புதிது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 செப்டம்பர், 2015

எஞ்சியவையாவது மிஞ்சட்டும்.....


வலைப்பதிவர் திருவிழா 2015 “ மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “ மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015 “
“ புதுக்கவிதைப் போட்டிக்கான கவிதை “

எஞ்சியவையாவது மிஞ்சட்டும்.....

பறந்து கொண்டிருக்கிறோம்
பரிணாமத்தின் உச்சம் தேடி .
மறந்து கொண்டிருக்கிறோம்
மனிதப் பண்பாட்டின் கூறுகளை மட்டும் .

ஆதி ஆரம்பத்தில் வனங்களில்தான் வாழ்ந்தோம்
எல்லா உயிரும் சமமென்றுதான் இருந்தோம்
ஒன்றாய் உழைத்து நன்றாய் வாழ்ந்தோம்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பினோம் .

முதலில் மரங்களை வெட்டினோம் மறைவிடம் தேடி
மறையத் தொடங்கின மற்றவையும் கொஞ்சம் கொஞ்சமாய்
பின்னர் வேர்களையும் விட்டு வைக்கவில்லை
இன்றோ வளர்ச்சி எனும் கானல் நீர் கண்களை மறைக்க
அழித்துக் கொண்டிருக்கிறோம் மனிதப் பண்பாட்டின்
எஞ்சியிருக்கும் கொஞ்சம் விதைகளையும் .

வாழு , வாழ விடு என்பதே மனிதப் பண்பாடு
தான் வாழப் பிறரை அழிப்பது பெருங்கேடு .
சுற்றி நடப்பதை உற்றுக் கவனித்தால்
பற்றி எரிகிறது மனம் ஒவ்வொரு கணமும் .

வளர்ச்சி என்றாலே பணம்தான் எனும் மாயை
வளர்த்து விட்டது மனித மனதில் பல நோயை
விரட்டியடிப்போம் இனியாவது அந்தப் பேயை .

எஞ்சியிருப்பதை வளர்த்தெடுப்போம்
அடுத்த தலைமுறையையாவது வாழ விடுவோம்
வாழ்வதற்கேற்ற வளமான புவியில் .

                                       - சுப்ரா .
உறுதி மொழிகள் :
1 ] இந்தப் படைப்பு எனது சொந்தப் படைப்பே .
2 ] இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 “ மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “ மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015 “ க்காகவே எழுதப்பட்டது .
3 ] இது இதற்கு முன் வெளியான படைப்பல்ல . முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது .
4 ] வலைப்பதிவுக் கையேடுக்கான விபரங்கள் அனுப்பியுள்ளேன் .

பதிவரின் பெயர் : வே . சுப்ரமணியன் [ சுப்ரா ]

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

குறுங்கவிதை – குறும்புகள் – 1


குறுங்கவிதை – குறும்புகள் – 1

ஊதச் சொன்னவர்
வாயில் இருந்தது
உள்ளூர் சரக்கு வாசம் .
*******
சுதந்திர நாட்டில்
சாப்பிடப் பட்டது – சு
அரசியல்வாதிகளால் .
*******
புத்தகத் திருவிழா
முடிந்து விட்டது
பதிப்பாளரின் கையிருப்பு .
---------------------------   [ முகநூல் பதிவுகள் ]

வியாழன், 1 ஜனவரி, 2015

தொட்டி மீன்கள் .


தொட்டி மீன்கள் .

சற்றே உப்புக்குறைவு

சலித்துக் கொண்டன

தொட்டி மீன்கள் 
.

கடல் வற்றிவிட்டது

கவலைப்பட்டன

கண்ணாடிக்குள் மீன்கள் .

கடலுக்குள் திரியும் மீன்கள்
கண்டதில்லை
கண்ணாடிக் கூண்டுகளை .



[ முகநூல் பதிவுகள் ]

புதன், 19 நவம்பர், 2014

கொஞ்சம் ஹைக்கூ ....

                         கொஞ்சம் ஹைக்கூ ....
வெட்டப் படுகின்றன குளங்கள்
நிரப்பப் படுகின்றன
சிலரின் பணப்பைகள் .

தீராப்பசி தீர்ந்து விட்டது
இதர செலவுக்கும் பணம்
நாளை தேர்தல் .

