சும்மா தமாசுக்கு..... ரெட்டை வாசல் .
அது கட்சியின் தலைமை
அலுவலகம் . அதில் தலைவருக்கென்று தனி அறை . சகல வசதிகளுடன் உள்ள அந்த பிரமாண்டமான
அறையில்தான் தலைவர் தொண்டர்களையும் , கட்சிக்காரர்களையும் சந்திப்பார் . அந்த
அறைக்கு இரு வாசல்கள் . இரு கதவுகள் . ஒன்று அகலம் குறைந்தது . இன்னொன்று மிக
அகலமானது . இரண்டுமே பக்கத்துப் பக்கத்தில் அமைந்திருக்கும் . அநேகமா அனைவரும்
உள்ளே வருவதும் போவதும் அகலம் அதிகமான வாசல் வழியேதான் . அகலம் குறைந்த வாசல்
சும்மாவாகவே இருக்கும் . கட்சிக்காரர்களுக்கும் , தொண்டர்களுக்கும் வெகு
நாட்களாகவே ஒரு சந்தேகம். எதற்காக இரண்டு வாசல்கள் ? ஒன்று போதாதா ? ஆனால் தலைவரிடம் கேட்க பயம் . தப்பாக
நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று . தேசீயக் கட்சியின் தலைவர் ஒருவர் முதன்
முறையாக தலைவரைப் பார்க்க வந்தார் ஒரு நாள் . அவருக்கும் அந்த சந்தேகம் வந்து
விட்டது . ஆளும் தேசீயக் கட்சியைச் சேர்ந்தவராயிற்றே , அதனால் பேச்சு வார்த்தைகள்
முடிந்து கிளம்பும் போது தைரியமாக தனது சந்தேகத்தை கேட்டு விட்டார் . தலைவரின்
பதில் தயங்காமல் சட்டென்று வந்தது . “ முதல்ல ஒரு வாசல் மட்டும்தான் வச்சு
கட்டினேன் . அந்த சின்ன வாசல் . கட்சி ஆரம்பிச்ச புதுசில ஒரு பிரச்சினையும் இல்லை
. எல்லோருமே அந்த வாசலைத்தான் பயன்படுத்தினோம் . ஆனால் கட்சி வளர வளர , பாருங்க
நம்ம ஆளுங்களாலே அந்த வாசலுக்குள்ள நுழைந்து வர முடியல . அதான் அவங்க
அகலத்துக்கேற்ற மாதிரி அகலத்தைக் கூட்டிட்டேன் . சொல்லப் போனா என்னாலயே அந்த சின்ன
வாசல் வழியா நுழைய முடியாது . ஆனா இப்பவும் கட்சியோட அடிமட்டத் தொண்டர்கள் அந்த
வாசல் வழியாவே வந்திடராங்க.” தேசீயக் கட்சி தலைவர் கை குவித்து விடை
பெற்றுக் கொண்டு அகலம் அதிகமான வாசல் வழியாகத்தான் வெளியே போனார் .
----------------------------------------------------------------------
[ படித்து
முடித்ததும் நியூட்டன் ஞாபகமும் , பூனைக்குட்டிகள் ஞாபகமும் வந்தால் அது என்
தப்பில்லை . நியூட்டன் மற்றும் அவர் வளர்த்த பூனைக்குட்டிகளின் தவறுதான் . ]
--------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக