புத்தக அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

” ஆதிமுகத்தின் காலப்பிரதி “ –இரா . பூபாலன் [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .

ஆதிமுகத்தின் காலப்பிரதி “ –இரா . பூபாலன் [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .

-------------------------------------------------------------
வாழ்க்கை அவலங்களாலும் , கவலைகளாலும் இன்னும் பிற வருத்தம் தரும் உணர்வுகளாலுமே நிரம்பி வழிகிறது . எனினும் அவ்வப்போது அழகான பக்கங்களையும் நமக்குக் காட்டிக் கொண்டுதான் நகர்ந்து கொண்டிருக்கிறது . வாழ்வின் இரு பக்கங்களையும் வாசிப்பவரோடு பகிர்ந்து கொள்வதுதான் ஒரு படைப்பாளியின் முதல் நோக்கமாக இருக்க முடியும் . அதிலும் குறிப்பாக கவிதைகளில் . அதைச் செவ்வனச் செய்து காட்டியுள்ளார் இரா . பூபாலன் தனது ஆதிமுகத்தின் காலப்பிரதி “ கவிதைத் தொகுப்பில் .
இப்போது
உங்கள் கைத்துப்பாக்கி
நடுங்காமலிருக்கட்டும்
நம்புங்கள் ஆறு தோட்டாக்களில்
ஆகச் சிறந்தது
கடைசித் தோட்டா மட்டுமே .
ஆறு தோட்டாக்கள் உள்ள துப்பாக்கி ... “ என்ற கவிதையின் இந்தக் கடைசி வரிகளை வாசித்து முடிக்கையில் , முதல் ஐந்து தோட்டாக்களில் எத்தனையை நாம் இது வரை அடுத்தவர் மீது பயன்படுத்தியுள்ளோம் , எத்தனை தோட்டாக்களை பிறர் நம் மீது பயன்படுத்தியுள்ளார்கள் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலாது .
*******************************************
மனித இனம் இயற்கையோடு ஒன்றி வனத்தில் வாழ்ந்த காலத்திலும் வாழ்க்கை முற்றிலும் இனிப்பாக மட்டுமே இருந்தது என்று சொல்ல இயலாதுதான் . ஆனால் இன்றைய நாகரீக சமூகத்தில் நிகழும் அவலங்களோடு ஒப்பிட்டால் அவை ஒன்றுமில்லை என்று உணர்த்தும் வகையில் இப்படி முடிக்கிறார் ஒரு கவிதையை ....
சில மிருகங்கள்
அவளை வேட்டையாடிவிட்டன
என்று நான் இக்கவிதையை
முடித்தால் நிச்சயம்
அவள் என்னை மன்னிக்கமாட்டாள் .
**********************************************
தர்மத்தைக் காப்பாற்றுவது இன்றைய கால கட்டத்தில் அவ்வளவு எளிதல்ல என்பதை பகடியாக இப்படிக் கூறுகிறார் இன்னொரு கவிதையில் – கையாலாகாக் கண்ணன்
இந்த முறை
காது கேட்காத மாதிரி
நடிக்கத் துவங்குகிறான் .
******************************
நாம் இயற்கைக்குத் துரோகம் செய்தாலும் , இயற்கை இயன்ற அளவு நம்மைக் கைவிடாதுதான் இருக்கின்றது என்பதைக் காட்டும் அழகான் வரிகள் –
மஞ்சள் மலரொன்றை
என் மீது
விழச்செய்து
ஆசிர்வதித்த பின்னர்தான்
வெட்டத் துவங்கினேன்
அம்மரத்தை .
******************************************
வாழ்வின் அவலமான பக்கங்களை பல கவிதைகளில் வலிமையும் , வலியும் மிகுந்த வார்த்தைகளால் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் கவிதைகள் தொகுப்பு முழுவதும் பரவிக் கிடக்கின்றன . எனினும் அவை தரும் மனச் சோர்வைப் போக்கும் வகையில் , எந்த ஒரு மனிதனின் வாழ்விலும் சற்று கூடுதலாக வெளிச்சம் தருபவர்கள் குழந்தைகள்தான் என்பதை உணர்த்தும் விதமாக , தவிர்க்க முடியாத செயற்கைப் பூச்சுகளை இன்னும் பூசிக் கொள்ளாத குழந்தைப் பருவத்தின் அழகான தருணங்களைத் தன் கவிதைகளில் அங்கங்கே தூவியுள்ளார் .   
கதைப் புத்தகத்தின்
பக்கத்தில்
புலி துரத்திக் கொண்டோடும்
மானுக்குக்
கூடுதலாக இரண்டு
கால்கள்
வரைகிறது குழந்தை .
***********************************
வெள்ளிக் கிழமை
சாயங்கால மகளைப் போல
இருப்பதில்லை
திங்கட்கிழமை காலை
மகள்......
***********************************
தொகுப்பை முழுவதுமாக வாசிக்கும் போதுதான் கவிஞரின் வார்த்தைகளின் வீரியத்தை உணர இயலும் . எடுத்துக் காட்டாக .....
அன்பின் குரல்களுக்கு
எப்போதும் ஒரே முகம் .
***********************************
வாழ்த்துகள் பூபாலன் இன்னும் ....இன்னும்....வீரியம் மிக்க தொகுப்புகள் பல கொண்டு வர .
*********************************** 
ஆதிமுகத்தின் காலப்பிரதி “ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – இரா . பூபாலன் .
வெளியீடு – பொள்ளாச்சி இலக்கிய வட்டம் , பொள்ளாச்சி .
விலை – ரூ 70 /

