சனி, 23 நவம்பர், 2019

வதை



வதை     


[  நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2019 மற்றும் தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை ]    
                         -


குக்கூகுக்கூ ….  சீனா கடிகாரம் எழுப்பிய உரத்த குரல் கேட்டு கண் விழித்தான் பிரபு . கீதாமணி ஐந்தாயிட்டுதா ? “ என்றாள் கண்களைத் திறக்காமலே .
ஆமாம் . நான் போய் வர்த்தினியை எழுப்புகிறேன் . நடன வகுப்புக்கு போய்ட்டு வந்து குளிச்சிக்கிடறோம் . காஃபி வழியில் குடிச்சுக்கிறேன் . வெளியே பூட்டிட்டு சாவியைக் கையில் கொண்டு போயிடறேன் . “
இன்னைக்கு புதன் கிழமைல்ல . ஏழு மணிக்கு ம்யூசிக் வகுப்பும் உண்டு . “ கீதா படுக்கையில் இருந்து எழாமலே பதில் கொடுத்தாள் .
பிரபு வர்த்தினி படுத்திருந்த அறைக்குச் சென்று கதவைத் திறந்து நுழைந்தான் . வர்த்தினி கழுத்து வரை போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் . பிரபு அருகில் சென்று மெதுவாக குரல் கொடுத்தான் . “ குட்டிம்மா எழுந்திரு . டான்ஸ் க்ளாஸ் போகணுமில்ல . “ வர்த்தினி எழவில்லை . இரவு வெகுநேரம் உட்கார்ந்து படித்த அசதி . “ தூக்கமா வருதுப்பா . கொஞ்ச நேரம் கழிச்சு எழுந்திருக்கவா ? “ என்றாள் மெல்லிய குரலில் .
மணி ஐந்தாயிடுச்சு . இப்போ எழுந்தாத்தான் ஐந்தரை மணிக்கு டான்ஸ் க்ளாஸிற்குப் போக முடியும் . ஏழு மணிக்கு ம்யூசிக் க்ளாஸ் வேற போகணும் . அப்புறம் வந்து ஸ்கூலுக்கு போகணும் . எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு ஞாயிற்றுக்கிழமை பத்து மணி வரை தூங்கலாம் குட்டிம்மாவும் , அப்பாவும் . சரியா ? “
சரியாக தூக்கம் கலையாமல் எழுந்து குளியல் அறை நோக்கி நடந்த எட்டு வயது வர்த்தினியைப் பார்க்கையில் பிரபுக்கு மனம் சங்கடப் பட்டது . வர்த்தினி தயாராவதற்குள் அவனும் குளியலறைக்குச் சென்று தயாராகி உடைகளை மாற்றிக் கொண்டான் . மீண்டும் வர்த்தினியின் அறைக்கு வந்தபோது வர்த்தினி தயாராக இருந்தாள் .


அதிகாலை என்பதால் சாலையில் போக்குவரத்து அதிகமில்லை . பத்தே நிமிடங்களில் நடனப் பள்ளியை அடைந்து விட்டது கார் . வர்த்தினியை உள்ளே அனுப்பிவிட்டு அருகில் இருந்த தேநீர் கடைக்குச் சென்று சூடாக காஃபி சாப்பிட்டுவிட்டு வாகனத்தை அருகில் இருந்த மரத்தின் நிழலில் நிறுத்தி இருக்கையில் சாய்ந்தவாறே தூங்கி விட்டான் .
அப்பா , போகலாமா ? “ வர்த்தினியின் குரல் கேட்டதும் விழித்துக் கொண்டு முன் கதவைத் திறந்து விட்டான் . வர்த்தினி ஏறிக் கொண்டாள் .
வீட்டையடைந்து இருவரும் குளித்துவிட்டு கீதா பரிமாறிய இட்லிகளைச் சாப்பிட்டு முடித்தபோது மணி ஆறே முக்கால் . மீண்டும் பயணித்து நடன வகுப்பை அடைந்தபோது மணி ஏழு . வர்த்தினி அவசரமாக உள்ளே போனாள் . பிரபு நிழல் பார்த்து வாகனத்தை நிறுத்தினான் . கைபேசி அழைத்தது .
ஹலோமிஸ்டர் பிரபுவா ? நான் இயக்குனர் ராம் சங்கர் பேசறேன் . இப்ப பண்ணிக்கிட்டு இருக்கிற படத்தில ஒரு சின்ன குழந்தைப் பாத்திரம் . உங்க மகள் ஞாபகம் வந்துச்சு . இன்னைக்கு சூட்டிங் இருக்கு . வர முடியுமா ? மகாபலிபுரம் போற வழியில கடற்கரை ஸ்பாட் . மத்தியானம் ஒரு மணிக்கு அங்கே இருந்தால் போதும் . நல்ல ரோல் . நல்லா பண்ணுவாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு . ”
 நன்றி சார் . முன்னதாகவே வந்து விடுகிறோம்என்றான் . இயக்குனர் இடம் குறித்து சரியான அடையாளங்களைச் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தார் . பிரபு கைபேசியில் கீதாவை அழைத்தான் . கீதாவின் குரலிலும் பரபரப்பு . “ பள்ளிக்கூடத்திற்கு போன் செய்து விடுமுறை சொல்லிவிடு . வகுப்பு முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்திடறோம் . கொஞ்சம் முன்னாடியே கிளம்பி போயிடலாம் . நீயும் தயாராக இரு . வழியில சாப்பிட்டுக்கிடலாம் . “
வகுப்பு முடிந்து வர்த்தினி வந்ததும் விஷயத்தைச் சொன்னான் . வர்த்தினியின் முகத்தில் மகிழ்ச்சியும் குழப்பமும் . “ அப்ப ஸ்கூல் …. ? “ “ லீவ் சொல்லிடலாம்சொல்லியவாறே வாகனத்தைக் கிளப்பினான் .


