திங்கள், 22 செப்டம்பர், 2014

பயணம் .


இடை நில்லாப் பேருந்து வழியில் எங்கும்
நிற்காது 
ஒட்டப்பட்டிருந்தது முன் பக்கக் கண்ணாடியில் .
ஏறி இடது புறம் மூன்றாவது வரிசையில் 
இடம் பிடித்து அமர்ந்தேன் ஜன்னலோரம்.
பேருந்து நிரம்ப ஆரம்பித்தது கொஞ்சம்
கொஞ்சமாக .
அருகில் வந்தமர்ந்தவனுக்கு வயது கம்மிதான் .
அமர்ந்த மறு கணமே 
காதுகளில் இசை வாங்கி பொருத்தி 
 கண்களை மூடிக் கொண்டான் .
நடத்துனரிடம் நீட்டிய முழு நோட்டுக்கு 
 சீட்டையும் சில்லறையும் கொடுத்தார் 
முகத்தைச் சுளிக்காமல்.
எங்கே என்று அவரும் கேட்க வில்லை 
எங்கே என்று நானும் சொல்ல வில்லை 
எங்கே என்று தெரிந்திருந்தால் 
ஏறியிருக்கவே மாட்டேன் அந்தப் பேருந்தில் .


[ புதுப்புனல் ஆகஸ்ட் 2014 ]


ஞாயிறு, 21 செப்டம்பர், 2014




மனக்கால்
வேர்த்து விறுவிறுத்து
வியர்த்தமாய்
வெகுதூரம் ஓடி முடித்த
பின்னும்
நிற்க மனமில்லை
குதிரையின் கால்களுக்கு .


[ புதுப்புனல் மார்ச் 2014 ]

வியாழன், 18 செப்டம்பர், 2014


அருவி இதழ் 20 ஹைக்கூ சிறப்பிதழில் வெளியானவை .

நிறைய பொம்மைகள்
நிறைய தின்பண்டங்கள்
நிற்பது அம்மாவின் முத்தம்தான் .

எப்போதும் படபடப்பு
சன்னலருகில்
வண்ணத்துப்பூச்சி .

தொலைவில் இடி
பார்வையில் மின்னல்
காலடியில் ஈரம் .

காற்று இருக்கிறது
தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்
அடுத்தவர்கள் தானியத்தை .

வழியெங்கும் பூக்கள்
விதவையின்
இறுதி ஊர்வலம் .

நிலம் கரைந்து
பகை மறந்து விட்டது
வழக்கு முடியவில்லை .

[ அருவி இதழ் 20 ஜனவரி – மார்ச் 2014 ]



புதன், 17 செப்டம்பர், 2014



விடியல்

முகம் தொலைந்த ஓர்
இரவு நேரத்தில்
அவன் கனவுகள்
வான்கோவின்  வர்ணச் சிதறல்களாகி
துரத்தின .
தூரத்தில் ஒலிக்கும்
சங்கீத ஸ்வரங்கள்
மூடிய காதுகளை நிரப்பின .
திறந்திருந்த சாளரங்கள்
மறுகரைக் காற்றால்
அடித்து மூடப் பட்டன .
பின்னமான சிலையின்
இதயச் சிதறல்கள்
துவாரங்களில் பதிந்து மறைந்தன .
துரத்தி வாட்டும் ஊதற் காற்றின்
நடுவே
தொலைந்த முகத்தை
தேடி ஓடிய
தூரம் தேய்வதுற்குள்
இருளை விழுங்கிய
எதுவோ ஒன்று .


[ புதுப்புனல் ஏப்ரல் 2014 ல் வெளியான கவிதை ].

நன்றி : புதுப்புனல் .


செவ்வாய், 16 செப்டம்பர், 2014



அருவி இதழ் 21 , 22 ஏப்ரல் - செப்டம்பர் 2014 ல் வெளியான என் கவிதை .


எழுதப் படும் எல்லா வரிகளும்
ஏற்கனவே எழுதப்பட்டு விட்டதாகவே
இருக்கின்றன .

யாரால்... எப்போது ... எங்கே ...
எதுவும் தெரியவில்லை .

எனினும்
எழுதப்பட்டு விட்டன என்றே
உணரத் தோன்றுகிறது .

