரமாக வளரப் போகின்றதா என்ற கேள்விக்கு காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும் .


--------------------------------------------------------

[ பாக்யா வார இதழ் . அக்டோபர் 19 – 25 , 1990ல் வெளியானது ]        

----------------------------------------------------------