 வர்த்தினி அடையப்போகும் உயரம் குறித்து கற்பனைகளில் மிதந்தவாறே வாகனத்தை ஓட்டினான் . வர்த்தினி முதல் வகுப்பு படிக்கையில் நடந்த பள்ளி ஆண்டு விழாவில் அவள் ஆடிய தனி நடனம்தான் எல்லாவற்றிற்குமே ஆரம்பம் . பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டும் அளவிற்கு அழகாக ஆடினாள் . இன்னொரு விழாவில் பாடிய போதும் அதே அளவிற்கு வரவேற்பு . பிரபுவும் கீதாவும் அவளை நடன வகுப்பு , இசை வகுப்பு எனச் சேர்த்துவிட அவளது திறமை மெருகடைந்து கொண்டே போனது . பள்ளியில் மட்டுமில்லாது வெளி இடங்களிலும் அவளது திறமை வெளிப்பட ஆரம்பித்ததும் , எதிர்பாராமல் ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியதும் ,  தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் அவளுக்கு வாய்ப்புகள் கிடைத்ததும் …. எல்லாமே ஒரு கனவு போல தொடர்ந்தன . முத்தாய்ப்பாக சில மாதங்களுக்கு முன் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக வந்த இயக்குனர் ராம் சங்கர் வர்த்தினியின் திறமையை பாராட்டியதோடு , தனது அடுத்த படத்தில் குழந்தைப் பாத்திரத்தில் அவளுக்கு வாய்ப்பு உண்டு என்று உறுதி அளித்தார் . இயக்குனரின் வாக்குறுதி இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என எதிர்பார்க்கவில்லை .
வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள் கீதா . வர்த்தினியை வாரி அணைத்து முத்தமிட்டாள் .
லீவ் சொல்லிட்டியா ? “
தலைமை ஆசிரியரிடமே பேசி விட்டேன் . உடனே சரி சொன்னதும் இல்லாமல் வர்த்தினிக்கு வாழ்த்துகளையும் கூறினார் . “
இயக்குனர் சொன்ன இடத்திற்குப்போக இரண்டு மணி நேரம் ஆகும் எனக் கணக்கிட்டு சற்று முன்னதாகவே கிளம்பினார்கள் .
அந்த இடம் ஒரு படப்பிடிப்பிற்கு தயாராவதற்கான பரபரப்பில் இருந்தது . இரவு அடித்த பனிக்கு மாறாக மதியப்பொழுது சூரியன் கொதித்துக் கொண்டிருந்தான் . ஒரு குடையின் கீழ் உட்கார்ந்திருந்த இயக்குனருக்கு பிரபுவும் , கீதாவும் வணக்கம் வைத்தார்கள் . இயக்குனர் புன்சிரிப்போடு பதில் வணக்கம் சொன்னார் . “ வாம்மாவருங்கால சூப்பர் ஸ்டார்என்று புன்னகைத்தார் . பக்கத்தில் இன்னொரு குடையின் கீழ் கதாநாயகிக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தார்கள் . “ ஹீரோ இப்போ வந்திடுவார் . வந்ததும் ஆரம்பிச்சிடலாம் . சாப்பிட்டீங்களா ? “
பிரபு ஆமென்று தலையாட்டினான் . மூவருக்கும் குளிர்ச்சியான பானம் கொடுத்தான் சிறுவன் ஒருவன் . மூவரையும் தன் அருகிலேயே உட்கார வைத்துக் கொண்டார் . “ தன்யா ….. பாப்பா ரொம்ப சூட்டிகை . நீயேதான் பார்க்கப் போறியே . “ கதாநாயகி புன்னகை செய்தாள் .
பாப்பாசீன் என்னான்னு சொல்றேன் . கேட்டுக்க . அதோ அந்த அம்மாதான் உன்னோட சித்தி . உன்னைப் பிடிக்காது . உங்க அப்பா , அதாவது சினிமா அப்பாநம்ம ஹீரோ , சித்தி , நீ மூன்று பேரும் பிக்னிக் வந்திருக்கீங்க . உன்னோட விருப்பமான பூனைக் குட்டியையும் நீ சித்திக்குத் தெரியாமல் ஒரு கூடையில வச்சு கொண்டு வந்திருக்கே . சித்திக்கு உன்னையும் பிடிக்காது , அந்த பூனைக் குட்டியையும் பிடிக்காது . அது திடீர்னு சத்தம் கொடுத்ததும் சித்திக்கு தெரிஞ்சு உன்னைத் திட்டறா . கூடையைத் திறந்து பூனைக்குட்டியை விரட்டி விடுகிறாள் . சூடான மணலில் பூனைக்குட்டி கத்தியவாறே ஓடுகிறது . நீயும் அதன் பின்னாலேயே ஓடறே . அவசரத்தில செருப்பு கூட போடாம ஓடறே . சூடு தாங்காமல் வெளிப்படற வலியை உன் முகத்தில் காட்டணும் . ரொம்ப இயற்கையா இருக்கணும் . ரொம்ப தூரம் ஓடுனப்புறம் அதைப் பிடிச்சிடறே . வாரித் தூக்கி முகத்தோடு வச்சு அணைச்சுக்கிறே . அப்ப உன் மகிழ்ச்சியை அப்படியே பார்க்கிறவங்க உணர்கிற மாதிரி காட்டணும் . ஜமாய்ச்சுடணும் . “ இயக்குனர் வலியையும் , மகிழ்ச்சியையும் தன் முகத்தில் உருவாக்கிக் காட்டியதை வர்த்தினி ஆச்சரியமாகப் பார்த்தாள் . இவ்வளவு உணர்ச்சிகளைத் தன்னால் வெளிப்படுத்த முடியுமா என்று யோசித்தாள் . இயக்குனர் ஒப்பனைக்காரர் ஒருவரிடம் வர்த்தினிக்கு ஒப்பனை செய்யச் சொன்னார் .
தூரத்தில் ஓர் ஆள் கையில் ஒரு பூனைக்குட்டியோடு நின்று கொண்டிருந்தான் . வெள்ளை நிறத்தில் புசு புசுவென்று முடியோடு இருந்தது . மின்னும் கண்கள் . அதைப் பார்க்கையில் வர்த்தினிக்கு ஓடிச் சென்று அதை வாங்கி கையில் வைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது . “ கெட்டிக்கார பூனைக்குட்டிம்மா . அந்த ஆள் சொல்றா மாதிரி கேட்கும் . இதோட நாற்பது படத்திற்கு மேல நடிச்சிருக்கு . “