வாழ்க்கையும் அப்படியேதான்
எத்தனை விதமாக வாழ முயற்சித்தும்
ஏற்கனவே யாராலோ
எப்போதோ
வாழப்பட்டு விட்டதாகத்தான்
தோன்றுகிறது .

அதனால்தான்
வாழ்க்கையும் கவிதையும்
அதனதன் போக்கில்
இயங்கிக் கொண்டே இருக்கின்றன .

[ நந்தலாலா இணைய இதழ் – 017   வைகாசி – 2014  இதழிலும் வெளியாகி உள்ளது ]

நன்றி : அருவி மற்றும் நந்தலாலா .




" நிழல் பெறும் மரங்கள் . "

வழிப் போக்கன்
உரித்ததனால்
தோல் இழந்து ,
காக்கையின் எச்சத்தால்
அழகிழந்து ,
கல்லடி பட்டதினால்
கரு சிதைந்து ,
நெருப்புக்காக
அங்கங்கள் முறிக்கப் பட்டு ,
இயற்கையின் சதியால்
நீரின்றி வாடி ,
தகிக்கும் வெயிலால்
துவண்டு ,
கறையானுக்கு இரையாகி
உடல் குலைந்து ...
முடிவு தெரிந்தும்
கலங்காத மோனத் தவத்தில்
இடைவிடாது
தன் மெலிந்த கரங்களை நீட்டி
இயன்ற வரை
தருகின்ற நிழல்
பெற்று இளைப்பாறும்
மனித மரங்கள் .


[ புதுப்புனல் ஆகஸ்ட் 2014 ]

திங்கள், 15 செப்டம்பர், 2014


குடை .
      கட்டக் ...கடக்...கட்டக்...கடக்...
      கலவை மெஷின் சீராக ஒடிக்கொண்டிருந்தது . குடம் கவிழ்ந்து கலவை பொலபொலவென்று தரையில் கொட்டியது .
“ முனுசாமி , ஜல்தியா அள்ளிவிடுப்பா . வானம் மூடுது . மழை வந்தாலும் வரும் . “ பொன்னுசாமி மேஸ்திரி குரல் பின்னால் கேட்டது .
முனுசாமி குனிந்து கலவையை அள்ளி காத்திருந்த சட்டிகளில் கொட்டினான் . கொட்டிய கலவை அத்தனையையும் அள்ளி விட்டுவிட்டு நிமிர்ந்து வானம் பார்த்தான் .
மழைக்கான அடையாளங்கள் நிறைய இருந்தன . அடுக்கி வைத்திருந்த மூட்டைகளைப் பார்த்தான் . ஆறு மூட்டைகள்தான் இருந்தன. அரை மணி நேரத்தில் முடிந்து விடும் . அதற்குள் மழை வராது.
கோவிந்தன் அடுத்த லோடைக் கவிழ்த்தான் . மேஸ்திரி சாரத்தில் நின்று கொண்டிருந்தவர்களை விரட்டினான் . புகையிலை போட சட்டியை நிறுத்திய அம்ஸாவைத் திட்டினான் . அம்ஸா உதட்டைச் சுழித்து தோள்களைக் குலுக்கினாள் . மேஸ்திரியின் சப்தம் வேகத்தைக் கூட்டியது.
அரை மணி நேரத்தில் கடைசி லோடு கவிழ்க்கப் பட்டது . சிதறிக் கிடந்த கலவையை வழித்து வாரி விட்டான் முனுசாமி . கடைசி சட்டி நகர்ந்ததும் , மெஷினில் சாய்ந்து பீடி பற்ற வைத்துக் கொண்டான் .
“ சட்டியைக் கழுவி வச்சிட்டு வரிசைக்கு வாங்க . சுருக்கா கூலியை வாங்கிட்டு மழைக்கு முன்னாடி போயிடலாம் . “ பொன்னுசாமி தாவித் தாவி சாரத்தில் ஏறி மேலே போனான் .
சனிக்கிழமை . கூலிநாள் . முனுசாமி பீடியை எறிந்து விட்டு கைகால் கழுவும் போது முதுகில் முதல் தூறல் விழுந்தது .ஒன்றிரண்டாக விழத் தொடங்கிய தூறல் சிறிது நேரத்தில் பலமாகி விட்டது . கூலி வாங்க நின்ற கூட்டம் கலைந்து போன வாரம் கூரை போட்டிருந்த அடுத்த கட்டிடத்திற்குள் நுழைந்தது .
முனுசாமியும் உள்ளே போனான் . பிரிக்கப்படாத முட்டுகளுக்கு நடுவே நுழைந்து தோதான இடம் பார்த்து நின்றான் . வெளியே தூறல் பலமாக விழுந்தது . அம்ஸாவும் கிட்டப்பாவும் உரக்கச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள் . கோவிந்தன் மழையில் நனைந்தவாறே மெஷினை தார்பாய் போட்டு மூடிக் கொண்டிருந்தான் .
மேஸ்திரி முனுசாமிக்கு எதிரில் வந்து நின்றார் . நோட்டைப் பார்த்து பணத்தை எண்ணிக் கொடுத்தார் . இருநூற்று எண்பது .
வெளியே தூறல் நின்று போயிருந்தது .கூட்டம் வெளியேறி வானம் பார்த்தது . மீண்டும் மழை வருவதற்கான அறிகுறிகள் கண்டு வேகமாகக் கலைந்தது .
முனுசாமியும் வெளியே வந்தான் . டவுன் பஸ் எட்டு மணிக்குத்தான் . கால்மணி நேர நடை தூரத்தில் பஸ் நிலையம் . போய் விட்டால் இடம் பிடித்து உட்காரலாம் . நடையை வேகமாக்கினான் .
கடைவீதியில் நுழைந்து காந்தி சிலை அருகில் வரும் போது சடசடவென்று மழைத்தூறல் விழுந்தது . மறு விநாடியே பெரும் மழை பிடித்துக் கொண்டது . பக்கத்தில் இருந்த கடையின் தட்டியடியில் ஒதுங்கி நிற்பதற்குள் இலேசாக நனைந்துவிட்டான் .
கடைவீதியில் பஸ் நிற்குமிடம் நூறடி தூரத்தில் இருந்தது . தட்டியடியிலேயே நடந்து நனையாமல் போய் விடலாம் . கூட்டம் பிதுங்கி வழியத்தான் செய்யும் . நின்று கொண்டுதான் போக வேண்டும் . வேறு வழியில்லை  .
மழை சடசடவென்று கொட்டியது . கடை வீதி காலியாய்ப் போய் அத்தனைக் கூட்டமும் கடை வாசல்களில் ஒதுங்கியது .