------------------------------------------------------------------ 

செவ்வாய், 26 ஜூலை, 2016

மெளனத்தின் பிளிறல் – [புதியமாதவி ] - ஒரு வாசிப்பு அனுபவம் .


மெளனத்தின் பிளிறல் – [புதியமாதவி ] - ஒரு வாசிப்பு அனுபவம் .
-----------------------------------------------------------------
கவிதைகள் , சிறுகதைகள் , மொழியாக்கங்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் புதியமாதவி அவர்களின் எழுத்துகளை , பல்வேறு தருணங்களில் தனித்தனியே வாசித்திருந்தாலும் , கவிதைகளின் மூலமாக வெளிப்படும் அவரது எழுத்தின் வீச்சை ஒரே தொகுதியாக வாசிக்கும்போது ஏற்படும் மனக் கிளர்ச்சி வேறு விதமாகத்தான் உள்ளது .
எழுத்து “ வெளியீடாக வெளிவந்துள்ள மெளனத்தின் பிளிறல் “  தொகுப்பில் உள்ள 46 கவிதைகளிலும் முதல் வாசிப்பில் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு வகை அறச்சீற்றமே தென்பட்டாலும் , மறுவாசிப்பில் ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு பரிமாணங்களில் விரிகின்றது .
*********************
சாத்தான்கள் வேதம் ஓதலாம்
வேதங்களே சாத்தான் ஆகலாமா ?
**********************************************
சமூகம் குறித்த சீற்றத்தை , மென்மையான வார்த்தைகளாலும் வெளிப் படுத்த முடியும் என உணர்த்தும் நிறைய கவிதைகள் தொகுப்பெங்கும் சிதறிக் கிடக்கின்றன .
******************************************************
மரணம் இல்லாத வீட்டில் கடுகு வாங்க என்னை
அனுப்பாதே....
யுத்தமில்லா பூமியில் எங்காவது உன்னைச் சந்தித்தால்
அப்போது வருவேன் ....
மீண்டும் உன் காதலியாக .
புத்தம் சரணம் கச்சாமி ...
*************************************************  
கலை விமர்சகர் இந்திரன் தன் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது போல புதியமாதவி அவர்களின் கவிதைகள் பால்பகா உயர் திணைக் கவிதைகளாகவே உள்ளன . அவரது கூற்று தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு நியாயம் கற்பிப்பதாகவே படுகிறது .
**********************************************
வெள்ளை மனிதர்களுக்கு நடுவில்
கருங் காக்கைகள் கத்துவதும் கூட
காதுகளுக்கு  சங்கீதமாய் .
********************************************
சற்றே விரிந்த பார்வையில் பார்த்தால் பெண்ணின் குரலாக வெளிப்படும் அநேக கவிதைகள் , ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தான சமூகத்தின் பொதுக் குரலாகவே தோன்றுகின்றன . எதனை எதற்கு உருவகப் படுத்துகிறார் என்ற கேள்வியை முன் வைத்து வாசிக்கும் போது விரிந்து கொண்டே போகின்றன கவிதை வரிகள் .
*************************************
குடைக்குள் நடப்பதும்
குடை பிடித்து நடப்பதும்
வேறு வேறான உலகம் .
இப்போதெல்லாம் எனக்கான குடை
எப்போதும் என் வசம் .
*****************************************
ஒரு வகையில் பொறாமையாகக் கூட உள்ளது . நான்கு தலைமுறையாக மும்பையில் வாழும் ஒருவரால் எப்படி இவ்வளவு அழுத்தமாக தனது கால்களை தனது தாயகமான தாமிரபரணி நதியோடும் மண்ணிலும் , அதன் தொன்மங்களிலும் பதித்து நிற்க முடிகிறது என்று .
**********************************************************
கடகரேகையும் மகரரேகையும்
சங்கமிக்க மறுக்கும்
பூமத்திய ரேகையின் அடிவயிற்றில்
இந்தப் பஃறுளி
மெளனத்தின் பிளிறலோடு .
************************************************
மெளனத்தின் பிளிறல்களில் இருந்து விடுபட சற்று நாட்கள் ஆகும் என்றுதான் தோன்றுகிறது . விடுபட முடியுமா என்றும் தோன்றுகிறது .
-----------------------------------------------------------
 மெளனத்தின் பிளிறல் – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – புதியமாதவி .
வெளியீடு – எழுத்து , சென்னை .
விலை – ரூ 60 /

---------------------------------------------------------------

திங்கள், 25 ஜூலை, 2016

அம்மாவின் கோலம் [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம் .

