கணையாழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணையாழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 செப்டம்பர், 2015

நம்பிக்கை .


நம்பிக்கை .

456
எட்டாவது குறுக்குத் தெரு
குறிஞ்சி நகர்...
பலமுறை போய் வந்த முகவரிதான் .
வேகாத வெயிலில்
அலைந்து திரிகிறேன் .
திசைகள் மாறாவிடினும்
வீடு வந்து சேர வில்லை இன்னும் .
கேட்கப்படும் ஒவ்வொருவரிடமிருந்தும்
வெளிப்படுகின்றன
வெவ்வேறு விதமான வழிகாட்டுதல்கள் .
பசி மறந்து நடக்கின்றேன்
வழி தவறி விடக்கூடாதேயென்ற
பதட்டத்துடன் .
தெரிந்த அடையாளங்கள்
தேய்ந்து போயிருந்தன .
காலத்தின் ஓட்டத்தில்
நகரம் மாறித்தான் இருக்கிறது .
கதவிலக்கம் மாறியிருக்கலாம் ;
தெருப் பெயரும் மாறியிருக்கலாம் ;
குறிஞ்சி நகர் கூட வேறொரு
நகராக மாறியிருக்கலாம் .
தளராது நடக்கிறேன்
நண்பன் மாறியிருக்க மாட்டான்
நட்பும் மாறியிருக்காதென்ற
அசைக்க முடியா நம்பிக்கையோடு .

[ கணையாழி பிப்ரவரி 2015 ]


திங்கள், 5 ஜனவரி, 2015

தவிர்க்க இயலாமல் ....

தவிர்க்க இயலாமல் ....

நிலா மறைந்திருந்த ,
நட்சத்திரங்கள் ஒளிந்திருந்த ,
மேகங்கள் காணாமல் போயிருந்த
ஒரு இரவு நேர 
வானத்தால்தான் நெய்திருந்தேன்
அந்தக் கவிதையை .
எனினும்
பிரித்துப் பார்க்கையில்
விட்டுப் போயிருந்த அத்தனையும்
ஒட்டிக் கொண்டிருந்தன
அழகாய் அதனதன் இடத்தில் .


[ கணையாழி ஜனவரி 2015 ]

வியாழன், 30 அக்டோபர், 2014

தீர்வு

தீர்வு

உளிகளின் மன உளைச்சலால்
சிதைந்து போன
சிற்பங்களின் சிதறல்கள் .
தூரிகைகளின் கோபத்தால்
கலைந்து போன
ஓவியத்தின் கோடுகள் .
வார்த்தைகளின் குழப்பத்தால்
பாதியில் நின்று போன
கவிதை வரிகள் .
நரம்புகள் முறுக்கிக் கொண்டதால்
ஸ்வரம் தவறிய சங்கீதங்கள் .
தோலில் துளை விழுந்ததால்
தடுமாறிய தாளங்கள் .
எல்லாவற்றையும் வாரி அள்ளி
தெருவோரத் தொட்டியில்
போட்ட பின்பு
மேலும் அதிகமாக ஒளிரத்
தொடங்கியது
வானத்து நிலா .

[ கணையாழி மே 2014 ]


செவ்வாய், 30 செப்டம்பர், 2014

நேற்றும் இன்றும் .

நேற்றும் இன்றும் .

உரசி ஓசையெழுப்பும்
மூங்கில் காடுகளில்
சாம்பல் உதிர்க்கும்
சிகரெட் நுனிகள் .
கவிதைக்காகக் காத்திருந்த
மனத்தில் கலைந்த சொற்றொடர்கள்
கோடுகள் விரவி ஓவியம் மலரும்
கேன்வாஸின் கிழிசல் .
மறையும் நேரத்தில்
ஆதித்தியன் கோபம்
இளங்காற்றின் இறுகிய
தழுவலில் இளகிய விந்தை .
ஜன்னலிற்கு வெளியே
குதிக்கும் குரல்கள்
கிளைகளின் முறிவால்
உதிர்ந்த இலைகள் .
கால இடைவெளி
பிசகிய கணக்கால்
சிட்டுக் குருவிகள்
தனித்தனிக் கூட்டில் .
வெள்ளைச் சுவர்களில்
சிலந்தியின் பின்னல்கள்
இரையாக்க் காத்திருக்கும்
இறகிழந்த பூச்சிகள் .
தொடுதலின் விளைவால்
தொலைந்திருந்த உணர்வுகள்
அறுந்த தந்தியிலும்
அற்புத நாதங்கள் .
ஒவ்வொன்றினுள்ளும் ஒவ்வொரு குறைகள்
ஒவ்வாத நிலையிலும் பிணையும்
எலும்புகள்
சிறகுகள் முறிந்த பின்னும்
மிதக்கும் குதிரைகள் .
வட்டமிட்டு வட்டமிட்டும்
இரை கிடைக்காக் கழுகின் சோகம்
ஒரு புறாவின் அலகால்
விலகியது யாவும் .

[ கணையாழி நவம்பர் 2013 ]


வியாழன், 25 செப்டம்பர், 2014


கணையாழியில் வெளியான எனது இரண்டாவது கவிதை .


முற்றுப் பெறாத கவிதையும் முழுமையான முதல் வரியும்

எழுதி எழுதி
திருத்தப்பட்ட கவிதையின்
சிதிலமான வரிகள்
கண் சிமிட்டும் குண்டு பல்பின்
மெலிந்த வெளிச்சத்தில்
என்னைத் தூங்காமல் அடிக்கின்றன .
எத்தனை தடவை திருத்தி எழுதினும்
முடிக்கப் படாமலேயே
காற்றில் பரிதவிக்கின்றன .
சாளரங்கள் மூடப்பட்ட பின்னும்
ஏனோ முற்றுப் பெற மறுக்கின்றன .
வலிக்கும் மனதோடு
முதல் வரியில்
பார்வை பதியும் போது
முழுமை தெரிகின்றது
எனினும்
மற்ற வரிகளை
முற்றிலுமாக அழிக்க
மனம் வராததால்
முழுமை அடையாமல்
வெகு நாளாய்
என் முன்னே படபடக்கின்றது
என் கவிதையும்
என்னைப் போலவே .

[ கணையாழி நவம்பர் 1994 ]

திங்கள், 15 செப்டம்பர், 2014




அறுபடுதல்

புகைக் குழாயின்
அடியில் தங்கிய துகள்களாய்
இலேசாக மயங்கிய நினைவுகளை
நேற்றைய தினத்தின் வாய்கள்
விழுங்கி அரைத்த கணத்தில்
எதுவோ ஒன்று விட்டகல மறுத்து
ஒன்றை ஒன்றில் இருந்து பிரிக்க
முயற்சித்துத் தோல்வியுற்றதின்
அடையாளமாய்
கட்டங்கள் உதிர்ந்த நாள்காட்டியில்
தேதிகளும் கிழமைகளும் வெவ்வேறாக
விலகிச் சென்று ,
காலத்தின் பரிமாணம்
வர்ணப் பிழம்புகளான
ஒரு பின்னிரவு நேரத்தில்
அறைமூலையில் துரத்தப்பட்ட
பட்டாம்பூச்சியின் பாதிப்பில்
வலை அறுபட இருந்தபோது
கையில் ஒட்டிய புற அழுக்கால்
மனம் சுத்தமாயிற்று .
பட்டாம் பூச்சியின் படபடப்பால்
சந்தோஷமுமாயிற்று .


[ கணையாழி ஜனவரி 2014 ] 

நன்றி : கணையாழி

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014




அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு .

நேற்று நடந்தது போலிருக்கிறது எனினும் 
முப்பது வருடங்கள் ஓடி விட்டன .
மீண்டும் அது போல ஒரு நிகழ்வுக்காக 
காத்திருக்கிறேனா   தெரிய வில்லை
நிகழலாம் ;  நிகழாமலும் போகலாம்
நிச்சயமாக சொல்ல இயலாது .
மீண்டும் நிகழ்ந்தால் மகிழ்வேனா ?
நிகழாமல் போனால் வருந்துவேனா ?
தெரியாது .
நிகழாமல் போயிருந்தால் 
என்னவாயிருக்கும் ?
நிகழ்ந்ததினால் என்னவாயிற்று ?
எதற்கும் தெளிவான பதிலில்லை
அந்த நிகழ்வு என்னவென்று 
நீங்கள் கேட்கவும் போவதில்லை .
நான் சொல்லவும் போவதில்லை
உங்களுக்கும் நேர்ந்திருக்கலாம் 
அதே போன்ற நிகழ்வொன்று .

[ புதுப்புனல் ஆகஸ்ட் 2014 மற்றும் கணையாழி செப்டம்பர் 2014 இதழ்களில் வெளியானது . ]

நன்றி : புதுப்புனல் மற்றும் கணையாழி .





வட்டால மரம்

பள்ளி விட்டு வரும்போது
பாதி வழியில்
எட்டு திசையும் நிழல் பரப்பும்
இராட்சதக் குடை .
ஒற்றைப் பெருங்கால் பச்சைக் கிளி .
எதிர்க்கரை வாய்க்காலில்
நிழலை மிதக்க விடும்
ஆயிரங் கை அரக்கன் .
முதுகுச்சுமை இறக்கி ,
மாலை வெயில் தகர்க்க
ஐந்து நிமிடங்கள் .
தரை தொடும்
கூந்தல் ஊஞ்சல்களில்
மேலும் பத்து நிமிடங்கள் .
எட்டாவது முடிக்கும் வரை
இரவு நேரப் பூதமது .
வேர் விட்டு
இலை பரப்பி , கனிந்து
விதை சிதறி
இருபது வருடம் கழித்துத்
திரும்பிய போது
வட்டால மரமில்லை அங்கு
ஆயினும்
தோராயமாய் இடம் தேடி
நின்றபோது
இருபது வருட வெயிலும்
காணாமல் போனது .

கணையாழி ஜனவரி 1994 இதழில் வெளிவந்த எனது முதல் கவிதை – முதலில் எழுதியது இல்லை ... முதலில் வெளியானது .

நன்றி கணையாழி .