திடீரென்று இடம் பரபரப்பானது . விலை உயர்ந்த வெளிநாட்டுக்கார் ஒன்று வந்து நின்றது . கதவைத் திறந்து கதாநாயகன் இறங்கினார் . ஏற்கனவே ஒப்பனை செய்து பள பளவென்று இருந்தார் . இயக்குனர் தவிர உட்கார்ந்திருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள் . கதாநாயகன் நேராக இயக்குனரின் அருகில் வந்து காலியாக கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார் . “ சார் , நாலு மணிக்கு கிஷோர்குமார் பட ஷூட் இருக்கு . சட்டுன்னு முடிச்சு அனுப்பிடுங்க . “
இயக்குனர் பலரைக் கூப்பிட்டு ஏதேதோ சொன்னார் . ஒளிப்பதிவாளர் காமிராவைத் தயார் நிலைக்கு கொண்டு வந்தார் . இயக்குனர் காட்சி குறித்து மற்றவர்களுக்கும் விளக்கினார் .
படப்பிடிப்பு ஆரம்பமானது . கதாநாயகன் , நாயகி , வர்த்தினி மூவரும் கதாநாயகன் வந்த காரில் இருந்து இறங்குகிறார்கள் . வர்த்தினி கையில் பூனைக்குட்டி இருந்த கூடை . கதாநாயகன் காரில் இருந்து பெரிய குடை ஒன்றை எடுத்து மணலில் குத்தி நிறுத்துகிறான் . கதாநாயகி காரில் இருந்து சாப்பாட்டுக்கூடை , குளிர்பான பாட்டில்கள் எல்லாம் எடுத்து மணல் தரையில் பரப்புகிறாள் .
சிந்து …. நைஸ் ப்ளேஸ் இல்லே . “
ஆமா டார்லிங் . இயற்கை எப்பவுமே அழகுதான் . “ கதாநாயகியின் தமிழில் ஆங்கில வாடை .
ப்ரவீனாக்குட்டி , கடல் எவ்வளவு அழகா இருக்கு பாரு . அலைகள் எப்படி கரையில வந்து மோதுது . “
ஆமா டாடி . ரொம்ப நல்லா இருக்கு . கடல் பக்கமாப் போய் அலைகள் காலில படற மாதிரி நிற்கலாமா ? “ வர்த்தினி இயக்குனர் சொன்ன மாதிரியே உச்சரித்தாள் . இயக்குனர் பிரபு பக்கம் திரும்பி திருப்தி கலந்த புன்னகையை பரிமாறினார் .
சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பூனைக்காரன் மெல்லிய குரலில் ஏதோ கூற , அதுவரை கூடைக்குள் இருந்த பூனைக்குட்டி மெல்லியதாக இரு தடவைகள்மியாவ் … “ என்று குரல் கொடுத்தது . கதாநாயகி கோபத்தோடு வர்த்தினியின் கையில் இருந்த கூடையைப் பிடுங்கினாள் . “ எத்தனை தடவைச் சொன்னாலும் கேட்க மாட்டியே நீ . இந்தச் சனியனையும் எனக்குத் தெரியாமல் தூக்கிட்டு வந்திட்டியா ? “ கோபத்தோடு வர்த்தினியைப் பார்த்து முறைத்தாள் . பின்னர் கூடையைத் திறந்து பூனைக்குட்டியைத் தூக்கி வெளியே போட்டாள் . மணலில் கலந்து கிடந்த சிறு கற்களைப் பொறுக்கி அதன் மீது எறிந்தாள் . பூனைக்குட்டி பயந்து மணலின் சூடு தாங்காமல் அலறியவாறே ஓடியது . வர்த்தினிக்கு உண்மையிலேயே பாவமாக இருந்தது . சட்டென்று எழுந்தவளின் கையைப் பிடித்து இழுத்தாள் கதாநாயகி .
வர்த்தினி தன் கையை உருவிக் கொண்டு பூனைக்குட்டியின் பின் ஓடினாள் . மணலின் அதீத சூடு செருப்பு போடாத அவள் கால்களைப் பொசுக்கியது . சூடு தாங்காமல் கால்களை மாற்றி மாற்றி உதறியவாறு ஓடினாள் . முகத்தில் கால்களைப் பொசுக்கிய சூட்டின் வலி தெரிந்தது . சிறிது தூரம் ஓடியதும் நின்று கால்களை மாற்றி மாற்றி தூக்கி கைகளால் தடவிக் கொண்டாள் . முழுப் பாதங்களும் மணலில் பதியாதவாறு விரல் நுனிகளை மட்டும் ஊன்றி ஓடினாள் . பூனைக்குட்டிக்கும் சூட்டின் வலி . அதுவும் வலியோடு கத்தியவாறே ஓடிக் கொண்டிருந்தது . இயக்குனர் பிரபுவை பார்த்து விரல்களைக் காட்டினார் . “ க்ளாஸ் … ! “ பிரபுவுக்கும் , கீதாவுக்கும் உள்ளுக்குள் பெருமிதம் .
வர்த்தினி பூனைக்குட்டியை நெருங்கப் போகும்போது வேகமாக வந்த வேன் ஒன்று அங்கு வந்து நின்றது . மூன்று பேர்கள் இறங்கி நேராக இயக்குனரிடம் போனார்கள் . வந்தவர்களில் ஒருவர் இளம் வயதுப் பெண் . மூவருமே இயக்குனரிடம் ஏதோ கோபமாகப் பேசினார்கள் . தூரத்தில் இருந்ததால் வர்த்தினிக்கு அவர்கள் பேசியது கேட்கவில்லை . இயக்குனரும் அவர்களிடம் ஏதோ கூறினார் . படப்பிடிப்புக் குழுவினரும் அந்த இடத்திற்கு வந்து சூழ்ந்து கொண்டனர் .
இயக்குனர் ஒளிப்பதிவாளரை நோக்கி ஏதோ சொல்ல அவரும் காமிராவை நிறுத்திவிட்டு அங்கே போனார் . வர்த்தினியையும் வந்து விடுமாறு கை காட்டினார் இயக்குனர் . ஏற்கனவே மணலின் சூட்டால் கொப்பளிக்கத் தொடங்கியிருந்த காலகளின் வலி பொறுக்காமல் அவள் ஓடி வந்து குடைக்குள் நின்று கொண்டாள் . அவளது முகத்தைப் பார்த்ததும் அவள் வலி புரிந்த பிரபு அவளைத் தூக்கிக் கொண்டான் . கீதா வர்த்தினியின் மெல்லிய பாதங்களை வருடி விட்டாள் . ஏற்கனவே ஏற்பட்டிருந்த கொப்புளங்களில் கை பட்டதும் வர்த்தினிக்கு வலி தாங்காமல் அழுகை வந்து விட்டது . பிரபு கைக்குட்டையை நனைத்து பாதங்களில் ஒத்தடம் கொடுத்தான் . பூனைக்காரன் பூனைக்குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து நின்றான் .
வேனில் வந்த பெண் அவனிடம் இருந்து பூனைக்குட்டியைப் பிடுங்கி வேனின் பின் பக்க இருக்கையில் வைத்து விட்டு அவளும் ஏறிக் கொண்டாள் . பூனைக்காரன் அவளிடம் சென்று கெஞ்சுவது போல ஏதோ பேசினான் . அவள் அவனை மிரட்டுவது போலப் பேசி விரட்டி விட்டாள் .
வேனில் வந்த இன்னொருவர் சில காகிதங்களை இயக்குனரிடம் காட்டி கையெழுத்து வாங்கினார் . முதலில் மறுத்த இயக்குனர் பின்னர் கையெழுத்திட்டார் . பூனைக்காரரிடமும் கையெழுத்து வாங்கிய பின்னர் இன்னும் சிலரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டபின் இயக்குனரிடம் ஏதோ ஆங்கிலத்தில் கூறிவிட்டு வேனில் ஏறிப் புறப்பட்டனர் . பூனைக்காரன் அழாத குறையாக வேனையே பார்த்துக் கொண்டிருந்தான் .



