தமாசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமாசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 டிசம்பர், 2014

சும்மா தமாசுக்கு.....- சொர்க்கமும் நரகமும் .


சும்மா தமாசுக்கு.....- சொர்க்கமும் நரகமும் .

         ஒரு அமெரிக்க வழக்கறிஞர் , ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி , ஒரு ரஷ்ய தொழிற்சங்கத் தலைவர் மூவரும் ஒரே நேரத்தில் மரணம் அடைந்தார்கள்.  மூவருமே ஒரே நேரத்தில் வானுலகம் போய்ச் சேர்ந்தார்கள் . அங்கே இரு வாசல்கள் பக்கத்துப் பக்கத்தில் . ஒன்று சொர்க்கத்திற்கானது . மற்றொன்று நரகத்திற்கான வாசல் . இரண்டுக்கும் நடுவில் ஒரு தேவ தூதர் – கையில் ஒரு புத்தகத்தோடு . 
       மூவரும் போய்ச் சேர்ந்த நேரத்தில் அவர்களுக்கு முன்னால் பெரிய வரிசை . இரண்டு வாசல்களுக்கும் ஒரே வரிசைதான் என்பதால் வரிசை மிக நீண்டிருந்தது . தேவதூதர் தன் கையில் இருந்த புத்தகத்தை புரட்டி பார்த்துப் பார்த்து ஒவ்வொருவராக ஏதேனும் ஒரு வாசலுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தார் . ஒரு வழியாக நம்மாள் மூவரும் தேவதூதன் முன்னால் வந்து விட்டார்கள் .
      “ எதை வைத்து வாசலை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் ? “ என்றார் அமெரிக்க வழக்கறிஞர் .
      “ ஒவ்வொருவர் செய்த பாவ புண்ணியங்களின் விபரங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது . அதன் அடிப்படையில் சொர்க்கமும் , நரகமும் தீர்மானிக்கப் படுகிறது “ என்றார் தேவ தூதர் .
             ”இல்லை , உங்களது செயல் பாரபட்சமாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் . “ என்றார் ரஷ்யர் .
     “ ஏன் அப்படி கருதுகிறீர்கள் ? “ தேவதூதர் குழப்பத்துடன் கேட்டார் .
     ”  காத்திருந்த நேரத்தில் நான் சேகரித்த புள்ளி விபரப் படி  99.927 சதவிகித இந்தியர்களை நீங்கள் சொர்க்கத்திற்கு அனுமதித்திருக்கிறீர்கள் . ஆனால் மற்ற நாட்டவர்களைப் பொறுத்தவரை அந்த சதவிகிதம் மிக மிக கம்மியாக உள்ளது . உண்மையில் பார்க்கப் போனால் மற்ற எல்லா நாட்டவர்களுக்கும் சேர்த்து அந்த சதவிகிதம் வெறும் 0.008 தான் “ என்றார் ஜெர்மானிய விஞ்ஞானி .
     “ இதை நாங்கள் பலமாக ஆட்சேபிக்கிறோம் . ஒரு போராட்டம் நடத்தப் போகிறோம் . “ என்று குரலை உயர்த்தினார் ரஷ்யர் .
     “ உங்களது செயல் பாரபட்சமானது . அதற்கான சரியான காரணம் தெரியும் வரை நாங்கள் உள்ளே போக மாட்டோம் . “ அமெரிக்கர் விரலை உயர்த்தி பேசினார் .
     சற்று நேரம் திகைத்துப் போயிருந்த தேவதூதர் மிக மெல்லிய குரலில் பதில் கூறினார் . “ அய்யா , நாங்கள் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கும் அத்தனை இந்தியர்களும் அந்த நாட்டில் சாதாரணப் பிரஜைகளாக இருந்தவர்கள் . பிறந்ததில் இருந்து இறக்கும் வரை நரக வாழ்க்கையே வாழ்ந்து விட்டார்கள் . பாவம் , இங்கு வந்தாவது சொர்க்க வாழ்வை அனுபவிக்கட்டுமே என்று தேவன் இந்த சலுகையை வழங்கியுள்ளார் . அவ்வப்போது நரகத்திற்குள் அனுப்பப்படும் இந்தியர்கள் அந்த நாட்டு அரசியல்வாதிகள் . “
     தேவதூதனின் பதிலைக் கேட்ட மூவரும் மறுபேச்சின்றி அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த வாசலுக்குள் நுழைந்து விட்டனர் .
-----------------------------------------------------------------------        [ முகநூல் பதிவு ]


சனி, 29 நவம்பர், 2014

சும்மா தமாசுக்கு..... ரெட்டை வாசல் .


சும்மா தமாசுக்கு..... ரெட்டை வாசல் .

அது கட்சியின் தலைமை அலுவலகம் . அதில் தலைவருக்கென்று தனி அறை . சகல வசதிகளுடன் உள்ள அந்த பிரமாண்டமான அறையில்தான் தலைவர் தொண்டர்களையும் , கட்சிக்காரர்களையும் சந்திப்பார் . அந்த அறைக்கு இரு வாசல்கள் . இரு கதவுகள் . ஒன்று அகலம் குறைந்தது . இன்னொன்று மிக அகலமானது . இரண்டுமே பக்கத்துப் பக்கத்தில் அமைந்திருக்கும் . அநேகமா அனைவரும் உள்ளே வருவதும் போவதும் அகலம் அதிகமான வாசல் வழியேதான் . அகலம் குறைந்த வாசல் சும்மாவாகவே இருக்கும் . கட்சிக்காரர்களுக்கும் , தொண்டர்களுக்கும் வெகு நாட்களாகவே ஒரு சந்தேகம். எதற்காக இரண்டு வாசல்கள் ? ஒன்று போதாதா ?  ஆனால் தலைவரிடம் கேட்க பயம் . தப்பாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று . தேசீயக் கட்சியின் தலைவர் ஒருவர் முதன் முறையாக தலைவரைப் பார்க்க வந்தார் ஒரு நாள் . அவருக்கும் அந்த சந்தேகம் வந்து விட்டது . ஆளும் தேசீயக் கட்சியைச் சேர்ந்தவராயிற்றே , அதனால் பேச்சு வார்த்தைகள் முடிந்து கிளம்பும் போது தைரியமாக தனது சந்தேகத்தை கேட்டு விட்டார் . தலைவரின் பதில் தயங்காமல் சட்டென்று வந்தது . “ முதல்ல ஒரு வாசல் மட்டும்தான் வச்சு கட்டினேன் . அந்த சின்ன வாசல் . கட்சி ஆரம்பிச்ச புதுசில ஒரு பிரச்சினையும் இல்லை . எல்லோருமே அந்த வாசலைத்தான் பயன்படுத்தினோம் . ஆனால் கட்சி வளர வளர , பாருங்க நம்ம ஆளுங்களாலே அந்த வாசலுக்குள்ள நுழைந்து வர முடியல . அதான் அவங்க அகலத்துக்கேற்ற மாதிரி அகலத்தைக் கூட்டிட்டேன் . சொல்லப் போனா என்னாலயே அந்த சின்ன வாசல் வழியா நுழைய முடியாது . ஆனா இப்பவும் கட்சியோட அடிமட்டத் தொண்டர்கள் அந்த வாசல் வழியாவே வந்திடராங்க.”  தேசீயக் கட்சி தலைவர் கை குவித்து விடை பெற்றுக் கொண்டு அகலம் அதிகமான வாசல் வழியாகத்தான் வெளியே போனார் .
----------------------------------------------------------------------
[ படித்து முடித்ததும் நியூட்டன் ஞாபகமும் , பூனைக்குட்டிகள் ஞாபகமும் வந்தால் அது என் தப்பில்லை . நியூட்டன் மற்றும் அவர் வளர்த்த பூனைக்குட்டிகளின் தவறுதான் . ]
 --------------------------------------------------------------------





புதன், 26 நவம்பர், 2014

சும்மா தமாசுக்கு.....கங்காரு கதை .


சும்மா தமாசுக்கு.....கங்காரு கதை .

