இவ்வாறுரைத்தான்
தர்ம புத்திரன் . – 1
“ தன் லட்சியத்தை
அடைகிறவன் , அதன்பிறகு அதைக் கடந்து செல்கிறான் . “ -
நீட்ஷே .
தர்ம புத்திரன்
குகைக்கு வெளியே வந்து ஆகாயத்தைப் பார்த்தான் . சூரியன் மிகப் பிரகாசமாக இருந்தது
. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் அவன் குகையில் இருந்து வெளிப்பட்டு வெளியே
வந்திருக்கிறான் .
சூரியக்
கதிர்கள் பாறைகளில் பட்டுப் பாறைகள் பளபளத்தன .
பார்வையை
வானத்தில் இருந்து இறக்கி மலையின் அடிவாரத்தைப் பார்த்தான் . கீழே பெருங்கூட்டம்
. மலையின் உயரத்தில் இருந்து
பார்க்கும்போது அவ்வளவு பெரிய கூட்டம் சிறு புள்ளியாகத்தான் தோன்றியது . எனினும்
அவனுக்குத் தெரியும் அது மிகப் பெரிய கூட்டம் என்று .
தர்ம புத்திரன்
இறங்கத் தொடங்கினான் . அந்த நீண்ட பயணத்தின் முதல் அடியை எடுத்து வைத்தான் .
இறங்க இறங்க
அவன் கூட்டத்தின் அருகாமைக்கு வந்து கொண்டிருந்தான் . அடிவாரத்தை நெருங்குவதற்கு
சற்று முன் அவனைப் பார்த்துவிட்ட கூட்டம் பெருத்த சப்தத்தை எழுப்பியது .
வந்து விட்டான்
. வந்து விட்டான் . ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் . அத்தனை குரலிலும் எதிர்பார்ப்பும்
பிரமிப்பும் .
சப்தம் அவன்
காதில் படும் தூரத்தில் வரும்போது கேள்விகள் அவனை நோக்கி வீசப்பட்டன .
நீ யார் ?
நீ மலையின்
உச்சியில் இருந்து வருகிறாயா ?
உண்மையிலேயே நீ
மலையின் உச்சிக்குப் போயிருந்தாயா ?
எங்கே போகிறாய்
?
எதற்காக
உச்சியில் இருந்து இறங்கிவிட்டாய் ?
உன் பெயர் என்ன
?
உனது ஊர் எது ?
கேள்விகள் ... கேள்விகள்
... கேள்விகள் ... கேள்விகள் ...
இது எதுவுமே
தெரியாமலா நீங்கள் எனக்காக காத்திருக்கிறீர்கள் ? அவனது கேள்விக்குள் பகடி
ஒளிந்திருந்ததை கூட்டம் உணரவில்லை .
எங்களுக்கு நீ
இன்று வரப் போகிறாய் என்று மட்டுமே தெரியும் .
அவன் எப்படித்
தெரியும் என்று கேட்கவில்லை .
நீ யார் ?
கூட்டம் மீண்டும் கூச்சலாக கேட்டது .
ஒருவர் ஒருவராக
பேசுங்கள் . கூச்சலில் எதுவும் புரியாது .
நீ யார் ?
வயதில் முதியவன் ஒருவன் கேட்டான் .
நான் நான்தான்
. நான் யாராகவும் முடியாது . யாரும் நானாகவும் முடியாது .
இப்போது எங்கே
போகிறாய் ? மீண்டும் முதியவன் . அவனது நீண்ட வெளுத்த தாடி காற்றில் அசையக்
கேட்டான் .
நான் முதலில்
எங்கிருந்து வந்தேனோ அங்கே போகிறேன் .
கூட்டம்
அமைதியானது .
சற்று நேரம்
கழித்து கண்கள் சுருங்கிய ஒரு நடுத்தர வயதுக்காரன் அமைதியைக் கலைத்தான் .
நீ மீண்டும்
மலை உச்சிக்குப் போகிறாயா ?
தர்ம புத்திரன்
அவனை உற்றுப் பார்த்தான் .
இல்லை . நான் மீண்டும்
உச்சிக்குப் போகப் போவதில்லை . இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன் . நான் மீண்டும்
உச்சிக்குப் போக வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள் ?
ஏனெனில்
நாங்களும் உன்னோடு உச்சிக்குப் போக விரும்புகிறோம் . எங்களால் தனியாக செல்ல இயலாது
. முதியவனின் தாடி மேலும் அதிகமாக ஆடியது . மேலும் சில குரல்கள் அவன் சொன்னதை
திருப்பிச் சொல்லின .
நீங்கள்
இருக்கும் இடமே நல்லதாக இருக்கும்போது எதற்காக உச்சிக்கு செல்ல விரும்புகிறீர்கள்
? தர்ம புத்திரன் கேள்வி மொத்தக் கூட்டத்தையும்
நோக்கி விழுந்தது .