பாற்கடல் கடையப் பட்டது
பாத்திரம் மாறிப் போனது
விஷமாயிற்று அமிர்தம் .

விடிய விடிய மழை
பாப்பாவுக்கு கவலை
கப்பலுக்கு காகிதம் இல்லை .


கறுப்பு வெள்ளை
கட்டங்கள் அதேதான்
ஆட்டம்தான் வேறு .

நட்டது வாழை
பழுத்தது பலா
மண் மாறியதால் .

திங்கள், 17 நவம்பர், 2014

கொஞ்சம் ஹைக்கூ ....


கொஞ்சம் ஹைக்கூ ....

மழை இருந்தது
விளைநிலம் இருந்தது
வயிறு மட்டும் இருக்கின்றது .

பெரிதாகிறது வீடு
அதிகமாகிறது வெற்றிடம்
வீட்டிலும் மனதிலும் .


தெருவெங்கும் பிளாஸ்டிக்
சுற்றுச் சூழலுக்குக் கேடு
இன்றைய பசி தீர்ந்தது .

கீதை பைபிள் குரான்
எல்லாமே ஒன்றுதான்
பழைய பேப்பர் வியாபாரி .

தடங்கள் அதேதான்
கழிந்தன வருடங்கள்
பாதங்கள் மட்டும் வேறு .


கீதை பைபிள் குரான்
எல்லாமே ஒன்றுதான்
பழைய பேப்பர் வியாபாரி .


ஞாயிறு, 9 நவம்பர், 2014

முரண் .


முரண் .

நல்ல கவிதையை
என்னால் இனங்காண
இயலும்
ஆனால்
என்னைத்தான்
எந்த கவிதைக்கும்
தெரியாது .

எத்தனை திருத்தி
எழுதினும்
ஏனோ
தெரியவில்லை
என் கவிதைகளுக்கு
என்னைப்
பிடிக்கவே இல்லை .

படிப்பவர்களுக்கெல்லாம்
கவிதை வரிகளில்
கவிஞனின் மனம் தெரியும்
ஆனால்
கவிதையின் மனம்
கவிஞனுக்கு

மட்டுமே தெரியும் .

[ புதுப்புனல் டிசம்பர் 2014 ]

சனி, 8 நவம்பர், 2014

இவ்வாறுரைத்தான் தர்ம புத்திரன் . – 1


இவ்வாறுரைத்தான் தர்ம புத்திரன் . – 1

“ தன் லட்சியத்தை அடைகிறவன் , அதன்பிறகு அதைக் கடந்து செல்கிறான் . “  -   நீட்ஷே .