புதிதாய் பதவி ஏற்ற ஆஸ்திரேலிய பிரதமருக்கு ஓர் ஆசை வந்தது . உலகில் உள்ள அத்தனை நாட்டு தலைவர்களையும் அழைத்து ஒரு விருந்து கொடுக்க வேண்டும் . அத்தனை நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பினார் . குறிப்பிட்ட நாளில் அத்தனை நாட்டுத் தலைவர்களும் ஆஸ்திரேலியாவில் குவிந்து விட்டனர் . இதுவரை உலகில் எங்குமே நடந்திராத அளவில் மிகச் சிறந்த விருந்தாக அமைந்திருந்தது . அத்தனை பேரின் பாராட்டுகளும் ஆஸ்திரேலிய பிரதமரின் உள்ளத்தை குளிர வைத்துவிட்டது . விருந்தின் முடிவில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார் . தங்களது அன்பால் நானும் ஆஸ்திரேலிய மக்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் . உங்கள் அனைவருக்கும் ஒரு பரிசு தர விரும்புகிறேன் . உங்களது விருப்பத்தை கூறினால் பரிசுகள் இன்னும் சில தின்ங்களில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் . நன்றாக யோசித்து தங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள் . எதுவாக இருந்தாலும் தங்களது பரிசு நிச்சயமாக அளிக்கப்படும் . “ ஒருவர் ஒருவராக தாங்கள் விரும்பும் பொருளைக் கூறக் கூற பிரதமரின் உதவியாளர் குறித்துக் கொண்டார் . நம்ம ஆளு [ இந்திய தலைவர் ] ஒவ்வொருவர் ஆசையையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வந்தார் . கடைசியாக தன் விருப்பத்தை வெளியிட்டார் . “ எனக்கு இரண்டு கங்காருகள் வேண்டும் . ஒன்று இருப்பதிலேயே பெரிய பை உடையதாகவும் இன்னொன்று இருப்பதிலேயே நன்றாக தாவிக் குதிப்பதாகவும் இருக்க வேண்டும் . “ ஆஸ்திரேலிய பிரதமருக்கு ஒரே ஆச்சரியம் . மற்றவர்கள் எல்லாம் விலை உயர்ந்த பரிசுகளை விரும்பும் போது , இவர் மட்டும் இங்கு ஏராளமாக கிடைக்கும் கங்காருவைக் கேட்கிறாரே , காந்தி பிறந்த நாட்டுக்காரர் என்பதனால் மிக எளிமையான பரிசை விரும்புகிறார் போலும் என்று நினைத்துக் கொண்டார் . என்றாலும் நம்மவர் அருகில் சென்று மிக மெல்லிய குரலில் தன் சந்தேகத்தைக் கேட்டு விட்டார் . நம்மவரும் மெல்லிய குரலில் பதில் கூறினார் . “  பெரிய பை உள்ள கங்காரு கட்சி தாவும் சபலத்தில் உள்ள என் கட்சிக்காரர்களை போட்டு அமுக்கி வைப்பதற்கு . நன்றாக தாவக் கூடிய கங்காரு எதிர் கட்சிக் காரர்களுக்கு என் கட்சிக்குத் தாவுவதற்கு பயிற்சி கொடுப்பதற்கு .  சரிந்து விழுந்த ஆஸ்திரேலிய பிரதமரை அவரது உதவியாளர் தாங்கிப் பிடித்துக் கொண்டார் .   
-----------------------------------------------------------------------------------------------------------------------------

[ முகநூலில் பதிவு செய்தது . ]



சனி, 22 நவம்பர், 2014

சும்மா தமாசுக்கு..... நவீன துரோணர் .

இந்திய வில்வித்தை வீரர் ராகுல் பானர்ஜி தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தார் . சென்னைக்கு வெளியே அவ்வளவாக பரபரப்பு இல்லாத ஓரிடத்தின் இயற்கையான சூழ்நிலை அவருக்குப் பிடித்துப் போனது . தினமும் அந்த பாதை வழியே இருபுறமும் தென்பட்ட இயற்கை அழகை ரசித்தவாறே நடக்க ஆரம்பித்தார் . ஒருநாள் அவர் கண்ணில் பட்ட அந்த காட்சி அவரை அப்படியே வியப்பில் மூழ்க வைத்துவிட்டது .
மரங்கள் அடர்ந்த ஓரிடம் . இரு மரங்களுக்கிடையே கனமான வெள்ளைத் திரை கட்டப் பட்டிருந்தது . திரை முழுவதும் வில்வித்தைக்கான வட்டக் குறிகள். ஒவ்வொரு குறியின் நடுமையத்திலும் குறிபார்த்து எய்யப்பட்ட அம்புகள் . ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார் . இத்தனை வருடமாக பயிற்சி எடுக்கும் தனக்கே சாத்தியமாகாத திறமை உடையவர் யாராக இருக்கும் என நினைத்தவாறே சுற்றிலும் பார்த்தார் .
 சற்றுத் தள்ளி ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி மரத்தில் சாய்ந்திருந்த உருவத்தைப் பார்த்தார் . அவரது பக்கத்தில் ஒரு வில்லும் சில அம்புகளும் இருந்தன . அருகில் சென்ற போது ஒரு பிரபல நடிகர் என்பது புரிபட்டது . தமிழ் நடிகர்தான் . ஆனாலும் அவர் படங்கள் நிறைய ஹிந்தியில் டப் செய்யப் பட்டிருந்ததால் பானர்ஜிக்கு அடையாளம் தெரிந்து விட்டது . [ பெயர் வேண்டாமே . வேண்டுமா ? சரி குமுதம் பாணியில் ஒரு க்ளூ . தமிழின் முதல் எழுத்தில் ஆரம்பமாகும் பெயருடையவர் . போதுமா ? ]
கண்களை மூடிச் சாய்ந்து கொண்டிருந்தவரை எழுப்பலாமா என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் கண்களை திறந்து விட்டார் . பானர்ஜி வணக்கம் சொல்லி விட்டு தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நடிகரும் பதில் வணக்கம் சொன்னார் .
“ அய்யா , இந்த அம்புகள்... “
நடிகர் இலேசான புன்னகையுடன் “ ஆமாம் நான் எய்ததுதான் “ என்றார் .
இவ்வளவு திறமை உள்ள நீங்கள் முயற்சி செய்தால் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்று விடலாமே . “
நடிகர் புன்னகைத்தார் உதடுகளை விரிக்காமல் . “ எனது ஆர்வம் எல்லாம் சினிமாதான் .அதிலேயே எனக்கு மனத்திருப்தி , பணம் , புகழ் எல்லாமே கிடைக்கும்போது வேறு எதிலும் எனக்கு ஆசை இல்லை .” 
சரி அய்யா , எனக்கு ஒரு மாதம் பயிற்சி கொடுக்க முடியுமா ? உங்களிடம் பயிற்சி எடுத்தால் நிச்சயமாக என்னால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியும் என்று தோன்றுகிறது . ”  என்றார் பானர்ஜி .
“ எனது பிஸி ஷெட்யூலில் அதற்கெல்லாம் நேரம் கிடைக்காது . “
“ அப்படியானால் தயவு செய்து எப்படி இவ்வளவு குறி பார்த்து அம்பு எய்வது என்று சில டிப்ஸாவது தர முடியுமா ? “ பானர்ஜி கெஞ்சுவது போலக் கேட்டார் .
சாய்ந்திருந்த நடிகர் நிமிராமலே சொன்னார் . “ அது வெகு சுலபம் . முதலில் அம்பை எய்து விட வேண்டும் . பின் அம்பைச் சுற்றி வட்டங்களை வரைந்து விட வேண்டியதுதான் . “  அவருக்கு சற்றுத் தள்ளி ஒரு காலி பெயிண்ட் டப்பா உருண்டு கிடந்தது . மயங்கி விழப்போன பானர்ஜி சமாளித்துக் கொண்டு நடையைக் கட்டினார் .

