வெள்ளி, 19 டிசம்பர், 2014

இலக்குகள்



இலக்குகள் 

ஊர்ந்து கொண்டேயிருக்கும்
எறும்புகளுக்குத் தெரிந்துதானிருக்கிறது
அவற்றின் இலக்குகள் தெளிவாக .
உட்கார்ந்து கவனிக்கும் நம்மிடம்தான்
எஞ்சியிருக்கின்றன
பயணம் குறித்த பயங்களும்

குழப்பங்களும் . 

[ முகநூல் பதிவு ]


[ பாக்யா டிசம்பர் 26 – ஜனவரி 01 – 2014 ] 
 வார இதழிலும் “ எறும்புகளும் எஞ்சியவைகளும் “ என்று தலைப்பிடப்பட்டு 
வெளியாகியுள்ளது .


கவிழாத படகுகள் .

கவிழாத படகுகள் .
இளம் வயதில் தோன்றிய
தனித் தீவுக் கற்பனைகள்
இன்னும் மறக்கப் படாத ரகசியங்களை
வழுக்கும் மேசையின்
இரு புறமும் அமர்ந்து
பறிமாறிக் கொண்ட நேரத்தில் ,
இனிய காற்றிலும் ,
ஆற்று நீரில் பட்டுத் தெளித்த
மழைத் துளிகளின் அழகிலும்
மனம் ஒன்றி ,
படகு கவிழ்ந்த பயணம்
வாய்க்காமலே போய் விட்ட
சோகத்தில் ஆழ்ந்ததினால்
கவிழாத படகின் பயணம்
ரசிக்கப் படாமலே
கழிந்து போய் விட்ட

இளம் வெயில் காலம் .

 [ மலைகள் இணைய இதழ்  - 64 ஆவது இதழ் – டிசம்பர் 17 , 2014 ]

[ கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ் 30 – டிசம்பர் 16 – 31 ] இதழில் எனது லிமரைக்கூ கவிதைகள்


இனிஒரு விதி செய்வோம்
விளை நிலத்தை விற்க மாட்டோம்
எப்பாடாயினும் பயிர் செய்வோம் .


மார்கழி மாதம் குளிர்காலம்
மனதில் நிறைந்த இசையாய் மணக்கிறது
வெம்பாவை ஆண்டாள் திருக்கோலம் .
  

மானிடரை உய்விக்க உதித்தார்
அன்பை மாநிலத்தில் வளர்க்க பாடுபட்டு
மிருகங்களால் சிலுவையில் மரித்தார் .

[ கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ் 30 – டிசம்பர் 16 – 31 ] 


திங்கள், 15 டிசம்பர், 2014

குறைந்தது .

குறைந்தது .

எடையைக் குறைக்க
நடக்கச் சொன்னார் மருத்துவர் .
நடந்து நடந்தே 
குறைந்து விட்டது
வங்கி கையிருப்பு 
அடிக்கடி நடந்தது
என் வீட்டிற்கும்
அவரது மருத்துவமனைக்கும்
என்பதால் .

[பாக்யா - டிசம்பர் 19  – 25 , 2014 ] 

சனி, 6 டிசம்பர், 2014

சும்மா தமாசுக்கு.....- சொர்க்கமும் நரகமும் .


சும்மா தமாசுக்கு.....- சொர்க்கமும் நரகமும் .

