செவ்வாய், 6 அக்டோபர், 2015

கவிஞனின் மொழி .


கவிஞனின் மொழி .  

கவிஞனின் மனதிலிருந்து
கவிஞனின் மொழி வழி
கரைசேரும் கவிதையையுணர
தேவைப்படலாம் வாசிப்பவனுக்கும்
கவிஞனின் மனம்
தெரிந்திருக்கவும் வேண்டும்

கவிஞனின் மொழி .  


 [ புதுப்புனல் மே 2015 ]

திங்கள், 5 அக்டோபர், 2015

பகலின் கனவுகள் .


பகலின் கனவுகள் .


இரவுகள்

எப்போது விடியுமெனத்

தெரியாது

கனவு கண்டுகொண்டிருக்கின்றன

சில பகல்பொழுதுகள் .


[ புதுப்புனல் மே 2015 ]

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

நாங்களிருக்கிறோம் .


நாங்களிருக்கிறோம்

நாளைக்கென்று ஏதுமில்லை
கவிதைகள் என்னிடம்
எனினும் கவலைகள்
ஆறுதல் கூறுகின்றன
நாங்களிருக்கிறோம்

கவலைப் படாதேயென்று . 

 [ புதுப்புனல் ஏப்ரல் 2015 ]

சனி, 3 அக்டோபர், 2015

மிதக்கும் கவிதை .




மிதக்கும் கவிதை .

கைகளும்
காகிதங்களும்
காத்திருக்கின்றன .
தலை வழியே இறங்குவதா
அல்லது
நெஞ்சிற்குள்
சென்று வருவதாவெனப்
புரியாது
அந்தரத்தில் இன்னும்
மிதந்து கொண்டிருக்கிறது

கவிதையொன்று .


[ புதுப்புனல் மே 2015 ]

வெள்ளி, 2 அக்டோபர், 2015

கொஞ்ச நம்பிக்கை .


கொஞ்ச நம்பிக்கை .

எல்லோரையும் தெரிந்துதான் இருக்கிறது
ஆயினும்
எல்லாமும் தேவைப் படுகிறதென்பதால்
தேர்வு செய்யப் படுகின்றன
உறவுகளும் , நட்புகளும் – கடவுள்களும் கூட
அவ்வப்போதைய தேவைக்கேற்றவாறு .
எனினும்
எஞ்சியிருக்கிறது கொஞ்ச நம்பிக்கை
என்றேனும் ஒருநாள்
அணைத்துக் கொள்ளலாம்

அனைத்தையும் ஒரு சேரவென்று .

[ புதுப்புனல் ஏப்ரல் 2015 ]

வியாழன், 1 அக்டோபர், 2015

அகல மறுப்பவை ....


அகல மறுப்பவை ....

மலையில் இருந்து இறங்கிய போது
வளைவருகில்
கீழே கண்ட பச்சைப் புல்வெளி .
முன்னிரவு நேரத்தில்
பாலத்துச் சுவரில் அமர்ந்திருந்த போது
தொட்டுச் சென்ற தென்றல் காற்று .

அழைக்காமலே
அருகில் வந்து படபடத்த பட்டாம்பூச்சியின்
வர்ண இறைப்பு .

துருவேறிய ஜன்னல் கம்பிகளுக்கு
வெளியே சிரித்த
சிவப்புச் செம்பருத்தி .

நிலாவற்ற கரு வானத்தில்
இறைத்திருந்த நட்சத்திரங்கள் .
சாளரங்களை மூடிய பின்னும்
காதுகளை வருடிய தூரத்து இசை
காரணமே இல்லாமல்
தொலைந்து போன நட்பு .

மறந்து போன இன்னும் சில...
இனி வரலாம் மேலும் பல ...

[ காக்கைச் சிறகினிலே “  -  ஆகஸ்ட் 2015 ]

புதன், 30 செப்டம்பர், 2015

எஞ்சியவையாவது மிஞ்சட்டும்.....


வலைப்பதிவர் திருவிழா 2015 “ மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “ மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015 “
“ புதுக்கவிதைப் போட்டிக்கான கவிதை “

எஞ்சியவையாவது மிஞ்சட்டும்.....

பறந்து கொண்டிருக்கிறோம்
பரிணாமத்தின் உச்சம் தேடி .
மறந்து கொண்டிருக்கிறோம்
மனிதப் பண்பாட்டின் கூறுகளை மட்டும் .

ஆதி ஆரம்பத்தில் வனங்களில்தான் வாழ்ந்தோம்
எல்லா உயிரும் சமமென்றுதான் இருந்தோம்
ஒன்றாய் உழைத்து நன்றாய் வாழ்ந்தோம்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பினோம் .

முதலில் மரங்களை வெட்டினோம் மறைவிடம் தேடி
மறையத் தொடங்கின மற்றவையும் கொஞ்சம் கொஞ்சமாய்
பின்னர் வேர்களையும் விட்டு வைக்கவில்லை
இன்றோ வளர்ச்சி எனும் கானல் நீர் கண்களை மறைக்க
அழித்துக் கொண்டிருக்கிறோம் மனிதப் பண்பாட்டின்
எஞ்சியிருக்கும் கொஞ்சம் விதைகளையும் .

வாழு , வாழ விடு என்பதே மனிதப் பண்பாடு
தான் வாழப் பிறரை அழிப்பது பெருங்கேடு .
சுற்றி நடப்பதை உற்றுக் கவனித்தால்
பற்றி எரிகிறது மனம் ஒவ்வொரு கணமும் .

வளர்ச்சி என்றாலே பணம்தான் எனும் மாயை
வளர்த்து விட்டது மனித மனதில் பல நோயை
விரட்டியடிப்போம் இனியாவது அந்தப் பேயை .

எஞ்சியிருப்பதை வளர்த்தெடுப்போம்
அடுத்த தலைமுறையையாவது வாழ விடுவோம்
வாழ்வதற்கேற்ற வளமான புவியில் .

                                       - சுப்ரா .
உறுதி மொழிகள் :
1 ] இந்தப் படைப்பு எனது சொந்தப் படைப்பே .
2 ] இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 “ மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “ மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015 “ க்காகவே எழுதப்பட்டது .
3 ] இது இதற்கு முன் வெளியான படைப்பல்ல . முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது .
4 ] வலைப்பதிவுக் கையேடுக்கான விபரங்கள் அனுப்பியுள்ளேன் .

பதிவரின் பெயர் : வே . சுப்ரமணியன் [ சுப்ரா ]