தர்ம புத்திரன் குகைக்கு வெளியே வந்து ஆகாயத்தைப் பார்த்தான் . சூரியன் மிகப் பிரகாசமாக இருந்தது . கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் அவன் குகையில் இருந்து வெளிப்பட்டு வெளியே வந்திருக்கிறான் .
சூரியக் கதிர்கள் பாறைகளில் பட்டுப் பாறைகள் பளபளத்தன .
பார்வையை வானத்தில் இருந்து இறக்கி மலையின் அடிவாரத்தைப் பார்த்தான் . கீழே பெருங்கூட்டம் .  மலையின் உயரத்தில் இருந்து பார்க்கும்போது அவ்வளவு பெரிய கூட்டம் சிறு புள்ளியாகத்தான் தோன்றியது . எனினும் அவனுக்குத் தெரியும் அது மிகப் பெரிய கூட்டம் என்று .
தர்ம புத்திரன் இறங்கத் தொடங்கினான் . அந்த நீண்ட பயணத்தின் முதல் அடியை எடுத்து வைத்தான் .
இறங்க இறங்க அவன் கூட்டத்தின் அருகாமைக்கு வந்து கொண்டிருந்தான் . அடிவாரத்தை நெருங்குவதற்கு சற்று முன் அவனைப் பார்த்துவிட்ட கூட்டம் பெருத்த சப்தத்தை எழுப்பியது .
வந்து விட்டான் . வந்து விட்டான் . ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் . அத்தனை குரலிலும் எதிர்பார்ப்பும் பிரமிப்பும் .
சப்தம் அவன் காதில் படும் தூரத்தில் வரும்போது கேள்விகள் அவனை நோக்கி வீசப்பட்டன .
நீ யார் ?
நீ மலையின் உச்சியில் இருந்து வருகிறாயா ?
உண்மையிலேயே நீ மலையின் உச்சிக்குப் போயிருந்தாயா ?
எங்கே போகிறாய் ?
எதற்காக உச்சியில் இருந்து இறங்கிவிட்டாய் ?
உன் பெயர் என்ன ?
உனது ஊர் எது ?
கேள்விகள் ... கேள்விகள் ... கேள்விகள் ... கேள்விகள் ...
இது எதுவுமே தெரியாமலா நீங்கள் எனக்காக காத்திருக்கிறீர்கள் ? அவனது கேள்விக்குள் பகடி ஒளிந்திருந்ததை கூட்டம் உணரவில்லை .
எங்களுக்கு நீ இன்று வரப் போகிறாய் என்று மட்டுமே தெரியும் .
அவன் எப்படித் தெரியும் என்று கேட்கவில்லை .
நீ யார் ? கூட்டம் மீண்டும் கூச்சலாக கேட்டது .
ஒருவர் ஒருவராக பேசுங்கள் . கூச்சலில் எதுவும் புரியாது .
நீ யார் ? வயதில் முதியவன் ஒருவன் கேட்டான் .
நான் நான்தான் . நான் யாராகவும் முடியாது . யாரும் நானாகவும் முடியாது .
இப்போது எங்கே போகிறாய் ? மீண்டும் முதியவன் . அவனது நீண்ட வெளுத்த தாடி காற்றில் அசையக் கேட்டான் .
நான் முதலில் எங்கிருந்து வந்தேனோ அங்கே போகிறேன் .
கூட்டம் அமைதியானது .
சற்று நேரம் கழித்து கண்கள் சுருங்கிய ஒரு நடுத்தர வயதுக்காரன் அமைதியைக் கலைத்தான் .
நீ மீண்டும் மலை உச்சிக்குப் போகிறாயா ?
தர்ம புத்திரன் அவனை உற்றுப் பார்த்தான் .
இல்லை . நான் மீண்டும் உச்சிக்குப் போகப் போவதில்லை . இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன் . நான் மீண்டும் உச்சிக்குப் போக வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள் ?
ஏனெனில் நாங்களும் உன்னோடு உச்சிக்குப் போக விரும்புகிறோம் . எங்களால் தனியாக செல்ல இயலாது . முதியவனின் தாடி மேலும் அதிகமாக ஆடியது . மேலும் சில குரல்கள் அவன் சொன்னதை திருப்பிச் சொல்லின .
நீங்கள் இருக்கும் இடமே நல்லதாக இருக்கும்போது எதற்காக உச்சிக்கு செல்ல விரும்புகிறீர்கள் ?  தர்ம புத்திரன் கேள்வி மொத்தக் கூட்டத்தையும் நோக்கி விழுந்தது .