“ மழ வரும்னு நெனைச்சேன் . ஆனா இப்படிப் பேய் மழையா வரும்னு நெனைக்கலை “ பக்கத்தில் யாரோ பேசினார்கள் .
மழையினால் சீக்கிரமாகவே இருள் பரவியது . கடை வீதியின் அத்தனை விளக்குகளும் சிறிய இடைவெளிகளில் ஒளிர ஆரம்பித்தன .
நின்ற இடத்தில் நின்றவாறே மழையையும் , மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான் முனுசாமி . அவ்வளவு கூட்டத்திற்கு இடையில் , நனையாமல் பஸ் நிற்குமிடத்திற்குப் போக முடியாது .
கடைவீதியில் ஓடிய மழை நீரை இரு பக்கமும் இறைத்தவாறு அவ்வப்போது விரையும் கார்களைத் தவிர வீதியில் வேறு நடமாட்டம் இல்லை .
முனுசாமி கடைகள் பக்கம் பார்வையை ஓடவிட்டான் . ஒதுங்கி நின்றவர்களில் சிலர் கடைகளுக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள் . அவர்களின் உண்மை நோக்கம் மழையில் இருந்து தப்புவதுதான் என்றாலும் , கண்ணில் படும் பொருட்கள் அவர்களிடம் வாங்கும் ஆவலைத் தூண்டினாலும் தூண்டும் என்ற எதிர்பார்ப்பில் கடைக்காரர்களும் அவர்களைத் தடுக்கவில்லை .
முனுசாமி நின்று கொண்டிருந்த கடை பெரியதாகவே இருந்தது . பளபளவென்ற அடுக்குகளில் டப்பாக்கள் , பாட்டில்கள் , பொம்மைகள்... தொங்கும் வாளிகள் , கூடைகள் , பைகள் , பந்துகள் ... தினசரி அந்த வழியாகவே போய்வந்தும் கூட அவன் உள்ளே நுழைந்தது கிடையாது . சும்மா உள்ளே போய் பார்க்கலாமா என்று தோன்றியது . ஏற்கனவே உள்ளே நுழைந்தவர்கள் அணிந்திருக்கும் பொய்ப் பார்வை தனக்குச் சாத்தியமாகாது என்று தோன்றியது .
‘ கிர்ர்ச் ... ‘
திடீரென்று போடப்பட்ட காரின் பிரேக் சப்தம் அவனைத் திரும்ப வைத்தது . நடமாட்டமே இல்லாமல் இருந்த வீதி பரபரப்பாக மாறிப் போயிருந்தது . மழை குறையாது என்பது தெரிந்து விரித்த குடையுடன் நடமாட்டம் ஆர்ம்பமாகியிருந்தது .
அப்படி விரித்த குடையுடன் சாலையைக் கடந்த ஒருவன் மீது மோதலைத் தவிர்க்கவே அந்தக் கார் அவ்வளவு வேகமாக நிறுத்தப் பட்டிருந்தது . காரின் மூடிய கண்ணாடிக்குள் காரை ஓட்டியவர் கையை ஆட்டி ஏதோ திட்ட அடிபட இருந்தவனும் பதிலுக்குக் கையை ஆட்டித் திட்டினான் . கார் கிளம்பிவிட்டது .
முனுசாமி சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் . விரித்த குடையுடன் மழையை வென்றுவிட்ட கூட்டம் . இத்தனை பேருக்கும் மழை வரும் என்று எப்படி தெரியும் ? குடை மழைக்கு மட்டுமில்லை வெயிலுக்கும்தான் என்பது புரிபட சந்தேகம் அகன்றது .
கீழே விழும் மழைத் துளிகளைத் தன்மீது தாங்கி அவற்றின் திசையைத் திருப்பி , தன் கீழுள்ளவர்களைக் காப்பாற்றும் குடைகளை வேடிக்கை பார்த்தான் . ஒரு குடை போல இன்னொரு குடை இல்லாத விபரம் கவனித்தான் .
எத்தனை வகைக் குடைகள் ! கறுத்த பூதம் தலை விரித்தாடுவது போன்ற தாத்தாக் குடைகள்தான் நிறைய . சில புதிது . சில பழசிலும் பழசு. அங்கங்கே ஓட்டைகள் . ஒட்டல்கள் . சிறிய குடைகள் . பெரிய குடைகள் . நடுத்தரம் .முரட்டுத்துணி . பளபளவென்ற மென்மைத் துணி .
கறுப்பர்களுக்கு நடுவே வெள்ளையர்களாக வித வித வர்ணங்களில் , விதவித மாதிரிகளில் புதுவகைக் குடைகள் . சிறிதென்றாலும் அழகாக இருந்தன . மழைத் துளிகள் கூட அவற்றின் மீது விழும் போது , அவற்றின் மென்மை கண்டு உக்கிரம் குறைந்து விடுவதாகத் தோன்றியது .சிவப்பு , பச்சை , நீலம் , மஞ்சள் , வட்டங்கள் , பூக்கள் , பட்டைக் கோடுகள் , மெல்லிய கோடுகள் , எத்தனை விதக் குடைகள் !