தங்கத்தை அடைய
. மீண்டும் முதியவனே பேசினான் . உச்சியில் உள்ள தங்கத்தை அடைய . கூட்டம் அவனை
ஆமோதித்தது . அனைவரின் வலது கைகளும் மலையின் உச்சியைச் சுட்டிக் காட்டின .
மலை உச்சி
சூரிய வெளிச்சத்தில் பிரகாசமாக மின்னியது .
இல்லை . அங்கே
தங்கம் இல்லை . அவை சூரியனின் கதிர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெறும் கற்கள் . .
மழையாலும் வெயிலாலும் அரவணைக்கப்பட்டு இயற்கையால் பராமரிக்கப்பட்டு வரும் மலையின்
பாறைகள் . தர்ம புத்திரன் குரலில் இலேசான நகைப்பு இழையோடியது .
இல்லை . நீ
பொய் சொல்கிறாய் . எஙகளுக்குத் தெரியும் . அங்கே நிறைய தங்கம் இருக்கிறது .
எங்களது வறுமையை விரட்டுவதற்கான மிகுந்த செல்வம் கொட்டிக் கிடக்கிறது . அள்ளி
எடுத்துக் கொள்வதற்காக . கூட்டம் மொத்தமும் ஒரே குரலில் ஒலித்தது .
தர்ம புத்திரன்
புன்னகைத்தான் .
அங்கே தங்கம்
இருந்திருந்தால் நான் எனக்காக நிறைய எடுத்து வந்திருப்பேன் ..
பொய்...
பொய்... நீ உண்மையை எங்களிடம் இருந்து மறைக்கிறாய் .
தர்ம புத்திரன்
இரு கரங்களையும் விரித்து அவர்கள் முன் நீட்டினான் .
பாருங்கள்
என்னிடம் எதுவும் இல்லை .
உனக்கு
தங்கத்தின் மீது விருப்பம் இல்லாமல் இருக்கலாம் . ஆனால் எங்களுக்கு இருக்கிறது .
எங்களுக்கு வேண்டும் . அது ஒன்றே எங்களது அவலங்களை நீக்கும் .
எங்களை
உச்சிக்கு கூட்டிச் செல்லுங்கள் . தயவு செய்யுங்கள் . இருப்பதில் இளையவனாகத்
தெரிந்தவன் குரலில் கெஞ்சல் .
தர்ம புத்திரன்
சிரிக்கத் தொடங்கினான் .
தயவு
செய்யுங்கள் . உங்களால் மட்டுமே எங்களை உச்சிக்கு இட்டுச் செல்ல முடியும் . முதியவன் இரு கைகளையும் கூப்பினான் .
சரி . நான்
உங்களை உச்சிக்கு கூட்டிச் செல்கிறேன் . ஆனால் அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் .
களைப்பூட்டக் கூடிய நெடுந்தூரம் . தயாராக இருக்கிறீர்களா அத்தகைய நெடும்பயணத்திற்கு
?
மொத்தக்
கூட்டமும் தலையாட்டியது .
தர்ம புத்திரன்
மீண்டும் ஒரு தடவை அனைவரையும் பார்த்தான் .
ஆண்கள் ,
பெண்கள் , முதியவர்கள் , இளையவர்கள் , ஆரோக்கியமானவர்கள் , தளர்ந்து போனவர்கள் ...
குழந்தைகள் கூட இடுப்பில் .
மீண்டும்
சொல்கிறேன் . களைப்பூட்டக் கூடிய நெடுந்தூரம் . உங்களை தளர்ச்சி அடைய வைத்துவிடும்
.
கூட்டம் அவனது
எச்சரிக்கையை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை .
தர்ம புத்திரன்
திரும்பினான் . மலையில் ஏறத் தொடங்கினான் . கூட்டம் அவனைத் தொடர்ந்தது .
அடிவாரத்தில் யாருமே இல்லை .
சூரியன் மேலும்
அதிகமாக ஒளிர்ந்து கொண்டிருந்தான் . வெப்பம் கடுமையாகிக் கொண்டிருந்தது . மலையின்
அடிவாரப்பகுதி என்பதால் ஓரளவிற்கு மெல்லிய சரிவாகத்தான் இருந்தது . எனினும்
வெப்பத்தால் பாறைப் பகுதிகள் சூடாகி இருந்தன . முட்செடிகள் கால்களை வருத்தின . ஆனால்
யாருமே தயங்கியதாகக் காட்டிக் கொள்ளவில்லை . எவ்வளவு சீக்கிரமாக உச்சிக்குச் செல்ல
முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்று விட வேண்டும் என்ற துடிப்போடு தர்ம புத்திரனைத்
தொடர்ந்து கொண்டிருந்தார்கள் .
அனைவரது
மனதிலும் ஒரே ஒரு எண்ணம்தான் .
உச்சியில் உள்ள தங்கம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக