இனிய உதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிய உதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஜனவரி, 2015

வெற்று வெட்டு .


வெற்று வெட்டு .

வெட்டுதல்கள் நடை பெற்றுக்
கொண்டேதான் இருக்கின்றன .
அவ்வப்போது நானும் வெட்டுவதுண்டு
நகங்களை
அளவுக்கு மீறி வளர்ந்ததினால் ;
தினமும் மனைவி வெட்டுகின்றாள்
விதவிதமான காய்கறிகளை
உணவுக்காக ;
நேஷனல் சலூன் நயினார்
வெட்டிக் கொண்டே இருக்கிறார்
தலை மயிர்களை .
வீதி வீதியாகக் கூவித் திரியும்
வீரராகவன்
ஏதேனும் ஒரு வீட்டு மரமேறி
வெட்டித் தள்ளுகிறார்
தேங்காய்க் குலைகளை .
நூற்றுக் கணக்கில் வெட்டித்
தள்ளப் படுகின்றன
ஆடுகளும் கோழிகளும்
அம்மன் கோயில் கொடையன்று .
ஒட்டகங்கள் கூட வெட்டுப் படுகின்றன
குர்பாணி நோக்கத்தோடு .
ஒவ்வொரு வெட்டுக்கு பின்னும்
எதோ ஒரு காரணமும்
எதோ ஒரு தேவையும்
இருக்கத்தான் செய்கின்றது .
ஆனால்
சில சமயங்களில்
மனிதர்கள் ஒருவரை யொருவர்
வெட்டிக் கொள்(ல்)வது
ஏன் என்றுதான் புரியவேயில்லை
எத்தனை யோசித்தும் .  


[ இனிய உதயம் ஜனவரி 2015 ]

புதன், 24 செப்டம்பர், 2014

சற்றே ....

வழியும் வியர்வை துடைத்து 
வரிசையில் நில்
அடுத்தவன் மூச்சை சுவாசித்து 
தலைவனின் படம் பார்
மைக்கேல்ஜாக்சன் அலறல்களுக்கு 
கை கால் உதறு
பச்சை சுரிதாரை பார்வையில் நிறுத்து
தவறென்று தெரிந்தும் 
மனதால் பிறன் மனை விழை
ஸ்டாரும் சன்னும்
இன்னும் பலவும் 
இடை விடாது ரசி
வேலைக்காக அலைந்து திரி
வெறுப்பில் கல்லெறி .
பாட்டிலைத் திறந்து குடி
மேடைப் பேச்சுகளில் வாய் பிளந்து 
கை தட்டு
யாருக்கேனும் வாக்களி
அன்புக்குரிய தலைவனின் 
பிறந்த நாளுக்கு சுவரொட்டி ஒட்டு
பிடிக்காதவன் முகத்தில் சாணியடி
எல்லாமும் செய் 
என் தலைமுறையே !
அத்தோடு 
சக மனிதனை நேசிக்கவும் 
கற்றுக் கொள் 
சற்றே ....


[ இனிய உதயம் ஆகஸ்ட் 2014 ]

திங்கள், 15 செப்டம்பர், 2014


சப்தங்களில் கரைந்த குரல் .

அம்மன் கோவில் கொடைக்காக
பழையனூர் நீலி வில்லுப் பாட்டு .
பெருமாள் கோவிலில் புதிதாகப் பொருத்திய
ஒலி பெருக்கியில்  உருகி வழியும்
சுப்ரபாதம் .
கர்த்தரை காட்ட உறுதியளிக்கும்
சகோதரரின் உணர்ச்சி உரை .
அல்லாவைத் தொழ பள்ளிவாசலில்
அடிக்குரல் அழைப்பு .
வாக்குக்காக வாக்குறுதிகளை விசிறும்
துண்டணிந்த தலைவர்களின்
நீட்டிய முழக்கங்கள் .
நட்சத்திர நடிகர் , நடிகைக்காக
உயிரளிக்கத் துடிக்கும் கோஷங்கள் .
கூடுதல் சம்பளத்துக்காக கூக்குரலிடும்
தோழர்களின் உரிமை கோரல்கள் .
வீடுகள் தோறும்
முடிவே இல்லாத தொடர்களில்
முடியவே முடியாத அழுகைச் சப்தங்கள் .
இல்லையெனில்
சிக்ஸர்களைத் தொடரும் ஆரவாரங்கள் .
பண்பலை வரிசையில்
இரவும் பகலும் சங்கீத கலக்கல்கள் .
இத்தனைக்கும் மத்தியில்
தெருவோரக் கிழவனின் பசிக் குரல்
யார் காதிலும் விழாமல்
இறந்து போனான் கிழவன்
போன வாரம் .

[ இனிய உதயம் ஜீன் 2014 ]

 நன்றி : இனிய உதயம் .