சும்மா தமாசுக்கு..... நவீன துரோணர் .
இந்திய வில்வித்தை வீரர் ராகுல் பானர்ஜி
தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தார் . சென்னைக்கு வெளியே அவ்வளவாக பரபரப்பு இல்லாத
ஓரிடத்தின் இயற்கையான சூழ்நிலை அவருக்குப் பிடித்துப் போனது . தினமும் அந்த பாதை
வழியே இருபுறமும் தென்பட்ட இயற்கை அழகை ரசித்தவாறே நடக்க ஆரம்பித்தார் . ஒருநாள்
அவர் கண்ணில் பட்ட அந்த காட்சி அவரை அப்படியே வியப்பில் மூழ்க வைத்துவிட்டது .
மரங்கள் அடர்ந்த ஓரிடம் . இரு
மரங்களுக்கிடையே கனமான வெள்ளைத் திரை கட்டப் பட்டிருந்தது . திரை முழுவதும்
வில்வித்தைக்கான வட்டக் குறிகள். ஒவ்வொரு குறியின் நடுமையத்திலும் குறிபார்த்து
எய்யப்பட்ட அம்புகள் . ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார் . இத்தனை வருடமாக
பயிற்சி எடுக்கும் தனக்கே சாத்தியமாகாத திறமை உடையவர் யாராக இருக்கும் என
நினைத்தவாறே சுற்றிலும் பார்த்தார் .
சற்றுத் தள்ளி ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி
மரத்தில் சாய்ந்திருந்த உருவத்தைப் பார்த்தார் . அவரது பக்கத்தில் ஒரு வில்லும்
சில அம்புகளும் இருந்தன . அருகில் சென்ற போது ஒரு பிரபல நடிகர் என்பது புரிபட்டது
. தமிழ் நடிகர்தான் . ஆனாலும் அவர் படங்கள் நிறைய ஹிந்தியில் டப் செய்யப்
பட்டிருந்ததால் பானர்ஜிக்கு அடையாளம் தெரிந்து விட்டது . [ பெயர் வேண்டாமே .
வேண்டுமா ? சரி குமுதம் பாணியில் ஒரு க்ளூ . தமிழின் முதல் எழுத்தில் ஆரம்பமாகும்
பெயருடையவர் . போதுமா ? ]
கண்களை மூடிச் சாய்ந்து கொண்டிருந்தவரை
எழுப்பலாமா என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் கண்களை திறந்து
விட்டார் . பானர்ஜி வணக்கம் சொல்லி விட்டு தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
நடிகரும் பதில் வணக்கம் சொன்னார் .
“ அய்யா , இந்த அம்புகள்... “
நடிகர் இலேசான புன்னகையுடன் “ ஆமாம் நான்
எய்ததுதான் “ என்றார் .
” இவ்வளவு திறமை உள்ள நீங்கள் முயற்சி செய்தால்
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்று விடலாமே . “
நடிகர் புன்னகைத்தார்
உதடுகளை விரிக்காமல் . “ எனது ஆர்வம் எல்லாம் சினிமாதான் .அதிலேயே எனக்கு
மனத்திருப்தி , பணம் , புகழ் எல்லாமே கிடைக்கும்போது வேறு எதிலும் எனக்கு ஆசை
இல்லை .”
“ சரி அய்யா , எனக்கு ஒரு மாதம் பயிற்சி கொடுக்க முடியுமா
? உங்களிடம் பயிற்சி எடுத்தால் நிச்சயமாக என்னால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல
முடியும் என்று தோன்றுகிறது . ”
என்றார் பானர்ஜி .
“ எனது பிஸி
ஷெட்யூலில் அதற்கெல்லாம் நேரம் கிடைக்காது . “
“ அப்படியானால் தயவு
செய்து எப்படி இவ்வளவு குறி பார்த்து அம்பு எய்வது என்று சில டிப்ஸாவது தர
முடியுமா ? “ பானர்ஜி கெஞ்சுவது போலக் கேட்டார் .
சாய்ந்திருந்த நடிகர்
நிமிராமலே சொன்னார் . “ அது வெகு சுலபம் . முதலில் அம்பை எய்து விட வேண்டும் .
பின் அம்பைச் சுற்றி வட்டங்களை வரைந்து விட வேண்டியதுதான் . “ அவருக்கு சற்றுத் தள்ளி ஒரு காலி பெயிண்ட்
டப்பா உருண்டு கிடந்தது . மயங்கி விழப்போன பானர்ஜி சமாளித்துக் கொண்டு நடையைக்
கட்டினார் .
[ முகநூலில் பதிவு செய்தது ]
விழுந்து விழுந்து சிரித்தேன்.
பதிலளிநீக்குஅப்படி என்ன கடுப்பு அந்த நடிகர் மீது ?