குடைகளின் அழகில் லயிதிருந்தபோதுதான் தோன்றியது . ஒரு குடை வாங்கினால் என்ன ?
குடை வாங்கிவிட்டால் நனையாமல் பஸ் நிற்கும் இடம் வரை , ஏன் பஸ் நிலையத்திற்கே போய்விடலாம் . மழை நேரத்தில் கடைக்குப் போய்வரலாம் . அவனைவிட மல்லிகாவுக்கு குடை அதிகம் பயன்படும் . மழை இல்லாத நேரங்களில் கூட மத்தியான வெயிலில் காயாமல் இருக்கலாம் . வெயிலோ , மழையோ கவலைப்படாமல் அவசர வேலைகளுக்கு வெளியே போய் வரலாம் .
மனம் அடுக்கடுக்காய் காரணங்களை உருவாக்கியது . ஒரு முடிவுக்கு வந்தவனாக கடைக்குள் பார்த்தான் . விதவிதமான குடைகள் தொங்கிக் கொண்டிருந்தன . விலை பற்றிய பயம் சட்டென வந்தது .நூறு ரூபாய்க்குள் இருந்தால் வாங்கி விடுவது என்று உள்ளே நுழைந்தான் .
வாங்க ... என்ன வேணும் ? “ கல்லாவில் இருந்தவர் குரல் மிகவும் அந்நியோன்யமாக வெளிவந்தது .
“ குடை வேணும் பாய் . “
“ பாருங்க நெறைய இருக்கு ... ஸெய்யது ! சாருக்கு குடை காட்டு.
பையன் விதவிதமான குடைகளைக் காட்டினான் . விலை சொன்னான் . முனுசாமி எதை வாங்குவது என்று குழ்ம்பினான் .
“ இதா இத வாங்கிக்குங்க . நாலு பேரு தாராளமாப் போகலாம் . ஃபஸ்ட் கிளாஸ் துணி . கம்பி ஜாயிண்டெல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கும் . கம்பெனி அந்த மாதிரி . இதே கம்பெனி குடை ஒண்ணு நம்ம வீட்ல பதினஞ்சு வருஷமா இருக்கு . “ அவன் குழப்பத்தை உணர்ந்த கடைக்காரர் கையில் விரித்த குடையுடன் சொன்னார் . முனுசாமியின் பார்வை மீண்டும் மேலே தொங்கிய வர்ணக் குடைகளிடம் சென்றது .
“ அதெல்லாம் பார்க்க நல்லா இருக்கும் . ஒரு ஆள்தான் போகலாம். கொஞ்சம் காத்து பலமா வீசினா வானம் பார்க்க மடங்கிக்கும் . இதய வாங்கிக்க . தொன்னூறு விலை . எண்பத்தஞ்சு கொடு . “
முனுசாமி குடையை வாங்கிக் கொண்டான் . பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் . மழையின் தீவிரம் குறையவில்லை .
குடையை விரித்தான் . கடைவீதியில் இறங்கி நடந்தான் . தலைக்கு மேல் மழை குடையில் விழுந்து தடதடத்தது .மழையை வென்றுவிட்ட பெருமிதத்தில் நடை வேகமாக விழுந்தது .
பஸ் நிலையத்தில் புறப்பட தயாராக , எல்லா ஜன்னல்களும் மூடப்பட்ட பஸ் நின்று கொண்டிருந்தது . ஏறினான் . காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்து மடக்கிய குடையை கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டான் .
ஐந்து நிமிடத்தில் பஸ் நிரம்பிவிட்டது . பஸ் முழுவதும் சொதசொதவென்று ஈரம் . அநேகமாக பாதி பேர் முழுக்க நனைந்திருந்தார்கள் . குடை இல்லாதவர்கள் .
நடத்துனர் விசிலடிக்க பஸ் புறப்பட்டது . ஓடும் பஸ்ஸின் மேலும் , பக்கவாட்டிலும் மழையின் தடதட ஓசை . ஓட்டுநர் பஸ்ஸை மெதுவாகத்தான் ஓட்டினார் . முன் கண்ணாடியில் அடர்த்தியான மழைத் தாரை . போகப் போகக் கூட்டம் அதிகமானது .
ஆற்றுப்பாலம் தாண்டி மூலக்கடையில் பஸ் நின்றதும் , முனுசாமி கூட்டத்தில் நுழைந்து வெளியேறி இறங்கினான் . மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது . குடையை விரித்துப் பிடித்தான் . பிரிவு பாதையில் நடந்தான் . ஒரு மைல் போக வேண்டும் . வழியில் வேறு யாருமில்லை . நல்ல இருட்டு . மழையின் தடதடப்பும் , மழை நீர் ஓடும் சலசலப்பும் , தவளைகளின் கொணகொணப்பும் காதை அடைத்தது .