அம்மாவின் கோலம்                                                [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
----------------------------------------------------------

கவிதையில் “ இருண்மை “ வேண்டாம் என்று உரக்கச் சொல்லும் ஒரு கவிஞரின் கவிதைகளில் “ வெளிச்சம் “ தவிர வேறு எதை எதிர் பார்க்க முடியும் ? கவிஞர் ஜெயதேவனின் “ அம்மாவின் கோலம் “ தொகுப்பில் உள்ள 43 கவிதைகளும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன நமது இன்றைய வாழ்க்கை முறையையும் , அதன் மூலம் நாம் இழந்தவற்றையும் . வெளிச்சம் என்றால் கண் கூச வைக்கும் வெளிச்சம் இல்லை ; மனம் கூச வைக்கும் வெளிச்சம் . நாமேதான் நம்மை ஒருவித இருட்டிற்குள் நுழைத்துக் கொண்டு வாழ்கிறோம் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன கவிதை வரிகள் .
*******************************************
ஆயினும் விற்க இன்னும் மிச்சம்
இருந்து கொண்டுதானிருக்கிறது வாழ்க்கை . [ வாழ்வின் முடிச்சுகள் ]
***************************************************************************
வெளிச்சம் என்றால் ஒளி இல்லாமல் இருக்குமா ?  ஒளி இருந்தால் சூடும் அநேகமாக தவிர்க்க முடியாதுதானே ? நிறையவே இருக்கிறது சூடு இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் . சூடுகள் வலியை உண்டாக்கினாலும் வடுக்களை உண்டாக்கவில்லை . மாறாக சூழலில் இருந்து விடுபட வழியைத்தான் காட்டிச் செல்கின்றன வரிகள் .
*****************************************
40 சதவீதம் மனிதனாகவும்
60 சதவீதம் சராசரியாகவும் . [ முன்னுக்குப் பின் ]
********************************************************
டாஸ்மாக்கில் குப்புறக்கிடப்பவனும்
எதிர்பார்க்கிறான் கலப்படமற்ற போதையை . [ கல்லெனக் கிடக்கிறது காலம் ]
***********************************************************************
வானம்பாடிக் கவிஞர்களின் காலத்தைச் சேர்ந்த அநேக கவிஞர்கள் சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகளாக குறுகிய வட்டத்திலேயே உழன்று கொண்டிருக்கும் போது , அவர்களில் ஒருவரான ஜெயதேவன் அதி நவீன சிறகுகளை வளர்த்துக் கொண்டு கால மாற்றத்திற்கேற்பத் தன் கவிதைகளையும் பரந்த எல்லைகளில் பறக்க வைத்திருக்கிறார் .
**************************************
பிரமாண்டமானது எல்லாம்
பயமானதும் கூட . [ கவிதையின் கருவறை ]
*****************************************************
நாம் புரியினும் புரியாவிடினும்
என்றும் நம்மோடிருப்பது என்னவோ
நம்மூர் பெருமாள்கோயில் மாடுகளும்
மந்தையில் நிற்கும் அரசமரமும்தான் . [ உறவுகள் ]
***************************************************************
தொகுப்பில் மூன்று வீடுகளை கட்டியிருக்கிறார் / காட்டியிருக்கிறார் . ஒவ்வொரு வீட்டில் புகுந்து வெளிவரும் போதும் வெவ்வேறான உணர்வுகளுடன்தான் வெளிவர வேண்டியதிருக்கிறது .
****************************************************
உணர்ச்சிகளால் கட்டப்பட்டவன் மனித
உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல வீடு .  [ வீடு 1 ]
******************************************************************
வீடு கனமானதுதான்
வீடு கனக்கிறது என்று
காட்டுக்குப் போனவன் காடு பூராவும் வீடு . [ வீடு 2 ]
*********************************************************************
பொதுவாக பெயர்களையும் , பொருட்களையும் அடுக்கி வைத்து எழுதப்படும் கவிதைகளை கேட்லாக்கிங் கவிதைகள் என்று வகைப் படுத்துவார்கள் . ஆனால் தொகுப்பில் உள்ள சில கவிதைகளில் பெயர்களும் , பொருட்களும் அடுக்கப் பட்டிருந்தாலும் அவை கலிடியாஸ்கோப் காட்சிகளாக விரிந்து ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறு  காட்சிகளையும் , பொருளையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன . ஒரு கவிதைக்குள் எத்தனை வேறுபட்ட விஷயங்களை நுழைக்க முடிகிறது இவரால் என்ற வியப்பு சில கவிதைகளை வாசிக்கையில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது .
ஹீமொகுளோபின்கள் , நியுரான்கள் , மைக்கேல் ஜாக்சன் , காரல் மார்க்ஸ் , கண்ணதாசன் , ஜிப்ரான் , உமர்கயாம் , பாரதி , கூடவே கஞ்சா புகை என்று கலந்து கட்டியுள்ள “ டம்ளரில் ஊற்றப்படும் வாழ்க்கை “ என்ற கவிதையை வாசிக்கையில் இந்த வாழ்க்கை அவருக்கு மட்டுமானதாக இல்லாமல் வாசிக்கும் எனக்கும் , உங்களுக்கும் உரித்ததாகி விடுகிறது .
*******************************************
உமர்கயாம் பாரதி விட்ட
கஞ்சா புகையிலும் இருக்கிறதே
நமக்கான கவிதைகள் .
************************************************
கவிஞனாய் இருப்பது வரமா , சாபமா என்று கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் உள்ளது வாழ்க்கைக்குத் தூரமாய் கவிதை .
**************************************************************************
உரசினால் பற்றும் தீக்குச்சியாய்
பிறப்பெடுத்த கவிஞனால் வேறென்ன செய்யமுடியும் ?
***********************************************************************
அடுக்கிக் கொண்டே போகலாம் தொகுப்பில் உள்ள கவிதைகளில் மனதை ஊடுருவும் கேள்விகளை – கீழே உள்ளவை போன்று .
**************************************************************
வடக்கே எத்தனை காதம் நம்ஊர் ?
தெற்கே எத்தனை காதம் நம் காடு ?  [ திசைகள் ]
***************************************************************
நீங்கள் நடந்த நிழலில்தான்
நடக்கிறது என் நிகழ்கால நிஜம் .  [ அப்பாவுக்குக் கடிதம் ]
*********************************************************************
ஆயினும் தொகுப்பை முழுமையாக வாசித்துப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும் ஒரு போன தலைமுறைக் கவிஞனின் இன்றைய வாழ்க்கை குறித்த நவீன பார்வை ஜெயதேவன் போன்றவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் வித்தையை . பரவிக் கிடக்கும் படிமங்களும் , உருவகங்களும் , தொன்மங்களும் வாசிப்பவனுக்கு மனதில் நிறைய வேலையை உருவாக்கும் அருமையான தொகுப்பு .  
-----------------------------------------------------------
 ‘ அம்மாவின் கோலம் ‘ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – ஜெயதேவன் .
வெளியீடு – எழுத்து , சென்னை .
விலை – ரூ 60 /

