செவ்வாய், 6 ஜனவரி, 2015

வெற்று வெட்டு .


வெற்று வெட்டு .

வெட்டுதல்கள் நடை பெற்றுக்
கொண்டேதான் இருக்கின்றன .
அவ்வப்போது நானும் வெட்டுவதுண்டு
நகங்களை
அளவுக்கு மீறி வளர்ந்ததினால் ;
தினமும் மனைவி வெட்டுகின்றாள்
விதவிதமான காய்கறிகளை
உணவுக்காக ;
நேஷனல் சலூன் நயினார்
வெட்டிக் கொண்டே இருக்கிறார்
தலை மயிர்களை .
வீதி வீதியாகக் கூவித் திரியும்
வீரராகவன்
ஏதேனும் ஒரு வீட்டு மரமேறி
வெட்டித் தள்ளுகிறார்
தேங்காய்க் குலைகளை .
நூற்றுக் கணக்கில் வெட்டித்
தள்ளப் படுகின்றன
ஆடுகளும் கோழிகளும்
அம்மன் கோயில் கொடையன்று .
ஒட்டகங்கள் கூட வெட்டுப் படுகின்றன
குர்பாணி நோக்கத்தோடு .
ஒவ்வொரு வெட்டுக்கு பின்னும்
எதோ ஒரு காரணமும்
எதோ ஒரு தேவையும்
இருக்கத்தான் செய்கின்றது .
ஆனால்
சில சமயங்களில்
மனிதர்கள் ஒருவரை யொருவர்
வெட்டிக் கொள்(ல்)வது
ஏன் என்றுதான் புரியவேயில்லை
எத்தனை யோசித்தும் .  


[ இனிய உதயம் ஜனவரி 2015 ]

இழப்புகள் .


இழப்புகள் .

சென்ற வேகத்தில்
நின்று கவனிக்காமல் போன
வழியோரத் தும்பைப் பூக்களும்
பக்கத்துத் தெரு
கடைசி வீட்டின் பல வண்ண
செம்பருத்தி மலர்களும்
வீடு திரும்பி தளர்ந்து சாய்ந்த கணத்தில்
மனதிற்குள் பூத்துக் குலுங்கிய போதுதான்
உணர்ந்து கொண்டேன்
இழந்து விட்டோமென்று நினைக்குமெதுவும்
இழக்கப்படுவதில்லை
வாழ்வில் என்ற உண்மையை .
                  
[ இன்மை இணைய இதழ் ஜனவரி 2015 ]


சாத்தியங்கள் ....


சாத்தியங்கள் .

இப்படியும் எழுத இயலும் எனக்கு
இப்படியுமெழுத இயலுமெனக்கு
எனக்கு இப்படியும் எழுத இயலும்
எனக்கிப்படியும் எழுதவியலும்
எழுத இயலும் எனக்கு இப்படியும்
எழுதவியலும் எனக்கிப்படியும்
எழுத எனக்கு இயலும் இப்படியும்
எழுதவெனக்கு இயலுமிப்படியும்
எப்படி எழுதினாலும்
அவரவர் கவிதை
அவரவருக்குரியதாகவே இருக்கிறது .


இன்மை இணைய இதழ் ஜனவரி 2015 ]

திங்கள், 5 ஜனவரி, 2015

தவிர்க்க இயலாமல் ....

தவிர்க்க இயலாமல் ....

நிலா மறைந்திருந்த ,
நட்சத்திரங்கள் ஒளிந்திருந்த ,
மேகங்கள் காணாமல் போயிருந்த
ஒரு இரவு நேர 
வானத்தால்தான் நெய்திருந்தேன்
அந்தக் கவிதையை .
எனினும்
பிரித்துப் பார்க்கையில்
விட்டுப் போயிருந்த அத்தனையும்
ஒட்டிக் கொண்டிருந்தன
அழகாய் அதனதன் இடத்தில் .


[ கணையாழி ஜனவரி 2015 ]

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

பொதிகைச் சாரல் ஜனவரி 2015 இதழில் இரண்டு ஹைக்கூக்கள்


பொதிகைச் சாரல் ஜனவரி 2015 இதழில் இரண்டு ஹைக்கூக்கள்

---------------------------------------------------------------

அன்னதானம்

அலைமோதும் கூட்டம்

பாட்டியின் மாக்கோலம் .

கடித்துவிட்டது
பணப்பையை
தொலைந்த செருப்பு .


[ பொதிகைச் சாரல் ஜனவரி 2015 ]

ஏன் ?


ஏன் ?

ஒவ்வொரு கதவு
மூடப் படும் போதும்
இன்னொரு கதவு
திறக்கப் படுமாம் .
உண்மைதான் !
ஆனால் -
மூடிய கதவின் சாவி
நம் கையில் இருந்தால்
இன்னொரு கதவு திறக்க
ஏன் காத்திருக்க வேண்டும் ?

[ பாக்யா ஜனவரி 09 – ஜனவரி 15  – 2015 ]




வியாழன், 1 ஜனவரி, 2015

தொட்டி மீன்கள் .


தொட்டி மீன்கள் .

சற்றே உப்புக்குறைவு

சலித்துக் கொண்டன

தொட்டி மீன்கள் 
.

கடல் வற்றிவிட்டது

கவலைப்பட்டன

கண்ணாடிக்குள் மீன்கள் .

கடலுக்குள் திரியும் மீன்கள்
கண்டதில்லை
கண்ணாடிக் கூண்டுகளை .



[ முகநூல் பதிவுகள் ]