குடையின் உதவியால் முழங்காலுக்கு மேல் நனையவில்லை . குடை இல்லாமல் இருந்தால் சுத்தமாக நனைந்திருப்போம் என்று நினைத்துக்கொண்டான் . சட்டைப் பையில் இருந்து பீடியை எடுத்து , நின்று பற்ற வைத்துக்கொண்டு மீண்டும் நடந்தான் .
வெகு தூரத்தில் இருந்தே முனியப்பன் கோவிலருகே காணப்பட்ட பரபரப்பு தெரிந்தது . அந்த நேரத்தில் கோவிலில் ஏன் அவ்வளவு கூட்டம் . பண்டிகை தினம் இல்லை . பாதி வழியில் மழையில் சிக்கிக் கொண்டவர்களா ? சிம்னி விளக்குகளின் ‘ முணுக் முணுக் ‘ மழைக்குள்ளாகத் தெரிந்தது . பீடியைத் தூர எறிந்து விட்டு நடையைத் துரிதப்படுத்தினான் .
முனியப்பன் கோவிலின் கூரை வேய்ந்த பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது . முனியப்பன் முன்னால் தொங்கிய பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சம் ‘ பளீர் ‘ என்று மிதந்து கொண்டிருந்தது .
அத்தனையும் அவன் ஊர் ஆட்கள்தான் . ஏன் இங்கே நிற்கிறார்கள்?
“ முனுசாமியா ? “ ஊர்ப் பெரியவர் வேலுச்சாமி கண்களை , கைகளால் இடுக்கிப் பார்த்தார் .
“ ஆமாண்ணே ! ... ஏன் எல்லோரும் இங்கே நிக்கீங்க ? “
“ அத ஏன் கேட்கறே . தெக்க மலையில காலையில இருந்தே பேய் மழை . திடீர்னு காட்டாறு ரொம்பி கரையெல்லாம் ஓடுது . நம்ம இடத்தில எல்லாம் ஓராளு உயரத்துக்கு தண்ணி . இந்நேரம் அதையும் தாண்டியிருக்கும் . நல்லவேளை முதல்லய கையில கெடச்சதை எடுத்துக்கிட்டு ஓடியாந்துட்டோம் . “
ஆளுங்க யாருக்கும் ... “ முனுசாமி பதறினான் .
“ நல்லவேளையா முனியப்பன் புண்ணியத்தில எல்லாரும் தப்பிச்சாச்சு . ஆடு , கோழிங்களைக்கூட ஓட்டியாந்துட்டோம் . குடிசைங்களும் , விட்டுவிட்டு வந்த சாமான்களும்தான் போச்சு . சரி சரி முதல்ல போய் உம் பொஞ்சாதியப் பாரு . அந்தா அந்தக் கொட்டகையில பொம்பளைக எல்லாம் ஒதுங்கியிருக்காளுக . உன்னைக் காணமேன்னு விசனத்தோட இருக்கு . அட்டே !... குடை வாங்கினியா ? ... அதான் நனையாம வந்திருக்கே . “
முனுசாமி பதில் கூறாமல் குடையை மடக்கினான் . வேலுச்சாமி அருகில் அதைச் சாய்த்து வைத்துவிட்டு வெளியே வந்து நனைந்தவாறே பக்கத்து கொட்டகை நோக்கி நடந்தான் .
“ குடையை வச்சுட்டு நனைஞ்சுக்கிட்டு போறியே ! “
நிரந்தரக் கூரையை இழந்துவிட்ட சோகத்திலும் , மீண்டும் அதை உருவாக்க , பட வேண்டிய கஷ்டத்தைப் பற்றிய சிந்தனையிலும் , முனுசாமி தற்காலிகமாக மழையில் நனைவதைப் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருந்தான் .
“ பைத்தியக்காரனா இருக்கானே ! புதுக் குடையை வச்சுகிட்டு இப்படி நனையறானே . “ வேலுச்சாமி குடையை விரித்துப் பிடித்தவாறே வெளியே வந்து நின்று மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார் .
 1993 அக்டோபர் சுபமங்களாவில் வெளியாகி , அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இலக்கிய சிந்தனை அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது .
தேர்ந்தெடுத்தவர் : எஸ் . ராமகிருஷ்ணன் .

“ உருவ கட்டுப்பாட்டில் , அழகில் , கவிதையின் தரத்தைத் தொடும் கதை இது . “ -  எஸ் . ராமகிருஷ்ணன் .