----------------------------------------------------------------     

திங்கள், 26 அக்டோபர், 2015

” வல்லினம் நீ உச்சரித்தால் . ” [ ஒரு கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .


வல்லினம் நீ உச்சரித்தால் . [ ஒரு கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
-------------------------------------------------------------------
வல்லினம் நீ உச்சரித்தால் “ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – முகமது மதார் . [ 95970 69069 ]
வெளியீடு – வாசகன் பதிப்பகம் , சேலம் .
விலை – ரூபாய் 50 /
அறிமுக உரை – கவிஞர் ஆத்மார்த்தி .
முகமது மதார் எழுதுவதில் ஆர்வம் உள்ள இளைஞர் . பொறியியல் பட்டதாரி . இவரது இந்தக் கவிதைத் தொகுப்பு அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே [ 2014 ] வெளியிடப் பட்டது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டே வாசிக்கப்பட வேண்டியது . முதல் கவிதையில் தொடங்கி கடைசிக் கவிதை வரை காதல்தான் கருப் பொருள் . அதிலும் பொதுப்படையான காதல் கவிதைகள் அல்ல . காதலியை முன்நிறுத்தி வைத்து எழுப்பப்படும் ஒரு இளைஞனின் மனக்குரலாகவே இருக்கிறது . [ சங்க காலப் பாடல்களில் தோழியை முன்நிறுத்துவது போல ] அதனாலேயே வாசிக்கும் போது ஒரு கவிதைத் தொகுப்பு என்பதையும் மீறி , காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் இரகசிய நாட்குறிப்பை அவனறியாமல் படிக்கும் உணர்வுகள் எழுவதைத் தடுக்க இயலாது .
“ வல்லினம் நீ உச்சரித்தால்
மெல்லினமாய் மாறுதடி !
மெல்லினம் நீ உச்சரித்தால்
மயிலினமாய் வருடுதடி !
என்ற முதல் கவிதையிலேயே வாசிப்பவனையும் வருடிச் செல்கிறார் .
மருதாணி வைத்துவிட்டு
வாசம் வருகிறதா ? என்றாய்
வரவில்லை , அதன் வாசம் – உன் கையில் !
வருகிறது , உன் வாசம் – மருதாணியில் ! “
என்ற கவிதையில் கற்பனையின் உச்சம் தொடுகிறார் .
பொதுவாக எல்லாக் கவிதைகளுமே ஐந்து அல்லது ஆறு வரிகளுக்குள்தான் எனினும் மூன்று நீள்வரிக் கவிதைகளும் உள்ளன . அதில் ஒன்றான “ கல்லூரிப் பேருந்து “ கவிதை இப்படி முடிகிறது ...
முன் இருக்கையில் நீ !
பின் இருக்கையில் நான் !
நீ பார்த்து விட்டு ,
எனக்கு அனுப்பும் அந்த
வெளிப்புறக் காட்சிகள்
அன்று மட்டும் என்னவோ
அத்துணை அழகாய்
தோற்றம் தருகிறது ...
என் விழிகளுக்கு ... “
வாசித்து முடிக்கையில் அவருக்குப் பின் இருக்கையில் நாம் அமர்ந்திருக்கும் உணர்வை உருவாக்குகிறது வரிகள்.
உன் ஞாபகமாய்
எதுவுமில்லை என்னிடம் !
உன் ஞாபகங்களைத் தவிர ... “
**************************************
உன் கண்ணீர்த்துளிகளைக்
காணும்போதெல்லாம்
என் உதடுகளுக்கு
உப்புத்தண்ணீரின் மீது
ஆசை வந்து விடுகிறது ... ! 
என்ற கவிதைகள் காதலில் கவித்துவம் தவிர்க்கப்பட இயலாது என உணர்த்துகிறது .
முகநூலின் இன்னொரு முகத்தைக் காட்டிச் செல்கிறார் ஒரு கவிதையில்
”  போதுமான போலி
அக்கவுண்டுகள் அவசியமாகின்றன !
ஒற்றை ‘ லைக் ‘ குடன்
எப்படிக் கடப்பது ?
உன் ஃபேஸ்புக் புகைப்படப் புன்னகையை ... ! “
சொல் , பொருள் மயக்கம் சில கவிதைகளில் இருப்பதாகவேப் படுகிறது .
நிலவுகளில்
நிதம்
நீதான் ! “
வார்த்தை ஜாலம் நயம் . ஆனால் ஒரு நிலவு பல நிலவுகளாக மாறி ஒரு மயக்கத்தை உருவாக்கி விட்டது போலும் .
”  காதல் தோல்விகள் –
நிறுத்தம் வந்தபின் கிடைக்கிற
பேருந்து இருக்கைகள் ... ! “
என்ற கவிதையிலும் இலேசான கருத்து மயக்கம் . யதார்த்தத்தில் வேறு காதலோ அல்லது திருமணமோ நிகழ்ந்தபின் கிடைக்கும் முதல் காதலின் வெற்றிதான் நிறுத்தம் வந்தபின் கிடைக்கிற பேருந்து இருக்கைகளுக்கு இணையானவை என்ற எண்ணம் உருவாகுவதை வாசிக்கையில் தவிர்க்க இயலவில்லை .
வல்லினத்தில் ஆரம்பித்த தொகுப்பை , பெருமழையாய் முடித்திருக்கிறார் கடைசிக் கவிதையில் .
சிறு பிள்ளையின்
முதல் புன்னகையில் தொடங்கி ,
பெருமழையின்
கடைத்தூறலில் முடிகிறது
உனக்கான என் கவிதை ... ! “
காதல் வயப்பட்ட இளைஞர்களுக்கு நிச்சயமாய் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் இந்தக் கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் முகநூலில் “ காகிதக் கவிதைகள் “ என்று ஒரு பக்கத்தில் தன் கவிதைகளைப் பதிவிடுகிறார் . அந்தக் கவிதைகளிலும் , கல்லூரி நினைவுகள் குறித்த அவரது சமீபத்திய பதிவுகளிலும் அவர் தன் தளத்தை விரிவு படுத்தி விட்டார் என உணர முடிகிறது . நிச்சயமாக அவரது அடுத்த தொகுப்பில் காதலைத் தாண்டி வந்து பரந்த தளத்தில் கவிதைகளைத் தருவார் என நம்பலாம் . வாழ்த்துவோம் .
-----------------------------------------------------------------


வெள்ளி, 16 அக்டோபர், 2015

” குழந்தைகளைத் தேடும் கடவுள் ” – ஒரு வாசிப்பு அனுபவம் .



குழந்தைகளைத் தேடும் கடவுள் – ஒரு வாசிப்பு அனுபவம் .