தங்கத்தை அடைய . மீண்டும் முதியவனே பேசினான் . உச்சியில் உள்ள தங்கத்தை அடைய . கூட்டம் அவனை ஆமோதித்தது . அனைவரின் வலது கைகளும் மலையின் உச்சியைச் சுட்டிக் காட்டின .
மலை உச்சி சூரிய வெளிச்சத்தில் பிரகாசமாக மின்னியது .
இல்லை . அங்கே தங்கம் இல்லை . அவை சூரியனின் கதிர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெறும் கற்கள் . . மழையாலும் வெயிலாலும் அரவணைக்கப்பட்டு இயற்கையால் பராமரிக்கப்பட்டு வரும் மலையின் பாறைகள் . தர்ம புத்திரன் குரலில் இலேசான நகைப்பு இழையோடியது .
இல்லை . நீ பொய் சொல்கிறாய் . எஙகளுக்குத் தெரியும் . அங்கே நிறைய தங்கம் இருக்கிறது . எங்களது வறுமையை விரட்டுவதற்கான மிகுந்த செல்வம் கொட்டிக் கிடக்கிறது . அள்ளி எடுத்துக் கொள்வதற்காக . கூட்டம் மொத்தமும் ஒரே குரலில் ஒலித்தது .
தர்ம புத்திரன் புன்னகைத்தான் .
அங்கே தங்கம் இருந்திருந்தால் நான் எனக்காக நிறைய எடுத்து வந்திருப்பேன் ..
பொய்... பொய்... நீ உண்மையை எங்களிடம் இருந்து மறைக்கிறாய் .
தர்ம புத்திரன் இரு கரங்களையும் விரித்து அவர்கள் முன் நீட்டினான் .
பாருங்கள் என்னிடம் எதுவும் இல்லை .
உனக்கு தங்கத்தின் மீது விருப்பம் இல்லாமல் இருக்கலாம் . ஆனால் எங்களுக்கு இருக்கிறது . எங்களுக்கு வேண்டும் . அது ஒன்றே எங்களது அவலங்களை நீக்கும் .
எங்களை உச்சிக்கு கூட்டிச் செல்லுங்கள் . தயவு செய்யுங்கள் . இருப்பதில் இளையவனாகத் தெரிந்தவன் குரலில் கெஞ்சல் .
தர்ம புத்திரன் சிரிக்கத் தொடங்கினான் .
தயவு செய்யுங்கள் . உங்களால் மட்டுமே எங்களை உச்சிக்கு இட்டுச் செல்ல முடியும் .  முதியவன் இரு கைகளையும் கூப்பினான் .
சரி . நான் உங்களை உச்சிக்கு கூட்டிச் செல்கிறேன் . ஆனால் அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் . களைப்பூட்டக் கூடிய நெடுந்தூரம் . தயாராக இருக்கிறீர்களா அத்தகைய நெடும்பயணத்திற்கு ?
மொத்தக் கூட்டமும் தலையாட்டியது .
தர்ம புத்திரன் மீண்டும் ஒரு தடவை அனைவரையும் பார்த்தான் .
ஆண்கள் , பெண்கள் , முதியவர்கள் , இளையவர்கள் , ஆரோக்கியமானவர்கள் , தளர்ந்து போனவர்கள் ... குழந்தைகள் கூட இடுப்பில் .
மீண்டும் சொல்கிறேன் . களைப்பூட்டக் கூடிய நெடுந்தூரம் . உங்களை தளர்ச்சி அடைய வைத்துவிடும் .
கூட்டம் அவனது எச்சரிக்கையை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை .
தர்ம புத்திரன் திரும்பினான் . மலையில் ஏறத் தொடங்கினான் . கூட்டம் அவனைத் தொடர்ந்தது . அடிவாரத்தில் யாருமே இல்லை .
சூரியன் மேலும் அதிகமாக ஒளிர்ந்து கொண்டிருந்தான் . வெப்பம் கடுமையாகிக் கொண்டிருந்தது . மலையின் அடிவாரப்பகுதி என்பதால் ஓரளவிற்கு மெல்லிய சரிவாகத்தான் இருந்தது . எனினும் வெப்பத்தால் பாறைப் பகுதிகள் சூடாகி இருந்தன . முட்செடிகள் கால்களை வருத்தின . ஆனால் யாருமே தயங்கியதாகக் காட்டிக் கொள்ளவில்லை . எவ்வளவு சீக்கிரமாக உச்சிக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்று விட வேண்டும் என்ற துடிப்போடு தர்ம புத்திரனைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள் .
அனைவரது மனதிலும் ஒரே ஒரு எண்ணம்தான் .