சாரி …. இப்படி ஓர் இடைஞ்சல் வரும்னு எதிர்பார்க்கல . என்ன பண்றதுன்னு யோசிச்சு அப்புறம் சொல்றேன் . “ இயக்குனர் எல்லோரிடமும் சொல்வதைப் போலப் பொதுவாகப் பேசினார் . நாயகனும் , நாயகியும் அவரவர் கார்களில் ஏறி உடனே கிளம்பி விட்டார்கள் .
இயக்குனர் பிரபு பக்கம் திரும்பினார் . “ சாரி , எதிர்பாராத இடைஞ்சல் . குட்டியோட முகபாவம் , நடிப்பு எல்லாமே ரொம்ப இயற்கையாக பிரமாதமாக இருந்தது . எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிடானுங்களே இவனுக . நான் திரும்பக் கூப்பிடறேன் . இதை அட்வான்ஸாக வச்சுக்குங்க . “ பிரபுவின் கையில் உறை ஒன்றைக் கொடுத்தார் . வர்த்தினியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிபிரமாதமாக வருவம்மாஎன்றார் .
பிரபு காரில் ஏறினான் . வர்த்தினியைத் தூக்கிக் கொண்டு கீதாவும் ஏறிக் கொண்டாள் . கைக்குட்டையால் பாதங்களை வருடிக் கொடுத்தாள் .
ரொம்ப வலிக்காம்மா ? “ பிரபுவின் குரல் கம்மியிருந்தது .
ஆமாப்பா …. ரொம்ப சூடு மணல் . பாவம் இல்ல . எனக்கே இப்படி இருந்தால் அந்த பூனைக் குட்டிக்கு எப்படி இருந்திருக்கும் . “  
மீண்டும் அவள் விழித்தபோது வாகனம் அவளது பள்ளியைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது . வளாகத்துக்குள் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர் . உற்சாகமான குரல்கள் நகரத்தின் இரைச்சல்களையும் மீறி ஒலித்தன .
வர்த்தினி முன் பக்கம் சாய்ந்து பிரபுவின் தோளைத் தொட்டாள் . “ அந்த பூனைக்குட்டியை ஏம்பா தூக்கிட்டுப் போனாங்க . அவங்கல்லாம் யாருப்பா ? “
 அவங்கல்லாம் மிருக வதை தடுப்பு இயக்கக்காரங்கம்மா . மிருகங்களைக் கொடுமைப் படுத்தினால் அதைத் தடுக்க சட்டம் இருக்கு . அதனால மிருகங்களைக் கொடுமைப் படுத்தறது தெரிஞ்சால் அவங்க வந்து அந்த மிருகங்களை காப்பாற்றிக் கூட்டிட்டுப் போய் ஓரிடத்தில வச்சு வளர்ப்பாங்க . கொடுமைப் படுத்தினவங்க மேல வழக்கு போட்டு தண்டனையும் கொடுப்பாங்க . எஸ் பி ஸி ன்னு சொல்லுவாங்க . “
வர்த்தினி பின்னால் சாய்ந்து கொண்டு ஏதோ யோசிப்பதுபோல இருந்தாள் . பின்னர் மீண்டும் முன்னால் குனிந்தாள் .
ஏம்பா …. மிருகங்களை வதை பண்ணினால் மட்டும்தான் அவங்க தடுப்பாங்களா ? அந்த சட்டம் மிருகங்களை வதை பண்றதை மட்டும்தான் தடுக்குமா ? “
பிரபு சட்டென்று வாகனத்தின் வேகத்தைக் குறைத்து ஓரமாக நிறுத்தினான் . வர்த்தினியின் கேள்வி அவனையும் கீதாவையும் உறைந்து போக வைத்திருந்தது .
ஆமாம்மா …. அப்புறம் நாளையில இருந்து நீ எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் போக வேண்டாம் . காலையில மெதுவா எழுந்திருச்சு பள்ளிக்கூடம் போனால் போதும் . மற்றது எல்லாம் மெதுவாக் கத்துக்கலாம் . நாளைக்கு இந்த பணத்தையும் திருப்பிக் கொடுத்திடலாம் . சினிமால்லாம் இப்ப வேண்டாம் . “ பிரபு மீண்டும் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்தான் . கீதா வர்த்தினியின் பாதங்களைத் தன் மடியில் வைத்து வருடிக் கொடுத்தவாறே வந்தாள் . வர்த்தினியின் முகத்தில் வலி குறித்த அறிகுறிகள் காணாமல் போயிருந்தன .

-----------------------------------------------------------------------------------------------------







வெள்ளி, 19 அக்டோபர், 2018


வாசிப்போம் குழு - தினம் ஒரு பதிவு அக்டோபர் 18 , 2018
முன் நிலவும் பின் பனியும் – [ சிறுகதை ] - ஜெயகாந்தன் .

தனக்கென்று தனித்துவமான நடை என்றெல்லாம் எதையும் தத்தெடுத்துக் கொள்ளாமல் , உத்திகளில் பரிசோதனை முயற்சிகள் செய்யாமல் , தேவைக்கு அதிகமான வர்ணனைகளை புகுத்தாமல் , மனித உறவுகளையும் , மனித மனத்தின் உணர்வுகளையும் மட்டுமே தன் எழுத்துகளின் மூலதனமாய் வைத்துக் கொண்டு எழுதிக் குவித்தவர் ஜே கே . சமூகத்தின் மேல்தட்டு மனிதர்களின் வாழ்வைச் சொன்ன அளவுக்கு கீழ்த்தட்டு மற்றும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை தன் எழுத்துகள் மூலம் வாசகனோடு பகிர்ந்து கொண்ட ஜேகேயின் படைப்புகள் எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் வாசகனைக் கட்டிப் போடவே செய்தன . வெறுப்பையும் அன்பாக மாற்றிக் காட்ட முடியும் என்ற உணர்வை வாசிப்பவர்களின் மனத்தில் உருவாக்கக் கூடிய கதை மாந்தர்கள்தான் அவரது படைப்புகளின் பெரும் பலம் .
முன் நிலவும் பின் பனியும் “ – 1962 ல் அவர் எழுதிய ஒரு சிறுகதை .
பெரிய கோனாரும் , சின்னக் கோனாரும் அண்ணன் தம்பிகள் . ஊருக்கே அவர்களது பெயர் அவைதான் . மனைவி இறந்துவிட , ஒரே மகன் சபாபதியும் ஆடாத ஆட்டம் போட்டு சொத்துகளைத் தொலைத்து பட்டாளத்தில் சேர நினைத்து ஊரை விட்டு ஓடிவிட , பெரிய கோனார் மனம் வெறுத்து வடதேசம் நோக்கிப் போகும் பக்தர்கள் கோஷ்டியோடு செல்ல முயற்சிக்கையில் , தம்பி சின்னக் கோனார் கண்டு காலில் விழுந்து புலம்பி திருப்பிக் கூட்டி வந்து விட்ட பின் பெரியவர் தோட்டத்தில் ஒரு பகுதியில் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கிறார் . தம்பியின் குடும்பம் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது .
ஓடிப் போன சபாபதி ஒருநாள் திரும்பிவர பெரியவர் புத்துணர்வு அடைகிறார் . மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணமும் செய்து வைக்கிறார் . பேரன் பிறக்கிறான் . ஆனால் பேரனைக் கண்ணில் காணும் முன்பே கிழவரின் கண்பார்வை காணாமல் போய்விடுகிறது . எனினும் வருடத்திற்கு ஒரு முறை தன்னைப் பார்க்க வரும் பேரனோடு கொஞ்சி மகிழும் நினைவுகளைச் சுமந்தே வாழ்ந்து வருகிறார் கிழவர் . சபாபதி மனைவியை இரண்டாவது பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்கையில் கிழவரைப் பார்க்க வர இயலாமல் போய்விட , பேரனைப் பார்க்க இயலாமல் போய்விட்ட சோகத்தில் கிழவர் . மீண்டும் ஊருக்கு அழைத்துச் செல்கையில் பேரனையும் கூட்டிக் கொண்டு பார்க்க வருவதாக சபாபதி சொல்லியதில் சமாதானம் அடைந்து , பேரனைச் சந்திக்கப்போகும் மகிழ்ச்சியில் இருக்கும் கிழவருக்கு இடியாக வந்து இறங்குகிறது. அவசரமாக பட்டாளம் அழைத்ததால் நேராகப் போய் விடுகிறான் சபாபதி என்ற செய்தி .
ஆனாலும் கிழவர் விடாமல் நேரடியாக இரயில் நிலையத்திற்கே போய் பேரனைக் கொஞ்சிவிட வேண்டும் என்ற ஆசையில் முந்திரிக் கொட்டைகளை உடைத்து வைத்து தயாராகிறார் . நடுச்சாமம் கழிந்து முதல் கோழி கூவியதுமே , கூட வருகிறேன் என்று சொன்ன சின்னக் கோனாரின் மகள் வழிப் பேரன் தம்பையாவையும் கூட்டிக் கொண்டு தாங்க முடியாத குளிரில் நடுங்கியவாறு இரயில் நிலையம் அடைகிறார் கிழவர் .ஒரு நிமிடம் மட்டுமே நிற்கும் இரயில் வந்ததும் ஆளுக்கொரு திசையில் பெட்டிகளில் தேட சபாபதியையோ , பேரனையோ காண முடியாமல் பரிதவிக்கிறார் கிழவர் . வண்டி கிளம்பி விட்டது . அந்த கடைசி கணத்தில் ஒரு பெட்டியில் இருந்து குழந்தை முகம் ஒன்று மங்கலாகத் தெரிய தள்ளாடி ஓடிச் சென்று , தெரிந்த முகம் பேரனுடையது என்று மகிழ்ந்து , கையில் இருந்த முந்திரிக் கொட்டைகளை அந்தக் குழந்தையின் கைகளில் திணித்து , ஞாபகம் வந்தவராய் கொண்டு வந்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் கொடுக்கிறார் . வண்டி கிளம்பி விரைந்து விடுகிறது அந்தக் குழந்தை பேரன் பாபு இல்லையென்பதையும் , தாயுடன் பயணம் செய்யும் வட இந்தியக் குழந்தை ஒன்று என்பதையும் கிழவர் உணராமலே .
கதை இப்படி முடிகிறது ….      
வண்டி மறையும் வரை தம்பையாவும் கிழவரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். கிழவர், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு, ஒரு நிம்மதி உணர்வில் சிரித்தார். "அடுத்த தடவை பாபு வரும் போது நான் இருக்கேனோ, செத்துப் போயிடறேனோ" என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டார். தம்பையா தும்மினான்.
"இதென்ன, அபசகுனம் மாதிரித் தும்முகிறானே" என்று கிழவர் அவனைப் பார்த்தபோது, தம்பையா இரண்டாவது முறையும் தும்மி சுப சகுனமாக்கினான்...
தம்பையாவைக் கிழவர் மார்புறத் தழுவிக் கொண்டார். இனிமேல் பதினோரு மாதங்களுக்கு அவன்தானே அவருக்குத் துணை!...
ஒரு சிறுகதையில் அன்பு சார்ந்த எத்தனை உணர்வுகளைப் பொதிந்து தந்து விடுகிறார் ஜேகே . அண்ணன் தம்பி ; அப்பா மகன் ; தாத்தா பேரன் ; கடைசியில் யாரென்றே தெரியாத வட இந்திய பெண் கிழவரது அன்பு கண்டு கண் கலங்கி நிற்கும் தருணம் . சின்னச் சின்ன விஷயங்களில் பெரிய பெரிய உணர்வுகள் .
கொஞ்சம் கொஞ்சமேயான வார்த்தைகள்மூலமே சில இடங்களில் கதையின் கனத்தைக் கூட்டி விடுகிறார் ஜேகே ,
- அது சரி, அவர்தான் பாபுவைப் பார்த்ததே இல்லையே? அவர் கண்களில் அவன் உருவம் தெரிவதெப்படி?
தன் குழந்தை என்று பந்தம் பிறக்கவும், சொந்தம் கொண்டாடவும்தான் தன் குழந்தையின் முகம் தெரிய வேண்டும். குழந்தை மீது கொண்ட பாசத்தைக் கொண்டாட, அந்த பக்தியை வழிபட ஒரு முகம்தான் வேண்டுமா, என்ன?...
-  " ம்... அவருக்குத்தான் கண்ணு தெரியலியே... நீ சுருட்டுக் குடிக்கிறேனு அவரு எப்படிப் பாப்பாரு?"
"அவருக்குக் கண்ணு தெரியலேன்னா என்ன?... எனக்குக் கண்ணு தெரியுதே... அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை... சரி, நீ போய் விளையாடு!"
கதையில்  ராந்தல் கம்பம் கூட ஜேகேயின் கைவண்ணத்தில் ஒரு கதை மாந்தராகிவிடும் அற்புதங்களும் உண்டு .
எப்போதோ படித்த கதையை இப்போது மீண்டும் வாசிக்கையில் புதுப்புது பரிமாணங்களோடு மிளிர்வதுதான் ஜேகே படைப்புகளின் தனித்துவம் .
வாசிப்போம் ..... தொடர்ந்து !


செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

” ஆதிமுகத்தின் காலப்பிரதி “ –இரா . பூபாலன் [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .

ஆதிமுகத்தின் காலப்பிரதி “ –இரா . பூபாலன் [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .

-------------------------------------------------------------
வாழ்க்கை அவலங்களாலும் , கவலைகளாலும் இன்னும் பிற வருத்தம் தரும் உணர்வுகளாலுமே நிரம்பி வழிகிறது . எனினும் அவ்வப்போது அழகான பக்கங்களையும் நமக்குக் காட்டிக் கொண்டுதான் நகர்ந்து கொண்டிருக்கிறது . வாழ்வின் இரு பக்கங்களையும் வாசிப்பவரோடு பகிர்ந்து கொள்வதுதான் ஒரு படைப்பாளியின் முதல் நோக்கமாக இருக்க முடியும் . அதிலும் குறிப்பாக கவிதைகளில் . அதைச் செவ்வனச் செய்து காட்டியுள்ளார் இரா . பூபாலன் தனது ஆதிமுகத்தின் காலப்பிரதி “ கவிதைத் தொகுப்பில் .
இப்போது
உங்கள் கைத்துப்பாக்கி
நடுங்காமலிருக்கட்டும்
நம்புங்கள் ஆறு தோட்டாக்களில்
ஆகச் சிறந்தது
கடைசித் தோட்டா மட்டுமே .
ஆறு தோட்டாக்கள் உள்ள துப்பாக்கி ... “ என்ற கவிதையின் இந்தக் கடைசி வரிகளை வாசித்து முடிக்கையில் , முதல் ஐந்து தோட்டாக்களில் எத்தனையை நாம் இது வரை அடுத்தவர் மீது பயன்படுத்தியுள்ளோம் , எத்தனை தோட்டாக்களை பிறர் நம் மீது பயன்படுத்தியுள்ளார்கள் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலாது .
*******************************************
மனித இனம் இயற்கையோடு ஒன்றி வனத்தில் வாழ்ந்த காலத்திலும் வாழ்க்கை முற்றிலும் இனிப்பாக மட்டுமே இருந்தது என்று சொல்ல இயலாதுதான் . ஆனால் இன்றைய நாகரீக சமூகத்தில் நிகழும் அவலங்களோடு ஒப்பிட்டால் அவை ஒன்றுமில்லை என்று உணர்த்தும் வகையில் இப்படி முடிக்கிறார் ஒரு கவிதையை ....
சில மிருகங்கள்
அவளை வேட்டையாடிவிட்டன
என்று நான் இக்கவிதையை
முடித்தால் நிச்சயம்
அவள் என்னை மன்னிக்கமாட்டாள் .
**********************************************
தர்மத்தைக் காப்பாற்றுவது இன்றைய கால கட்டத்தில் அவ்வளவு எளிதல்ல என்பதை பகடியாக இப்படிக் கூறுகிறார் இன்னொரு கவிதையில் – கையாலாகாக் கண்ணன்
இந்த முறை
காது கேட்காத மாதிரி
நடிக்கத் துவங்குகிறான் .
******************************
நாம் இயற்கைக்குத் துரோகம் செய்தாலும் , இயற்கை இயன்ற அளவு நம்மைக் கைவிடாதுதான் இருக்கின்றது என்பதைக் காட்டும் அழகான் வரிகள் –
மஞ்சள் மலரொன்றை
என் மீது
விழச்செய்து
ஆசிர்வதித்த பின்னர்தான்
வெட்டத் துவங்கினேன்
அம்மரத்தை .
******************************************
வாழ்வின் அவலமான பக்கங்களை பல கவிதைகளில் வலிமையும் , வலியும் மிகுந்த வார்த்தைகளால் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் கவிதைகள் தொகுப்பு முழுவதும் பரவிக் கிடக்கின்றன . எனினும் அவை தரும் மனச் சோர்வைப் போக்கும் வகையில் , எந்த ஒரு மனிதனின் வாழ்விலும் சற்று கூடுதலாக வெளிச்சம் தருபவர்கள் குழந்தைகள்தான் என்பதை உணர்த்தும் விதமாக , தவிர்க்க முடியாத செயற்கைப் பூச்சுகளை இன்னும் பூசிக் கொள்ளாத குழந்தைப் பருவத்தின் அழகான தருணங்களைத் தன் கவிதைகளில் அங்கங்கே தூவியுள்ளார் .   
கதைப் புத்தகத்தின்
பக்கத்தில்
புலி துரத்திக் கொண்டோடும்
மானுக்குக்
கூடுதலாக இரண்டு
கால்கள்
வரைகிறது குழந்தை .
***********************************
வெள்ளிக் கிழமை
சாயங்கால மகளைப் போல
இருப்பதில்லை
திங்கட்கிழமை காலை
மகள்......
***********************************
தொகுப்பை முழுவதுமாக வாசிக்கும் போதுதான் கவிஞரின் வார்த்தைகளின் வீரியத்தை உணர இயலும் . எடுத்துக் காட்டாக .....
அன்பின் குரல்களுக்கு
எப்போதும் ஒரே முகம் .
***********************************
வாழ்த்துகள் பூபாலன் இன்னும் ....இன்னும்....வீரியம் மிக்க தொகுப்புகள் பல கொண்டு வர .
*********************************** 
ஆதிமுகத்தின் காலப்பிரதி “ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – இரா . பூபாலன் .
வெளியீடு – பொள்ளாச்சி இலக்கிய வட்டம் , பொள்ளாச்சி .
விலை – ரூ 70 /

------------------------------------------------------------------ 

செவ்வாய், 26 ஜூலை, 2016

மெளனத்தின் பிளிறல் – [புதியமாதவி ] - ஒரு வாசிப்பு அனுபவம் .


மெளனத்தின் பிளிறல் – [புதியமாதவி ] - ஒரு வாசிப்பு அனுபவம் .
-----------------------------------------------------------------
கவிதைகள் , சிறுகதைகள் , மொழியாக்கங்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் புதியமாதவி அவர்களின் எழுத்துகளை , பல்வேறு தருணங்களில் தனித்தனியே வாசித்திருந்தாலும் , கவிதைகளின் மூலமாக வெளிப்படும் அவரது எழுத்தின் வீச்சை ஒரே தொகுதியாக வாசிக்கும்போது ஏற்படும் மனக் கிளர்ச்சி வேறு விதமாகத்தான் உள்ளது .
எழுத்து “ வெளியீடாக வெளிவந்துள்ள மெளனத்தின் பிளிறல் “  தொகுப்பில் உள்ள 46 கவிதைகளிலும் முதல் வாசிப்பில் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு வகை அறச்சீற்றமே தென்பட்டாலும் , மறுவாசிப்பில் ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு பரிமாணங்களில் விரிகின்றது .
*********************
சாத்தான்கள் வேதம் ஓதலாம்
வேதங்களே சாத்தான் ஆகலாமா ?
**********************************************
சமூகம் குறித்த சீற்றத்தை , மென்மையான வார்த்தைகளாலும் வெளிப் படுத்த முடியும் என உணர்த்தும் நிறைய கவிதைகள் தொகுப்பெங்கும் சிதறிக் கிடக்கின்றன .
******************************************************
மரணம் இல்லாத வீட்டில் கடுகு வாங்க என்னை
அனுப்பாதே....
யுத்தமில்லா பூமியில் எங்காவது உன்னைச் சந்தித்தால்
அப்போது வருவேன் ....
மீண்டும் உன் காதலியாக .
புத்தம் சரணம் கச்சாமி ...
*************************************************  
கலை விமர்சகர் இந்திரன் தன் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது போல புதியமாதவி அவர்களின் கவிதைகள் பால்பகா உயர் திணைக் கவிதைகளாகவே உள்ளன . அவரது கூற்று தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு நியாயம் கற்பிப்பதாகவே படுகிறது .
**********************************************
வெள்ளை மனிதர்களுக்கு நடுவில்
கருங் காக்கைகள் கத்துவதும் கூட
காதுகளுக்கு  சங்கீதமாய் .
********************************************
சற்றே விரிந்த பார்வையில் பார்த்தால் பெண்ணின் குரலாக வெளிப்படும் அநேக கவிதைகள் , ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தான சமூகத்தின் பொதுக் குரலாகவே தோன்றுகின்றன . எதனை எதற்கு உருவகப் படுத்துகிறார் என்ற கேள்வியை முன் வைத்து வாசிக்கும் போது விரிந்து கொண்டே போகின்றன கவிதை வரிகள் .
*************************************
குடைக்குள் நடப்பதும்
குடை பிடித்து நடப்பதும்
வேறு வேறான உலகம் .
இப்போதெல்லாம் எனக்கான குடை
எப்போதும் என் வசம் .
*****************************************
ஒரு வகையில் பொறாமையாகக் கூட உள்ளது . நான்கு தலைமுறையாக மும்பையில் வாழும் ஒருவரால் எப்படி இவ்வளவு அழுத்தமாக தனது கால்களை தனது தாயகமான தாமிரபரணி நதியோடும் மண்ணிலும் , அதன் தொன்மங்களிலும் பதித்து நிற்க முடிகிறது என்று .
**********************************************************
கடகரேகையும் மகரரேகையும்
சங்கமிக்க மறுக்கும்
பூமத்திய ரேகையின் அடிவயிற்றில்
இந்தப் பஃறுளி
மெளனத்தின் பிளிறலோடு .
************************************************
மெளனத்தின் பிளிறல்களில் இருந்து விடுபட சற்று நாட்கள் ஆகும் என்றுதான் தோன்றுகிறது . விடுபட முடியுமா என்றும் தோன்றுகிறது .
-----------------------------------------------------------
 மெளனத்தின் பிளிறல் – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – புதியமாதவி .
வெளியீடு – எழுத்து , சென்னை .
விலை – ரூ 60 /

---------------------------------------------------------------

திங்கள், 25 ஜூலை, 2016

அம்மாவின் கோலம் [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம் .

அம்மாவின் கோலம்                                                [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
----------------------------------------------------------

கவிதையில் “ இருண்மை “ வேண்டாம் என்று உரக்கச் சொல்லும் ஒரு கவிஞரின் கவிதைகளில் “ வெளிச்சம் “ தவிர வேறு எதை எதிர் பார்க்க முடியும் ? கவிஞர் ஜெயதேவனின் “ அம்மாவின் கோலம் “ தொகுப்பில் உள்ள 43 கவிதைகளும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன நமது இன்றைய வாழ்க்கை முறையையும் , அதன் மூலம் நாம் இழந்தவற்றையும் . வெளிச்சம் என்றால் கண் கூச வைக்கும் வெளிச்சம் இல்லை ; மனம் கூச வைக்கும் வெளிச்சம் . நாமேதான் நம்மை ஒருவித இருட்டிற்குள் நுழைத்துக் கொண்டு வாழ்கிறோம் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன கவிதை வரிகள் .
*******************************************
ஆயினும் விற்க இன்னும் மிச்சம்
இருந்து கொண்டுதானிருக்கிறது வாழ்க்கை . [ வாழ்வின் முடிச்சுகள் ]
***************************************************************************
வெளிச்சம் என்றால் ஒளி இல்லாமல் இருக்குமா ?  ஒளி இருந்தால் சூடும் அநேகமாக தவிர்க்க முடியாதுதானே ? நிறையவே இருக்கிறது சூடு இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் . சூடுகள் வலியை உண்டாக்கினாலும் வடுக்களை உண்டாக்கவில்லை . மாறாக சூழலில் இருந்து விடுபட வழியைத்தான் காட்டிச் செல்கின்றன வரிகள் .
*****************************************
40 சதவீதம் மனிதனாகவும்
60 சதவீதம் சராசரியாகவும் . [ முன்னுக்குப் பின் ]
********************************************************
டாஸ்மாக்கில் குப்புறக்கிடப்பவனும்
எதிர்பார்க்கிறான் கலப்படமற்ற போதையை . [ கல்லெனக் கிடக்கிறது காலம் ]
***********************************************************************
வானம்பாடிக் கவிஞர்களின் காலத்தைச் சேர்ந்த அநேக கவிஞர்கள் சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகளாக குறுகிய வட்டத்திலேயே உழன்று கொண்டிருக்கும் போது , அவர்களில் ஒருவரான ஜெயதேவன் அதி நவீன சிறகுகளை வளர்த்துக் கொண்டு கால மாற்றத்திற்கேற்பத் தன் கவிதைகளையும் பரந்த எல்லைகளில் பறக்க வைத்திருக்கிறார் .
**************************************
பிரமாண்டமானது எல்லாம்
பயமானதும் கூட . [ கவிதையின் கருவறை ]
*****************************************************
நாம் புரியினும் புரியாவிடினும்
என்றும் நம்மோடிருப்பது என்னவோ
நம்மூர் பெருமாள்கோயில் மாடுகளும்
மந்தையில் நிற்கும் அரசமரமும்தான் . [ உறவுகள் ]
***************************************************************
தொகுப்பில் மூன்று வீடுகளை கட்டியிருக்கிறார் / காட்டியிருக்கிறார் . ஒவ்வொரு வீட்டில் புகுந்து வெளிவரும் போதும் வெவ்வேறான உணர்வுகளுடன்தான் வெளிவர வேண்டியதிருக்கிறது .
****************************************************
உணர்ச்சிகளால் கட்டப்பட்டவன் மனித
உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல வீடு .  [ வீடு 1 ]
******************************************************************
வீடு கனமானதுதான்
வீடு கனக்கிறது என்று
காட்டுக்குப் போனவன் காடு பூராவும் வீடு . [ வீடு 2 ]
*********************************************************************
பொதுவாக பெயர்களையும் , பொருட்களையும் அடுக்கி வைத்து எழுதப்படும் கவிதைகளை கேட்லாக்கிங் கவிதைகள் என்று வகைப் படுத்துவார்கள் . ஆனால் தொகுப்பில் உள்ள சில கவிதைகளில் பெயர்களும் , பொருட்களும் அடுக்கப் பட்டிருந்தாலும் அவை கலிடியாஸ்கோப் காட்சிகளாக விரிந்து ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறு  காட்சிகளையும் , பொருளையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன . ஒரு கவிதைக்குள் எத்தனை வேறுபட்ட விஷயங்களை நுழைக்க முடிகிறது இவரால் என்ற வியப்பு சில கவிதைகளை வாசிக்கையில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது .
ஹீமொகுளோபின்கள் , நியுரான்கள் , மைக்கேல் ஜாக்சன் , காரல் மார்க்ஸ் , கண்ணதாசன் , ஜிப்ரான் , உமர்கயாம் , பாரதி , கூடவே கஞ்சா புகை என்று கலந்து கட்டியுள்ள “ டம்ளரில் ஊற்றப்படும் வாழ்க்கை “ என்ற கவிதையை வாசிக்கையில் இந்த வாழ்க்கை அவருக்கு மட்டுமானதாக இல்லாமல் வாசிக்கும் எனக்கும் , உங்களுக்கும் உரித்ததாகி விடுகிறது .
*******************************************
உமர்கயாம் பாரதி விட்ட
கஞ்சா புகையிலும் இருக்கிறதே
நமக்கான கவிதைகள் .
************************************************
கவிஞனாய் இருப்பது வரமா , சாபமா என்று கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் உள்ளது வாழ்க்கைக்குத் தூரமாய் கவிதை .
**************************************************************************
உரசினால் பற்றும் தீக்குச்சியாய்
பிறப்பெடுத்த கவிஞனால் வேறென்ன செய்யமுடியும் ?
***********************************************************************
அடுக்கிக் கொண்டே போகலாம் தொகுப்பில் உள்ள கவிதைகளில் மனதை ஊடுருவும் கேள்விகளை – கீழே உள்ளவை போன்று .
**************************************************************
வடக்கே எத்தனை காதம் நம்ஊர் ?
தெற்கே எத்தனை காதம் நம் காடு ?  [ திசைகள் ]
***************************************************************
நீங்கள் நடந்த நிழலில்தான்
நடக்கிறது என் நிகழ்கால நிஜம் .  [ அப்பாவுக்குக் கடிதம் ]
*********************************************************************
ஆயினும் தொகுப்பை முழுமையாக வாசித்துப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும் ஒரு போன தலைமுறைக் கவிஞனின் இன்றைய வாழ்க்கை குறித்த நவீன பார்வை ஜெயதேவன் போன்றவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் வித்தையை . பரவிக் கிடக்கும் படிமங்களும் , உருவகங்களும் , தொன்மங்களும் வாசிப்பவனுக்கு மனதில் நிறைய வேலையை உருவாக்கும் அருமையான தொகுப்பு .  
-----------------------------------------------------------
 ‘ அம்மாவின் கோலம் ‘ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – ஜெயதேவன் .
வெளியீடு – எழுத்து , சென்னை .
விலை – ரூ 60 /

----------------------------------------------------------------