கவிஞர் ச. கோபிநாத் எழுதி வாசகன் பதிப்பகம் வெளியிட்டுள்ள ஹைக்கூத் தொகுப்பு “குழந்தைகளைத் தேடும் கடவுள் “ . சிறந்த ஹைக்கூ நூலுக்கான மின்மினி – கார்முகிலோன் ஹைக்கூ விருது பெற்ற நூல் .
பக்கத்திற்கு நான்காக 39 பக்கங்களில் 156 ஹைக்கூக்கள் [ சென்ரியு உட்பட ] அடங்கிய அருமையான தொகுப்பு . தளத்தை சுருக்கிக் கொள்ளாமல் குழந்தைகள் மன உலகம் , சமூக அவலங்கள் , சமூகச் சிந்தனைகள் , இயற்கையின் அருமை , பண்பாட்டின் பெருமை மற்றும் அதன் அழிவு குறித்த பொருமல் , சுற்றுச் சூழல் மாசு படுதல் குறித்த கவலை , தமிழ் மீது உள்ள காதல் , விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த பார்வை , மூடநம்பிக்கை குறித்த எள்ளல் , கூடவே சிறிது வாழ்க்கைத் தத்துவங்கள் என்று பரந்த களத்தில் தன் கற்பனைச் சிறகுகளை விரித்துப் பறந்திருக்கிறார் கவிஞர் கோபிநாத் .
தொழிலால் ஆசிரியர் என்பதால் குழந்தைகளைக் குறித்து நிறையக் கவிதைகள் உள்ளன . எனினும் குழந்தை , கடவுள் இருவரையும் இரு வேறுபட்ட பார்வைகளில் பார்க்கும் கீழ் கண்ட கவிதைகள் நயம் அருமை . ஒன்றில் தத்துவமும் இன்னொன்றில் எள்ளலும் நடை போடுகின்றன .
குழந்தைகளைத் தேடும்
கடவுள்
நிம்மதிப் பெருவாழ்வு .
********************
கடவுளைத் தேடும்
குழந்தைகள்
தேர்வு நாள் .
**********************
தவிர்க்க இயலாமல் கண்ணில் படும் காட்சிகளை மாற்றுச் சிந்தனையில் பார்க்கிறார் இன்னொரு கவிதையில் .
வீணாகவில்லை
குழாயில் ஒழுகும் நீர்
தாகம் தணிக்கும் பறவை .
*********************************
கவிஞனின் சுய எள்ளலாக வெளிப்படுகிறது இன்னொரு கவிதை .
சூடாக இருந்தன
கவிதைகள்
திண்பண்டத் தாள் .
*************************
மறைபொருளாய் எதையோச் சுட்டிக் காட்டிச் செல்கிறார் சமயங்களில்
வளரத்துடிக்கும் வேர்கள்
வெட்டப்படும் வேதனை
தொட்டிச்செடி வாழ்க்கை .
********************************
வாசிப்பவனின் கற்பனைகளை வெவ்வேறு திசைகளில் சிறகடிக்க வைக்கிறது சில கவிதைகள் . 
சலசலப்பிருந்தும்
சலனமில்லை
நதியின் பயணம் .
***************************
அடர்காடு
ஆரவாரமின்றி
குயிலோசை .
*************************************
மொத்தத்தில் நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்துள்ளது தொகுப்பு .
கவிஞரின் படைப்புகள் பெருக வாழ்த்துகள் .
குழந்தைகளைத் தேடும் கடவுள் ஹைக்கூத் தொகுப்பு .
வெளியீடு – வாசகன் பதிப்பகம் , சேலம் .
விலை – ரூபாய் 50 /

---------------------------------------------------------------------- 

திங்கள், 12 அக்டோபர், 2015

” ஆலிவ் இலைகள் . ” [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .



”  ஆலிவ் இலைகள் . [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
-------------------------------------------------------------------
ஆலிவ் இலைகள் “ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – கவிஞர் கூடல் தாரிக் .[ முனைவர் கா . பீர்முகமது தாரிக் ]   [ 99425 30284 ]
வெளியீடு – கிருஷ்ணா பப்ளிகேஷன்ஸ் , தேனூர் , மதுரை .
விலை – ரூபாய் 50 /
கவிஞரின் முதல் தொகுப்புதான் எனினும் அனுபவ வரிகளும் , அழகிய கவித்துவமும் அடங்கிய தொகுப்பு .
51 தலைப்புகளில் சில குறுங்கவிதைகளும் , பல நீள் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு . கவிதைகள் மட்டுமல்ல புத்தக வடிவமைப்பும் அழகுதான் . கண்களை உறுத்தாத எழுத்துகளும் , கவிதைகளுக்கேற்ற படங்களும் சிறப்பு .
பல நீள் கவிதைகள் அநேகமாக ஒன்றுக்கொன்று தொடர்புள்ள குறுங்கவிதைகளாக எழுதப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பு . தனித் தனியே வாசித்தாலும் தலைப்பில் தந்திருக்கும் பாடுபொருளை நம் கண் முன் கொண்டு வந்து விடுகின்றன .
வாழ்வின் முழுமையை குறியீடாக உணர்த்துவது போல குழந்தை “ பருவத்தின் சிறப்பு குறித்த கவிதையில் ஆரம்பமாகும் தொகுப்பு , மெழுகுவர்த்தியாய் உருகிய “ அம்மா “ அணைந்து போன சோகத்தில் முடிகிறது .
இடையில் கவிதைகள் விரிவான களங்களில் விரவிக் கிடக்கின்றன . சமூகம் , காதல் , பாசம் , பாசத்திற்கான ஏக்கங்கள் , இயற்கையும் அதன் இழப்புகளும் , பறவைகளின் உலகமும் அவற்றின் மொழிகளும் , நாகரீகத்தின் நன்மைகளும் , தீமைகளும் .... என சிறகுகளை விரித்து பறந்திருக்கிறார் கவிஞர் . தமிழ் ஆசிரியர் என்பதால் பொருத்தமான சொற்கள் தானாகவே வந்து அதனதன் இடத்தில் அமர்ந்து விடுகின்றன .
முதல் கவிதை “ குழந்தை “ மூலமே வாசிப்பவனை தன் வசமாக்கிக் கொள்கிறார் அதன் அர்த்தமும் , அழகும் நிறைந்த வரிகளால் .
அறியாப் பருவத்தில் , சூழலுக்கேற்ப அப்பா , அம்மாவில் ஆரம்பித்து டீச்சராக , பேருந்து ஓட்டுனராக , மீன் விற்கும் அக்காவாக , குடை பிடித்து வரும் அத்தையாக தன்னை எளிதாக மாற்றிக் கொள்ள இயலுகிறது குழந்தையால் எனச் சொல்லி நிறுத்தி ,
“ எவராலும் / மாற முடிவதில்லை / குழந்தையாக “ என முடியும் கவிதை வரிகள் வாசிப்பவன் மனதில் மீண்டும் குழந்தையாகும் ஏக்கத்தை உருவாக்காமல் அடுத்த கவிதைக்கு கடந்து போக விடாது .  
“ வாழ்க்கை / வாழ்வதற்கல்ல / பகிர்வதற்கு / சாட்சியாய் /
குழந்தைகளும் பொம்மைகளும் “ என்று “ பகிர்தல் “ எனும் கவிதையில் வாழ்வின் பொருளை எளிதாக பகிர்ந்து கொண்டிருக்கிறார் .
இயற்கையின் அருமையையும் அவசியத்தையும்  “ நதி “ மூலம் சில வரிகளில் உணர்த்தி விடுகிறார் .
“ வரைபட / உள்ளங்கையில் / கோடுகளாகத் தெரிவது / நதிகளல்ல /
உலகின் / எதிர்காலத்தை / நிர்ணயிக்கும் / ஆயுள் ரேகைகள் “
தேனிக்காரர் என்பதால் “ பென்னி குக் “ குறித்து எழுதாமல் இருக்க இயலுமா ?
காலமென்னும் சிலுவையில் / அறையப்படலாம் / உன் நினைவுகள் /
பள்ளத்தாக்குக் கவிஞர்கள் / நாங்களிருக்கிறோம் / எங்கள் / கவிதைகளால் / உயிர்த்தெழச் செய்வோம் / உன்னை . “
[ தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை இதுவென்பது கூடுதல் சிறப்பு . ]
“ பறவைகளில் / காகம் அழகானது / எச்சில் இலைகளை நோக்கி  /