உச்சியில் உள்ள தங்கம் .


செவ்வாய், 4 நவம்பர், 2014

மீட்கப் பட்ட ஏதேன் தோட்டக் கனி .

மீட்கப் பட்ட ஏதேன் தோட்டக் கனி .

இறக்கம் வந்தது
மனிதன் மீது.
இறங்கி வந்தார்
கடவுள் தரைக்கு.
மூட்டையாக்கிச்
சுமந்து சென்றார்
மனித பாவங்களை
தலை மீது .
இளைப்பாற நினைத்து
இறக்கி வைத்து
இமைகள் செருகி
தூங்கி எழ ,
மூட்டையில்லை
வைத்த இடத்தில் .
பாவமே இல்லாமல்
வாழ்வது எப்படி ? “
தூரத்தே நின்று
மனிதன் கேட்டான்
மூட்டையைப் பிரித்தவாறு .



திங்கள், 3 நவம்பர், 2014

பதிவுகள்.

பதிவுகள்.

எல்லாவற்றையுமே
ஞாபகத்தில் பதிந்தாகி விட்டது.
ஒவ்வொரு கணமும்
தெளிவாக
மூளையின் ஒவ்வொரு பகுதியில்.
மனதில் துடிப்பு
ஒவ்வொரு கணத்தையும்
மீண்டும் வாழ
உறைந்த ஞாபகங்கள்
மீண்டும் உயிர் பெற
எதிர் காலமும்
கடந்த காலமாகவே மாற
எனினும்
எதுவும் செய்யாது
நினைத்துக் கொண்டும்
கனவுகளில் குளித்துக் கொண்டும்
எப்போதும்
நம்பிக்கையோடு
மனிதர்கள் .


 வலைப்பதிவிற்கு பின்  மலைகள் இணைய இதழ்  - 64 – டிசம்பர் 17 , 2014  இதழிலும் பிரசுரமாகியுள்ளது ]

புதன், 29 அக்டோபர், 2014

ஓயாத அலைகள்

ஓயாத அலைகள் .

அலைகள் ஓய்வதற்காக
காத்திருக்கிறேன்
ஆனால் 
அலைகள் நான்
ஓய்வதற்காக

இயங்கிக் கொண்டே இருக்கின்றன .

செவ்வாய், 28 அக்டோபர், 2014

சங்கப் புலவன் மன்னிப்பானாக


சங்கப் புலவன் மன்னிப்பானாக .



யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
உந்தன் சம்பளமும் எந்தன் வருவாயும்
நுந்தை தந்த பெரும் சீரும்
செம்புலப் பெயல் நீர் போல
தாம் கலந்தனவே .

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

படையல்

படையல்

வாழ்ந்த போது
வழங்கத் தவறிய
அத்தனையும் அளித்தாயிற்று
அப்பாவாகவும் அம்மாவாகவும்
உருவகப் படுத்திய
வேட்டிக்கும் சேலைக்கும் .


ஞாயிறு, 19 அக்டோபர், 2014

உற்றுக் கவனியுங்கள் .





 உற்றுக் கவனியுங்கள் .....

உற்றுக் கவனியுங்கள் தலைவரின் வார்த்தைகளை .

கற்றுக் கொள்ள அதில் ஏதுமில்லை எனினும் ;

வெற்றுப் பேச்சு மட்டுமே போதும் - உலகில்

வெற்றி பெற என அது உணர்த்துவதால் .


உற்றுக் கவனியுங்கள் தலைவரின் வார்த்தைகளை .

புதன், 8 அக்டோபர், 2014

குருவும் சீடனும் – ஒளி வட்டம் .

குருவும் சீடனும் ஒளி வட்டம் .

சீடன் குருவைத் தேடிச் சென்றான் .
குரு அவரது இருக்கையான வட்டப்பாறையருகில் நின்று கொண்டு , வட்டப் பாறையில் இருந்த ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் . சீடனைப் பார்த்ததும் புன்னகைத்தார் .
“ நான் சீடனாக இருப்பதை வெறுக்கிறேன் . எல்லாவற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் . எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுப்பீர்களா குருவே ? “
எனக்கே ஒன்றும் தெரியாது . உனக்கெப்படி நான் கற்றுக் கொடுப்பது ? “ குருவின் புன்னகை விரிந்தது .
“ உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும் . உங்களால் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க முடியும் . உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள எவ்வளவு காலமானாலும் நான் இங்கேயே காத்திருக்க தயாராக உள்ளேன் . முடிவே இல்லாமல் தேடிக் கொண்டிருக்க இனி என்னால் இயலாது . “
“ என் மீது நம்பிக்கையில்லையா ? உனக்கு தெரியாத எதுவும் எனக்கு தெரியாது . நீ உன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது போல் நான் என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் . அவ்வளவுதான் . “
“ ஆனால் நான் குழப்பத்தில் இருக்கும் பொழுதெல்லாம் எனக்கு நீங்கள் தெளிவை உண்டாக்கியிருக்கிறீர்கள் . எனது குழப்பங்களை நானே தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன் . அதற்கு நீங்கள் உதவ வேண்டும் . ‘
குரு வட்டப் பாறை பக்கம் பார்வையைத் திருப்பினார் .பட்டாம்பூச்சி அங்கு இல்லை .
“ அந்த பட்டாம்பூச்சி எங்கு சென்றது ? “ குரு கேட்டார் .
“ எனக்கு தெரியாது . நான் உங்கள் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் . அது பறந்து போனதை கவனிக்கவில்லை . “
“ எனக்கும் அது எப்போது போனது , எங்கே போனது என்பது தெரியாது . இப்போது சொல் . உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ? “ குருவின் புன்னகை மேலும் விரிந்திருந்தது .
“ நான் இது போன்ற விஷயங்களைப் பற்றி கூறவில்லை . நான் உள் மனதைப் பற்றிய உண்மைகள் குறித்து பேசுகிறேன் . நான் வாழ்க்கை பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . “
“ வாழ்க்கை குறித்த அனைத்து உண்மைகளையும் உணர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ? “ குரு புன்னகை மாறாமல் கேட்டார் .
“ நிச்சயமாக . இருந்திருக்கிறார்கள் ;  இப்போதும் இருக்கிறார்கள் . ஏன் நீங்கள் இல்லையா ? “ சீடனின் குரலில் நம்பிக்கை தொனித்தது .
குரு தனது இருக்கையான வட்டப் பாறையில் அமர்ந்தார் .
“ அப்படிப் பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது ? “ குருவின் புன்னகை மாறவே இல்லை .
  அவர்களின் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் தெரியும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் . “
“ என் தலையைச் சுற்றி ஏதேனும் ஒளி வட்டம் தெரிகிறதா ? “
“ ஆமாம் . சீடனின் பதில் எந்த வித தயக்கமுமில்லாமல் வந்தது . “ அதனால்தான் நான் உங்களைத் தேடி வந்தேன் .
குருவின் புன்னகை மாறி , உரத்த சிரிப்பு வெளியானது .
“ பார்த்தாயா , என்னால் பார்க்க முடியாத ஒன்றை உன்னால் பார்க்க இயலுகிறது . இப்போது சொல். யாருக்கு அதிகம் தெரிந்திருக்கிறது ? உனக்கா அல்லது எனக்கா ? “

சீடன் சிறிது நேரம் திகைத்து நின்றான் . பின்னர் எதையோ உணர்ந்து கொண்டவனாக அமைதி நிறைந்த மனதோடு திரும்பி நடக்க ஆரம்பித்தான் .   

வெள்ளி, 3 அக்டோபர், 2014

குருவும் சீடனும் – மகிழ்ச்சி.

குருவும் சீடனும் மகிழ்ச்சி.

சீடன் குருவிடம் சென்றான் . குரு மரத்தடியில் அவரது வழக்கமான இருப்பிடமான வட்டப்பாறையில் அமர்ந்த்திருந்தார்.
நான் மகிழ்ச்சியாக இல்லை, மகிழ்ச்சியை எங்கே தேடுவது ?
  “ மகிழ்ச்சி எங்கும் இருக்கிறது . “ குருவின் பதில் புன்னகையோடு வந்தது .
  “ ஆனால் நான் எப்படி அதை கண்டு பிடிப்பது ? “
  குரு புன்னகைத்தார் .
  “ எளிது . மிக எளிது . நிறைய வழிகள் உள்ளன . பிறருக்கு உதவுவது அதில் ஒன்று. “
  “ ஆனால் பிறருக்கு உதவ சந்தர்ப்பங்கள் கிட்டுவது இல்லையே .
  குரு அதிகமாக புன்னகைத்தார் .
  “ கடந்த காலங்களை நினைவு படுத்திப் பார் . யாருக்கும் எந்த உதவியும் நீ செய்ததில்லையா ? “
  ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் சீடன் சொன்னான் . “ இல்லை குருவே .
  “ நேற்று ? “
  “ இல்லை . “ சீடனின் குரலில் வருத்தம் ஆழமானது .
  “ ஆனால் இன்று நீ இருவருக்கு உதவி செய்துள்ளாய் . “
  சீடன் குழப்பத்துடன் குருவைப் பார்த்தான் .
  “ மகிழ்ச்ச்சியைத் தேடுவதற்கு உனக்கு நீயே உதவிக்   கொண்டாய் . மகிழ்ச்சியை உனக்கு உணர வைப்பதற்கு எனக்கு உதவி செய்துள்ளாய் . “ குரு உரத்த குரலில் சிரித்தார் .
  சீடன் மகிழ்ச்சி நிறைந்த மனதோடு திரும்பிச் சென்றான் .