[ முகநூலில் பதிவு செய்தது ]



வியாழன், 20 நவம்பர், 2014

சும்மா தமாசுக்கு. - சட்டை .

சும்மா தமாசுக்கு . - சட்டை 

அவர் பிரபலமான தேசீயத் தலைவர் .  குஜராத்தைச் சேர்ந்தவர் . தீபாவளிக்கு அவருக்கு பிடித்த ஒரு துணி வாங்கினார் . அந்த துணி வகையில் அதுதான் கடைசி இருப்பு . தீபாவளி நேர நெருக்கடியில் பின்னால் தைத்துக் கொள்ளலாம் என்று வைத்து விட்டார் . தீபாவளி முடிந்ததும் அவருடைய ஆஸ்தான தையற்காரரிடம் சென்றார் . துணியை அளந்து பார்த்துவிட்டு , “ அய்யா , துணி உங்களுக்குப் பற்றாதுஎன்று கூறி விட்டார் . தலவருக்கோ வருத்தம் . பிடித்தமான துணியில் சட்டை தைக்க முடியாமல் போய் விட்டதே என்று . எதற்கும் இருக்கட்டும் என்று வேறு சில தையற்காரர்களைப் பார்த்தார் . எல்லோரும் அதையேதான் சொன்னார்கள் . துணி உங்களுக்குப் பற்றாது . சில தினங்களுக்குப் பிறகு மும்பைக்குப் போன போது துணியை கூடவே எடுத்துச் சென்றார் . அங்குள்ள பிரபல தையற்காரர்களும் துணி பற்றாது என்று சொல்லிவிட தலைவர் மனம் உடைந்து போனார் . அடுத்த வாரம் ஹரியானா பயணம் . அங்கே உள்ள தையற்காரர்களிடம் இருந்தும் அதே பதில்தான் . தலைவர் சோகமாகி விட்டார் . மனதிற்குப் பிடித்த துணியில் சட்டை தைத்துப் போட முடிய வில்லையே என்று . எனினும் மனம் தளரவில்லை . ஒரு மாதம் கழித்து சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலை . விடாமல் துணியையும் எடுத்துச் சென்றார் . சென்னையின் பிரபல தையற்கலைஞரைச் சந்தித்து துணியை கொடுத்தார் . சென்னை தையற்காரர் அந்தத் துணியில் அழகான சட்டை ஒன்றை தைத்துக் கொடுத்து விட்டார் . கச்சிதமாகப் பொருந்தியிருந்த அந்த சட்டையைப் பார்த்ததும் தலைவருக்கு ஒரே ஆச்சரியம் . குஜராத்திலும் , மகாராஷ்டிராவிலும் , ஹரியானாவிலும் பற்றாத துணி இங்கு எப்படி எனக்கு சரியாக இருக்கிறது!  “ என வியந்து போனார் . சென்னை தையற்காரர் அமைதியாகச் சொன்னார் : “ அங்கு எல்லாம் நீங்க பெரிய ஆளாக இருக்கலாம் . ஆனால் இங்கு அப்படி இல்லை . “           


 [  முகநூலில் பதிவு செய்தது  ]