ஓடும் மனிதர்களுக்கு மத்தியில் / நடைமுறைப்படுத்தும் /
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் / என்ற தமிழ் மரபை . “
என்று “ அழகியல் “ குறித்த வேறுபட்ட சிந்தனையைத் தூவியுள்ளார் .
கறுப்பு வெள்ளைக் கனவுகளை அடுக்கிச் செல்கையில் ,
“ அலைபேசி மணி அடிக்காத / மவுன அஞ்சலி நிகழ்வு “ ... என யதார்த்தத்தை தலையில் குட்டிச் செ[ சொ]ல்கிறார் .
அகப்பார்வை / அற்றவனாக / இருப்பினும் / உணர்கிறேன் / உன் /
தரிசனத்தை
*
மேனியெங்கும் / பரவும் / குளிர்ச்சியால் “  என்ற வரிகளில் உணரப்படும் “ தரிசனம் “ நிலவாலா , தென்றலாலா ... என்று வாசிப்பவனையும் யோசிக்க வைத்து விடுகிறது .
வெளிநாட்டில் வேலைக்குச் சென்றிருக்கும் கணவனை நினைத்து மனைவியின் கடிதமும் , பதிலாக கணவனின் கடிதமும் அடுத்தடுத்த கவிதைகளாக மனதை எதோ செய்கிறது .
“ விதவிதமாக / என்னவன் / நீ / அனுப்பிய வாசனை /
திரவியங்களிலிருந்து / ஏமாற்றத்தின் வாசனை “ [ அவள் ]
***************************
மனச் சுழலிற்குள் / சிக்கியவாறு நீ / மணற்சுழலிற்குள் /
சிக்கியவாறு நான் . “ [ அவன் ]
******************************
முதிர் கன்னியை இதழாக பாவித்து , வாசிப்பவர்களை துடிக்க வைக்கின்றன வரிகள் .
“ முன் அட்டையையும் / பின் அட்டையையும் / பார்க்கத் துடிப்பவர்கள் /
படிக்க நினைப்பதில்லை / உள் பக்கங்களை . “ 
பண்டிகைக் காலத்தில் வீடு ஒழுங்க வைக்கப் படுகையில் காணாமல் போன எத்தனையோ பொருட்கள் கிடைத்தும் கூட , கவிஞர் வருத்தமே படுகிறார் :
யாருமே தேடவேயில்லை / நீண்ட காலமாய் / காணாமல் போயிருந்த /
சிட்டுக் குருவியை . “
**************************
“ வாழ்க்கையென்னும் / பேருந்துப்பயணத்தில் / பயணச்சீட்டை /
பறக்க விட்டவர்கள் “ என உருவகப் படுத்துகிறார் குழந்தை தொழிலாளர்களை .
“ பொற்குவியலை / விரும்பமாட்டீர் / என்பதனால் / சொற்குவியலாய் / பெறுவீர் / எமது / கவிதையை “ என முடிக்கிறார் மறைந்த அப்துல் கலாம் அவர்களிடம் நேரில் வழங்கிய வாழ்த்துக் கவிதையை .
“ சாகுபடி இல்லாததால் / சாகும்படி ஆன / விவசாயிகளின் / விடியல் /
விளைநிலங்களில் / விளைச்சலில் “ என விவசாயியின் விடியலுக்கு விளக்கம் அளித்துவிட்டு
“ கவிஞனின் விடியலோ / சமூக இருட்டிற்கான / நிரந்தர வெளிச்சம் “ என முடிக்கிறார் .
லெபனான் நகரின் பெய்ரூத் வீதிகளெங்கும் வீசும் ஆலிவ் இலைகளின் வாசனையில் துவங்கி
“ இடைவிடாது வீசும் / தென்றல் காற்று / ஆலிவ் இலைகளின் /
வாசனையை / பரவச்செய்யும் / உலகம் முழுவதும் “ என முடிக்கும் கவிதையில் உள்ள உருவகங்களும் , படிமங்களும் வாசிப்பவனை எங்கெங்கோ இட்டுச் செல்கின்றன .
“ ஓர் / அடைமழை நாளில் / ஒற்றை மெழுகுவர்த்தியாய் /
எனக்காக உருகிய / அம்மா / அணைந்து போனாள்
வறுமைக் காற்றில்
என்ற கடைசிக் கவிதையின் வரிகள் உருகத்தான் வைக்கின்றன நம் மனதையும் .
கவிதை வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இந்தத் தொகுப்பை வாசிக்கையில் வரிகளின் அழகாலும் , வலிமையாலும் , ஆழத்தாலும் ஈர்க்கப் படுவார்கள் .
அடுத்த தொகுப்பை விரைவில் வெளிக் கொண்டு வர இருக்கும் கவிஞர் கூடல் தாரிக் அவர்களுக்கு வாழ்த்துகள் . 
________________________________________________________________________


