வேட்டி சட்டை கதை .
வேட்டியணிந்து
வந்தவரை
வெளியிலே நிற்க
வைத்தவர்களை
சாட்டையால் அடித்துத்
தோலை உரிக்காத
குறைதான் .
அங்கீகாரத்தை ரத்து
செய்யெனவும் ,
வேட்டிக்குரிய
மரியாதை கொடுக்க
சட்டமியற்ற
வேண்டுமெனவும்
உரத்த கோஷங்கள் .
சர்ச்சை ஓய்வதற்குள்
சட்டையணிந்து
சென்றார்
மடத்திற்குள் நடிகரென
அடுத்த கதை .
பசியாறிக்
கொண்டிருக்கின்றன
பத்திரிகைகளும்
ஊடகங்களும் .
வேட்டியோ சட்டையோ
இருப்பது
ஒவ்வொன்றிலும்
ஒன்று மட்டுமே .
கல்யாணமோ கருமாதியோ
கசக்கிக் கசக்கி கட்ட
வேண்டியதிருக்கிறது
அதையேதான் .
கசக்கிக் கட்டி
கசக்கிக் கட்டி
கந்தையாகிவிட்டது
அதுவும் .
மச்சினி மகளுக்கு
மஞ்ச நீராட்டு
எதை அணிவது நாளை காலை
.
எங்களை சட்டை செய்ய
யாருமேயில்லையென
சலித்துக் கொள்கிறான்
சங்கரலிங்கம் .
[ மகாகவி டிசம்பர்
2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக