உருவகக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உருவகக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 அக்டோபர், 2014

குருவும் சீடனும் – ஒளி வட்டம் .

குருவும் சீடனும் ஒளி வட்டம் .

சீடன் குருவைத் தேடிச் சென்றான் .
குரு அவரது இருக்கையான வட்டப்பாறையருகில் நின்று கொண்டு , வட்டப் பாறையில் இருந்த ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் . சீடனைப் பார்த்ததும் புன்னகைத்தார் .
“ நான் சீடனாக இருப்பதை வெறுக்கிறேன் . எல்லாவற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் . எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுப்பீர்களா குருவே ? “
எனக்கே ஒன்றும் தெரியாது . உனக்கெப்படி நான் கற்றுக் கொடுப்பது ? “ குருவின் புன்னகை விரிந்தது .
“ உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும் . உங்களால் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க முடியும் . உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள எவ்வளவு காலமானாலும் நான் இங்கேயே காத்திருக்க தயாராக உள்ளேன் . முடிவே இல்லாமல் தேடிக் கொண்டிருக்க இனி என்னால் இயலாது . “
“ என் மீது நம்பிக்கையில்லையா ? உனக்கு தெரியாத எதுவும் எனக்கு தெரியாது . நீ உன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது போல் நான் என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் . அவ்வளவுதான் . “
“ ஆனால் நான் குழப்பத்தில் இருக்கும் பொழுதெல்லாம் எனக்கு நீங்கள் தெளிவை உண்டாக்கியிருக்கிறீர்கள் . எனது குழப்பங்களை நானே தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன் . அதற்கு நீங்கள் உதவ வேண்டும் . ‘
குரு வட்டப் பாறை பக்கம் பார்வையைத் திருப்பினார் .பட்டாம்பூச்சி அங்கு இல்லை .
“ அந்த பட்டாம்பூச்சி எங்கு சென்றது ? “ குரு கேட்டார் .
“ எனக்கு தெரியாது . நான் உங்கள் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் . அது பறந்து போனதை கவனிக்கவில்லை . “
“ எனக்கும் அது எப்போது போனது , எங்கே போனது என்பது தெரியாது . இப்போது சொல் . உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ? “ குருவின் புன்னகை மேலும் விரிந்திருந்தது .
“ நான் இது போன்ற விஷயங்களைப் பற்றி கூறவில்லை . நான் உள் மனதைப் பற்றிய உண்மைகள் குறித்து பேசுகிறேன் . நான் வாழ்க்கை பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . “
“ வாழ்க்கை குறித்த அனைத்து உண்மைகளையும் உணர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ? “ குரு புன்னகை மாறாமல் கேட்டார் .
“ நிச்சயமாக . இருந்திருக்கிறார்கள் ;  இப்போதும் இருக்கிறார்கள் . ஏன் நீங்கள் இல்லையா ? “ சீடனின் குரலில் நம்பிக்கை தொனித்தது .
குரு தனது இருக்கையான வட்டப் பாறையில் அமர்ந்தார் .
“ அப்படிப் பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது ? “ குருவின் புன்னகை மாறவே இல்லை .
  அவர்களின் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் தெரியும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் . “
“ என் தலையைச் சுற்றி ஏதேனும் ஒளி வட்டம் தெரிகிறதா ? “
“ ஆமாம் . சீடனின் பதில் எந்த வித தயக்கமுமில்லாமல் வந்தது . “ அதனால்தான் நான் உங்களைத் தேடி வந்தேன் .
குருவின் புன்னகை மாறி , உரத்த சிரிப்பு வெளியானது .
“ பார்த்தாயா , என்னால் பார்க்க முடியாத ஒன்றை உன்னால் பார்க்க இயலுகிறது . இப்போது சொல். யாருக்கு அதிகம் தெரிந்திருக்கிறது ? உனக்கா அல்லது எனக்கா ? “

சீடன் சிறிது நேரம் திகைத்து நின்றான் . பின்னர் எதையோ உணர்ந்து கொண்டவனாக அமைதி நிறைந்த மனதோடு திரும்பி நடக்க ஆரம்பித்தான் .   

வெள்ளி, 3 அக்டோபர், 2014

குருவும் சீடனும் – மகிழ்ச்சி.

குருவும் சீடனும் மகிழ்ச்சி.

சீடன் குருவிடம் சென்றான் . குரு மரத்தடியில் அவரது வழக்கமான இருப்பிடமான வட்டப்பாறையில் அமர்ந்த்திருந்தார்.
நான் மகிழ்ச்சியாக இல்லை, மகிழ்ச்சியை எங்கே தேடுவது ?
  “ மகிழ்ச்சி எங்கும் இருக்கிறது . “ குருவின் பதில் புன்னகையோடு வந்தது .
  “ ஆனால் நான் எப்படி அதை கண்டு பிடிப்பது ? “
  குரு புன்னகைத்தார் .
  “ எளிது . மிக எளிது . நிறைய வழிகள் உள்ளன . பிறருக்கு உதவுவது அதில் ஒன்று. “
  “ ஆனால் பிறருக்கு உதவ சந்தர்ப்பங்கள் கிட்டுவது இல்லையே .
  குரு அதிகமாக புன்னகைத்தார் .
  “ கடந்த காலங்களை நினைவு படுத்திப் பார் . யாருக்கும் எந்த உதவியும் நீ செய்ததில்லையா ? “
  ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் சீடன் சொன்னான் . “ இல்லை குருவே .
  “ நேற்று ? “
  “ இல்லை . “ சீடனின் குரலில் வருத்தம் ஆழமானது .
  “ ஆனால் இன்று நீ இருவருக்கு உதவி செய்துள்ளாய் . “
  சீடன் குழப்பத்துடன் குருவைப் பார்த்தான் .
  “ மகிழ்ச்ச்சியைத் தேடுவதற்கு உனக்கு நீயே உதவிக்   கொண்டாய் . மகிழ்ச்சியை உனக்கு உணர வைப்பதற்கு எனக்கு உதவி செய்துள்ளாய் . “ குரு உரத்த குரலில் சிரித்தார் .
  சீடன் மகிழ்ச்சி நிறைந்த மனதோடு திரும்பிச் சென்றான் .


செவ்வாய், 23 செப்டம்பர், 2014

குருவும் சீடனும்  பழம் .

[ உருவகக் கதை ]

சீடன் குருவிடம் சென்றான் .
      குருவின் இருப்பிடமான வட்டப் பாறை காலியாக இருந்தது சீடன் பார்வையை சுழல விட்டான்.
       மேலே பார் . நான் இங்கே இருக்கிறேன் குருவின் குரல் மேலிருந்து ஒலித்தது .
      சீடன் மேலே பார்த்தான் .குரு மரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்திருந்தார் .     “ மரத்தின் மீதேறி என்ன செய்கிறீர்கள் குருவே ? “
      ” பழங்களை பறித்துக் கொண்டிருக்கிறேன் குருவின் பதில் வழக்கமான புன்னகையோடு வந்தது .
      ” பழத்திற்காக மரமேற வேண்டுமா ? கீழிருந்து கல்லெறிந்தால் பழம் உதிரப் போகிறது . எதற்காக மரத்தில் ஏறி ஆபத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் ? “
       குரு புன்னகைத்தார் .
       “ நன்றாக யோசி . கீழிருந்து கல் எறிவது மேலும் ஆபத்தானது . குறி தப்பி நிறைய தடவை முயல வேண்டியதிருக்கலாம் . பழங்கள் கல்லடி பட்டு சிதைந்து போகலாம் . அப்படி கிடைப்பதுவும் நல்ல பழமாக இல்லாதிருக்கலாம் . கற்கள் பட்டு மரத்தின் இலைகளும் கிளைகளும் சேதப்படலாம் . அது மட்டுமல்ல எறியப் பட்ட கல் பலமான கிளைகளில் பட்டு உன்னையே திருப்பித் தாக்கலாம் . அது இருக்கட்டும். இதோ இந்த பழத்தை ருசித்துப் பார் . குரு நன்றாக பழுத்த ஒரு பழத்தை சீடனிடம் வீசினார் .
      சீடன் இரு கைகளையும் விரித்து , மிகுந்த கவனத்துடன் பழம் சேதமடையாத வகையில் பிடித்துக் கொண்டான் . பின்னர் பழத்தை ருசிக்க வாயருகில் கொண்டு சென்றான் .
      குருவின் புன்னகை உரத்த சிரிப்பாக மாறியது .
      “ பார்த்தாயா , பழம் சாப்பிட கல்லெறிவதை விட எளிதான ஒரு வழி இருக்கிறது . 
      சீடன் திகைப்புடன் மேலே பார்த்தான் .
     “ நாமாக எந்த முயற்சியும் செய்யாமல் , பிறர் முயற்சியால் கிடைக்கும் பழத்தை ருசிப்பது .
     சீடன் கையில் இருந்த பழத்தை வட்டப்பாறையில் வைத்து விட்டு , மரமேறத் தொடங்கினான் .



*********************************************************************************