    

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

புத்தக அறிமுகம் .


காதல் வாசம் – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – ஓமலூர் பாலு .
ஓவியா பதிப்பகம் ,
வத்தலக்குண்டு .

84 பக்கங்களிலும் காதல் ... காதல் ... காதல் ... ஆசிரியரின் வார்த்தைகளில் சொன்னால் இந்த கவிதைத் தொகுப்பு வாழ்வின் விளிம்பு வரையும் காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு . “ ஆனால் முழுமையாகப் படித்து முடிக்கும் போது , ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை மட்டுமே இவரது கவிதை வரிகள் உணர்த்தவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது . பெண் மீது உருவாகும் காதலை மேற்பரப்பில் தெரிய வைத்து உள்ளுக்குள் இயற்கை , சமூகம் என எல்லாவற்றின் மீதும் ஏற்படும் காதலை புதைய வைத்துள்ளார் என்றே படுகிறது .
உன் வீட்டின் / சாதியெனும் தக்கையை வைத்து / நம் காதல் கப்பலை / கவிழ்க்க முடியுமா சொல் ... ?
உன் / நெற்றி பார்த்த / முழுநிலவு முடிவெடுத்தது / இன்று முதல் / பிறையாக மாற ...
உன் புருவங்கள் பார்த்து / ஏக்கம் கொண்டது / மழைக்கால – தற்காலிக / வானவில் ...
என்று ஒவ்வொரு வரியிலும் இயற்கையை மறக்காமலே இருக்கின்றார் கவிஞர் .

அடுத்த தொகுப்பில் தம் பார்வையை முழுவதுமாக சமூகம் பக்கமாக திருப்ப விரும்புவதாக கூறியுள்ளார் தன் உரையில் .

வரவேற்போம் .