பொடி விஷயம் .
காலையில் கிளம்பும் போதே பரபரப்போடுதான் கிளம்பினார்
ரங்கசாமி . ஆறு மாதமாக காலியாக இருந்த பக்கத்து இருக்கைக்கு இன்று புதிதாக ஆள்
வருகிறான் .
அலுவலகத்தில் அவர் பிரிவில் இரண்டு கண்காணிப்பாளர்
பதவிகள் . ஒன்று காலி . ரங்கசாமிதான் ஆறு மாதமாக கூடுதல் பொறுப்பில் அந்த
இடத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் .
கால் மணி நேரத்திற்கு முன்பே இருக்கையில் இருந்தார் ரங்கசாமி . ஐந்து நிமிடத்தில் புதியவனும் வந்து
விட்டான் .
வந்தவுடன் அறிமுகம் செய்து கொண்டான் . இருவரும் சென்று
மேல் அதிகாரிகளை பார்த்து விட்டு வந்தார்கள் .
இருக்கையில் அமர்ந்ததுமே வெற்றிலை போட ஆரம்பித்தான் .
அவருக்கும் நீட்டினான் . பெட்டியை இருவருக்கும் நடுவில் இருந்த ரேக்கில் வைத்தான்
.
கால் மணி நேரம் கழிந்ததும் ரங்கசாமிக்கு மூக்கு அரித்தது
. கை அனிச்சை செயலாக ரேக்கிற்கு நீண்டது . வழக்கமாக வைக்கும் இடத்தில் பொடி டப்பா
இல்லை . .திரும்பிப் பார்த்தார் . டப்பாவில் இருந்து உரிமையோடு எடுத்து மூக்கில்
வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தான் .
பொடி டப்பாவை அவன் ரேக்கில் வைத்ததும் அவசரமாக
எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினார் .
கால் மணி நேரம் போயிருக்கும் பொடி உறிஞ்சும் ஓசை
கேட்டுத் திரும்பினார் . அவன்தான் .
அதன் பின் கால் மணி நேரத்திற்கு ஒரு தடவை பொடியை
உறிஞ்சிக் கொண்டிருந்தான் . போற போக்கில் பயல் டப்பாவை காலி பண்ணி விடுவான்
போலிருந்தது .
மாலையில் அவசரமாக பொடி டப்பாவை எடுத்து பைக்குள்
போட்டுக் கொண்டார் . டப்பா அநேகமாக காலி . நாளை டப்பாவை பைக்குள்ளேயே வைத்துக்
கொள்ள வேண்டும் . கொஞ்சமும் நாசூக்கு இல்லாத பயல் .
வீட்டிற்குள் நுழையும் போதே மனைவியின் குரல் ஒலித்தது
.
” ஆபிஸ்ல
எப்படி வேலை ஓடுச்சு ? பொடி டப்பாவை எடுக்காமலேயே போயிட்டிங்களே . “ மனைவி கையில்
அவரது பொடி டப்பா .
அவரது கை பைக்குள் அதே போலிருந்த டப்பாவை வருடியது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக