அருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 செப்டம்பர், 2014


அருவி / அக்டோபர் – டிசம்பர் 2013 / ஆண்டு மலரில் வெளியான ஹைக்கூ கவிதைகள் . 





கல் எறியப்பட்டது
காய்ந்த குளத்தில்
இரையானது தவளை .

வானத்தில் மீன்கள்
குளத்தில் நட்சத்திரங்கள்
இடமாற்றம் மனதில் .

கழிந்து போன கணங்கள்
அத்தனையும்
காகிதங்களோடு தான் .

ஐந்தோடு முடிந்தது
கண்களில் நட்சத்திரம்
மூச்செங்கும் கந்தகம் .

ஏறுவது கடினம்
இறங்குவது சுலபம்
நின்றது அடிவாரத்தில் .


[ அருவி / அக்டோபர் – டிசம்பர் 2013 / ஆண்டு மலர் ]

வியாழன், 18 செப்டம்பர், 2014


அருவி இதழ் 20 ஹைக்கூ சிறப்பிதழில் வெளியானவை .

நிறைய பொம்மைகள்
நிறைய தின்பண்டங்கள்
நிற்பது அம்மாவின் முத்தம்தான் .

எப்போதும் படபடப்பு
சன்னலருகில்
வண்ணத்துப்பூச்சி .

தொலைவில் இடி
பார்வையில் மின்னல்
காலடியில் ஈரம் .

காற்று இருக்கிறது
தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்
அடுத்தவர்கள் தானியத்தை .

வழியெங்கும் பூக்கள்
விதவையின்
இறுதி ஊர்வலம் .

நிலம் கரைந்து
பகை மறந்து விட்டது
வழக்கு முடியவில்லை .

[ அருவி இதழ் 20 ஜனவரி – மார்ச் 2014 ]



செவ்வாய், 16 செப்டம்பர், 2014



அருவி இதழ் 21 , 22 ஏப்ரல் - செப்டம்பர் 2014 ல் வெளியான என் கவிதை .


எழுதப் படும் எல்லா வரிகளும்
ஏற்கனவே எழுதப்பட்டு விட்டதாகவே
இருக்கின்றன .

யாரால்... எப்போது ... எங்கே ...
எதுவும் தெரியவில்லை .

எனினும்
எழுதப்பட்டு விட்டன என்றே
உணரத் தோன்றுகிறது .

வாழ்க்கையும் அப்படியேதான்
எத்தனை விதமாக வாழ முயற்சித்தும்
ஏற்கனவே யாராலோ
எப்போதோ
வாழப்பட்டு விட்டதாகத்தான்
தோன்றுகிறது .

அதனால்தான்
வாழ்க்கையும் கவிதையும்
அதனதன் போக்கில்
இயங்கிக் கொண்டே இருக்கின்றன .

[ நந்தலாலா இணைய இதழ் – 017   வைகாசி – 2014  இதழிலும் வெளியாகி உள்ளது ]

நன்றி : அருவி மற்றும் நந்தலாலா .