கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 நவம்பர், 2015

வாழ்க்கைச் சதுரங்கம் .


வாழ்க்கைச் சதுரங்கம் .
அவரவர் காய்களை
அவரவர்கள்
நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்
மற்றவர் காய்களை வீழ்த்துவதற்காக .

மண்ணாசைக்குக் கோட்டைகளும்
பெண்ணாசைக்கு எதிரியின் ராணியும்
பொன்னாசைக்கென்று தனியே
காய்களில்லையென்பதால்
ஆடுபவர் மனதில் மட்டும் .

நகர்த்துதல்கள் மட்டுமே
நாமாகச் செய்வது
கட்டங்களும் காய்களும்
ஏற்கனவே படைக்கப் பட்டவைதான் .

வெற்றியோ தோல்வியோ
முற்றுப் பெறுவதில்லை ஆட்டம்
ஆடி அடங்கும் வரை .

------------------------------------------------------
[ அகல் மின்னிதழ் நவம்பர் 2015 தீபாவளி மலர் - 1 ] 

திங்கள், 2 நவம்பர், 2015

நிகழ் ...


நிகழ் ...

தொலைக்காட்சி  சமையல் குறிப்புகளை
உன்னிப்பாய் கவனிக்கிறாள் அவள்
கடைச் சாப்பாடு வாங்கப் போயிருக்கும்
கணவனுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் .

[ ஹெல்த் கேர் ஆகஸ்ட் 2015 ]

வெள்ளி, 30 அக்டோபர், 2015

அவனும் நானும் .


அவனும் நானும் .

எதிரில் வந்தவனுக்கு
என் வயதுதானிருக்கும்
யாரென்றேன் .
உன்னைத் தெரிந்திருந்தால்
என்னையும் தெரிந்திருக்குமென்றான் .
எங்கேயோ கேட்டதாக
இருக்கிறதேயென்றேன் .
புதிர் வேண்டாம் புரியும்படிச் சொல்லென்றேன் .
உற்றுக் கவனி
உன்னுள் என்னைக் காணலாம் .
என்னைக் கண்டுவிட்டால்
உன்னையும் நீ கண்டு கொள்ளலாமென்றான் .
உணர்ந்து காண்பதற்குள்
உருவமே இல்லாதவனாகி விட்டான் .
திரும்பிப் பார்க்கையில்
என்னையும் காணவில்லை .
என்னையோ அல்லது அவனையோ
யாரேனும் காண நேர்ந்தால்
சொல்லுங்கள் கட்டாயம்
என்னிடமோ அல்லது அவனிடமோ .

[ புதுப்புனல் ஜூலை – ஆகஸ்ட் 2015 ]

வியாழன், 29 அக்டோபர், 2015

கனவுகளையும் .

கனவுகளையும் .....


அகப்படலாம்
ஏதேனும் இரையென்ற
ஏக்கத்துடன்
காத்திருக்கிறது சிலந்தி
தன் பின்னலுக்குள் .
எதிர்பாராமல்
எதிர்ப்பட்டக் குச்சியொன்று
கலைத்து விட்டது
சிலந்தியின் பின்னல்களோடு

அதன் இரை குறித்த கனவுகளையும் . 


[ புதுப்புனல் ஜீன் 2015 ]

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பாவம் .





வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது
பருந்தொன்று வெகுநேரமாய்
பாவம் இரையாகப்
போவதும் தன் இனம்தானென்று

உணரும் திறனின்றி .



[ புதுப்புனல் ஜீன் 2015 ]

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கூடவே....


கூடவே...

விதைத்ததே விளையும்
தவறாய் புரிந்து கொண்டு
விதைப்பதாய் நினைத்து
புதைத்துக் கொண்டிருக்கிறோம்
அன்பையும்
உண்மையையும்

கூடவே நேர்மையையும் .



[ புதுப்புனல் ஜீன் 2015 ]

புதன், 21 அக்டோபர், 2015

வாழப் பழகிக் கொள்கிறோம் .


வாழப் பழகிக் கொள்கிறோம் .


துளி இரத்தம் உறிஞ்சும்
சிறு கொசுக்களை
புகைபோட்டு விரட்டி விடுகிறோம்
அல்லது
காற்றில் கலக்கும்
வேதியியல் காரணி வழி
கலைத்து விடுகிறோம்
அல்லது
மட்டையால் மடக்கிப்
பிடித்தெரித்து விடுகிறோம்
சமயங்களில்
விடாது துரத்தி
வெறுங்கையாலேயே
நசுக்கி விடுகிறோம்
எனினும் மொத்த வாழ்வையும்
உறிஞ்சிக் கொண்டிருக்கும்
எத்தனையோ
விஷப் பூச்சிகளை
ஏதும் பண்ண இயலா
கையாலாகாத் தனத்தோடு

வாழப் பழகிக் கொள்கிறோம் .




[ புதுப்புனல் ஜீன் 2015 ]

வியாழன், 15 அக்டோபர், 2015

காணாமல் போகலாம் .


காணாமல் போகலாம் .

நேற்றைய கவிதையை
தேடியலைகையில்
எதிர்ப்பட்டது
இன்றைய கவிதை .
அகப்பட்ட கவிதையை
கட்டுடைத்துப் பார்க்கையில்
எஞ்சியது
கொஞ்சம் வார்த்தைகளே
என்றுணர்ந்த கணத்தில்தான்
தோன்றியது
காணாமல் போகலாம்

நாளையக் கவிதையுமென்று . 

 [ புதுப்புனல் ஜீன் 2015 ]

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கேள்விகளும் பதில்களும் .


கேள்விகளும் பதில்களும் .

கேட்டிருந்திருக்கலாம் அந்தக் கேள்விகளை
எதிர்ப்பட்ட  யாரேனும் ஒருவரிடம் .
சொல்லியிருந்திருக்கலாம் அந்தப் பதில்களை .
கேட்கப்படாத கேள்விகளும்
அளிக்கப்படாத பதில்களும்
சுற்றிச்சுற்றி வருகின்றன  மனதிற்குள் .
கேட்டுவிடலாம் அல்லது  சொல்லப்படலாம்
என்றேனும் ஒருநாள்  யாரேனும் ஒருவரிடம்
என்ற அதீத நம்பிக்கைகளோடு .


                              [ தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]

வியாழன், 8 அக்டோபர், 2015

வரி அல்லது வலி ....


வரி அல்லது வலி ....


இந்தக் கவிதை குறித்த
ஓர் உண்மையை
இப்போதே கூறிவிடுவது
உத்தமமெனத் தோன்றுகிறது .
இந்தக் கவிதையின்
ஆரம்பவரிகள் மட்டுமே
கவிஞனுக்குரியவை
தொடரப் போகும் வரிகளில்
சில வரிகளோ
இல்லை அத்தனை வரிகளுமோ
உங்களில் சிலரது அல்லது பலரது
வரிகளாக இருக்கக்கூடும்

அல்லது வலிகளாகவும் இருக்கலாம் .


[ புதுப்புனல் ஜீன் 2015 ]

புதன், 7 அக்டோபர், 2015

பயணம் .



பயணம் .

பாய்மரப் படகில்
காற்றின் திசையில் பயணம் .
பயணக் களைப்பில்
மனம் தேடியது
நிலம் தெரியாதாவென்று
கண்கள் சோர்ந்து போகும் வரை .
தேடலின் முடிவில்தான்
தெரிந்தது
இத்தனை நாளாய்
படகு பயணித்ததே

தரையில்தான் என்று .

[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]

செவ்வாய், 6 அக்டோபர், 2015

கவிஞனின் மொழி .


கவிஞனின் மொழி .  

கவிஞனின் மனதிலிருந்து
கவிஞனின் மொழி வழி
கரைசேரும் கவிதையையுணர
தேவைப்படலாம் வாசிப்பவனுக்கும்
கவிஞனின் மனம்
தெரிந்திருக்கவும் வேண்டும்

கவிஞனின் மொழி .  


 [ புதுப்புனல் மே 2015 ]

திங்கள், 5 அக்டோபர், 2015

பகலின் கனவுகள் .


பகலின் கனவுகள் .


இரவுகள்

எப்போது விடியுமெனத்

தெரியாது

கனவு கண்டுகொண்டிருக்கின்றன

சில பகல்பொழுதுகள் .


[ புதுப்புனல் மே 2015 ]

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

நாங்களிருக்கிறோம் .


நாங்களிருக்கிறோம்

நாளைக்கென்று ஏதுமில்லை
கவிதைகள் என்னிடம்
எனினும் கவலைகள்
ஆறுதல் கூறுகின்றன
நாங்களிருக்கிறோம்

கவலைப் படாதேயென்று . 

 [ புதுப்புனல் ஏப்ரல் 2015 ]

சனி, 3 அக்டோபர், 2015

மிதக்கும் கவிதை .




மிதக்கும் கவிதை .

கைகளும்
காகிதங்களும்
காத்திருக்கின்றன .
தலை வழியே இறங்குவதா
அல்லது
நெஞ்சிற்குள்
சென்று வருவதாவெனப்
புரியாது
அந்தரத்தில் இன்னும்
மிதந்து கொண்டிருக்கிறது

கவிதையொன்று .


[ புதுப்புனல் மே 2015 ]

வெள்ளி, 2 அக்டோபர், 2015

கொஞ்ச நம்பிக்கை .


கொஞ்ச நம்பிக்கை .

எல்லோரையும் தெரிந்துதான் இருக்கிறது
ஆயினும்
எல்லாமும் தேவைப் படுகிறதென்பதால்
தேர்வு செய்யப் படுகின்றன
உறவுகளும் , நட்புகளும் – கடவுள்களும் கூட
அவ்வப்போதைய தேவைக்கேற்றவாறு .
எனினும்
எஞ்சியிருக்கிறது கொஞ்ச நம்பிக்கை
என்றேனும் ஒருநாள்
அணைத்துக் கொள்ளலாம்

அனைத்தையும் ஒரு சேரவென்று .

[ புதுப்புனல் ஏப்ரல் 2015 ]

வியாழன், 1 அக்டோபர், 2015

அகல மறுப்பவை ....


அகல மறுப்பவை ....

மலையில் இருந்து இறங்கிய போது
வளைவருகில்
கீழே கண்ட பச்சைப் புல்வெளி .
முன்னிரவு நேரத்தில்
பாலத்துச் சுவரில் அமர்ந்திருந்த போது
தொட்டுச் சென்ற தென்றல் காற்று .

அழைக்காமலே
அருகில் வந்து படபடத்த பட்டாம்பூச்சியின்
வர்ண இறைப்பு .

துருவேறிய ஜன்னல் கம்பிகளுக்கு
வெளியே சிரித்த
சிவப்புச் செம்பருத்தி .

நிலாவற்ற கரு வானத்தில்
இறைத்திருந்த நட்சத்திரங்கள் .
சாளரங்களை மூடிய பின்னும்
காதுகளை வருடிய தூரத்து இசை
காரணமே இல்லாமல்
தொலைந்து போன நட்பு .

மறந்து போன இன்னும் சில...
இனி வரலாம் மேலும் பல ...

[ காக்கைச் சிறகினிலே “  -  ஆகஸ்ட் 2015 ]

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

அவனும் நானும் .


அவனும் நானும் .
எதிரில் வந்தவனுக்கு
என் வயதுதானிருக்கும்
யாரென்றேன் .
உன்னைத் தெரிந்திருந்தால்
என்னையும் தெரிந்திருக்குமென்றான் .
எங்கேயோ கேட்டதாக
இருக்கிறதேயென்றேன் .
புதிர் வேண்டாம் புரியும்படிச் சொல்லென்றேன் .
உற்றுக் கவனி
உன்னுள் என்னைக் காணலாம் .
என்னைக் கண்டுவிட்டால்
உன்னையும் நீ கண்டு கொள்ளலாமென்றான் .
உணர்ந்து காண்பதற்குள்
உருவமே இல்லாதவனாகி விட்டான் .
திரும்பிப் பார்க்கையில்
என்னையும் காணவில்லை .
என்னையோ அல்லது அவனையோ
யாரேனும் காண நேர்ந்தால்
சொல்லுங்கள் கட்டாயம்
என்னிடமோ அல்லது அவனிடமோ .

[ புதுப்புனல் ஜூலை – ஆகஸ்ட் 2015 ]

மக்குபவையும் , மக்காதவையும் .


மக்குபவையும் , மக்காதவையும் .

ஆடிக் காற்றில்
மஞ்சனத்தியும் , வேம்பும்
உதறிய பூக்களும் , இலைகளும்
நிரம்பிக் கிடந்த தோட்டத்தைக்
கூட்டித் தள்ளி மாளவில்லை .

வேலைக்காரப் பெண்மணி
சலித்துக் கொண்டதால்
வெட்டியாகி விட்டது
அடிக்கட்டையை மட்டும் விட்டுவிட்டு
மழை வரும்போது
மறுபிறப்பு எடுத்துக் கொள்ளுமென
மனதைச் சமாதானப்படுத்தி .

தோட்டத்துக் குப்பைகளைக் குறைத்தாயிற்று
காலியாகக் கிடக்கும் பக்கத்து மனையில்
தினசரி வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளை
வசதியாக மறந்தவாறு
ஏனென இதுவரை யாரும் கேட்காததால் . 

[ காக்கைச் சிறகினிலே “  -  ஆகஸ்ட் 2015 ]