         ஒரு அமெரிக்க வழக்கறிஞர் , ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி , ஒரு ரஷ்ய தொழிற்சங்கத் தலைவர் மூவரும் ஒரே நேரத்தில் மரணம் அடைந்தார்கள்.  மூவருமே ஒரே நேரத்தில் வானுலகம் போய்ச் சேர்ந்தார்கள் . அங்கே இரு வாசல்கள் பக்கத்துப் பக்கத்தில் . ஒன்று சொர்க்கத்திற்கானது . மற்றொன்று நரகத்திற்கான வாசல் . இரண்டுக்கும் நடுவில் ஒரு தேவ தூதர் – கையில் ஒரு புத்தகத்தோடு . 
       மூவரும் போய்ச் சேர்ந்த நேரத்தில் அவர்களுக்கு முன்னால் பெரிய வரிசை . இரண்டு வாசல்களுக்கும் ஒரே வரிசைதான் என்பதால் வரிசை மிக நீண்டிருந்தது . தேவதூதர் தன் கையில் இருந்த புத்தகத்தை புரட்டி பார்த்துப் பார்த்து ஒவ்வொருவராக ஏதேனும் ஒரு வாசலுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தார் . ஒரு வழியாக நம்மாள் மூவரும் தேவதூதன் முன்னால் வந்து விட்டார்கள் .
      “ எதை வைத்து வாசலை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் ? “ என்றார் அமெரிக்க வழக்கறிஞர் .
      “ ஒவ்வொருவர் செய்த பாவ புண்ணியங்களின் விபரங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது . அதன் அடிப்படையில் சொர்க்கமும் , நரகமும் தீர்மானிக்கப் படுகிறது “ என்றார் தேவ தூதர் .
             ”இல்லை , உங்களது செயல் பாரபட்சமாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் . “ என்றார் ரஷ்யர் .
     “ ஏன் அப்படி கருதுகிறீர்கள் ? “ தேவதூதர் குழப்பத்துடன் கேட்டார் .
     ”  காத்திருந்த நேரத்தில் நான் சேகரித்த புள்ளி விபரப் படி  99.927 சதவிகித இந்தியர்களை நீங்கள் சொர்க்கத்திற்கு அனுமதித்திருக்கிறீர்கள் . ஆனால் மற்ற நாட்டவர்களைப் பொறுத்தவரை அந்த சதவிகிதம் மிக மிக கம்மியாக உள்ளது . உண்மையில் பார்க்கப் போனால் மற்ற எல்லா நாட்டவர்களுக்கும் சேர்த்து அந்த சதவிகிதம் வெறும் 0.008 தான் “ என்றார் ஜெர்மானிய விஞ்ஞானி .
     “ இதை நாங்கள் பலமாக ஆட்சேபிக்கிறோம் . ஒரு போராட்டம் நடத்தப் போகிறோம் . “ என்று குரலை உயர்த்தினார் ரஷ்யர் .
     “ உங்களது செயல் பாரபட்சமானது . அதற்கான சரியான காரணம் தெரியும் வரை நாங்கள் உள்ளே போக மாட்டோம் . “ அமெரிக்கர் விரலை உயர்த்தி பேசினார் .
     சற்று நேரம் திகைத்துப் போயிருந்த தேவதூதர் மிக மெல்லிய குரலில் பதில் கூறினார் . “ அய்யா , நாங்கள் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கும் அத்தனை இந்தியர்களும் அந்த நாட்டில் சாதாரணப் பிரஜைகளாக இருந்தவர்கள் . பிறந்ததில் இருந்து இறக்கும் வரை நரக வாழ்க்கையே வாழ்ந்து விட்டார்கள் . பாவம் , இங்கு வந்தாவது சொர்க்க வாழ்வை அனுபவிக்கட்டுமே என்று தேவன் இந்த சலுகையை வழங்கியுள்ளார் . அவ்வப்போது நரகத்திற்குள் அனுப்பப்படும் இந்தியர்கள் அந்த நாட்டு அரசியல்வாதிகள் . “
     தேவதூதனின் பதிலைக் கேட்ட மூவரும் மறுபேச்சின்றி அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த வாசலுக்குள் நுழைந்து விட்டனர் .
-----------------------------------------------------------------------        [ முகநூல் பதிவு ]


வியாழன், 4 டிசம்பர், 2014

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 29 [ டிசம்பர் 1 - 15 , 2014 ] இதழில் வெளிவந்த என் லிமரைக்கூ கவிதைகள் :


கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 29 [ டிசம்பர் 1 - 15 , 2014 ] இதழில் 

வெளிவந்த என் லிமரைக்கூ கவிதைகள் :



எய்ட்ஸ் தினம்

இளமையை விரும்பும் யயாதி
இறந்தால் வராது உன் வாழ்க்கை
உணர்ந்தால் இல்லையே வியாதி .

கப்பற்படை தினம்

கடல் வழியே பாதுகாப்பு
கடல் சூழ்ந்த நம் நாட்டை
காக்கும் நல்ல கட்டுக்கோப்பு .

கார்த்திகை தீபம்

வெளிச்சமாய் தீபங்கள் வீடெங்கும்
வருடம் தோறும் வரும் கார்த்திகை
வளமாய் அமையட்டும் நாடெங்கும் .

[ கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 29  டிசம்பர் 1 - 15 , 2014 ]


புதன், 3 டிசம்பர், 2014

கணிப்பு -


கணிப்பு .


அவர்கள் இவர்களுக்குள் .
இவர்கள் அவர்களுக்குள் .
தெரிந்தும் தேடிக்
கொண்டேதான் இருக்கிறார்கள் .
இவர்கள் அவர்களையும் .
அவர்கள் இவர்களையும் .
சுயமாக அமைத்துக் கொண்ட
சுவர்களுக்குள் ஒளிந்திருக்கும்
இருட்டில் தேடுவதால்
இது வரை
அவர்களால் இவர்களையும்
இவர்களால் அவர்களையும்
கண்டு கொள்ளவே இயல வில்லை .
எனினும்
தொடர்ந்து கொண்டேதான்
இருக்கிறது தேடல் .
சுவர்களில் துளை போட்டு
உருவாகும் வெளிச்சத்தில்
அவர்கள் இவர்களையும்
இவர்கள் அவர்களையும்
கண்டு கொண்டு
ஒன்றாக ஆகிப் போகலாம் ;
அல்லது
அவர்கள் இவர்களாகவும்
இவர்கள் அவர்களாகவும்
மாறியும் போகலாம் .
எல்லாமே ஒரு கணிப்புதான் .

[ மலைகள் இணைய இதழ்  - 63 ஆவது இதழ் – டிசம்பர் 2 , 2014 ]


நன்றி : மலைகள் இணைய இதழ்