20 . 11 . 2016 அன்று, பொள்ளாச்சி இலக்கிய வட்டம் கூட்டத்தில் எனது “ வண்டறிந்த ரகசியம்
‘ கவிதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி.நண்பர் , எழுத்தாளர்
பொள்ளாச்சி அபி அளித்த உரை .
சிறப்பு வாய்ந்த பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட படைப்பாளிகளுக்கும்,இந்த இலக்கிய அமர்வில் கலந்து கொள்வதற்காக ஏ.டி.எம். வாசலில் நிற்கும் வேலையை நேற்றே முடித்துக் கொண்டு இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் அறிமுகப்படுத்துவதற்றகாக தேர்வு செய்யப்பட்ட கவிஞர் சுப்ரா வின் வண்டறிந்த இரகசியம் புத்தகத்தை,நான் வழக்கமாக தேனீர் அருந்தும் கடையில் கொடுக்கச் சொல்லியிருந்தேன். தோழர் பூபாலனும் கடந்த வெள்ளியன்று அந்தக்கடையில் கொடுத்துவிட்டு எனக்கும் தகவல் சொன்னார்.
அந்தக்கடையில் குமாரு,குமாரு என்று இரண்டு பேர் இருக்கின்றனர்.அவர்களிடம் போய், “புத்தகத்தை கொடுங்கப்பா..”என்று கேட்டபோது, “இரண்டு மணிநேரம் கழித்து வாங்க சார்.அப்புறமாத்தான் தருவோம்..!”என்று சொன்னார்கள்.
வழக்கமாய் நான் மறந்துவிட்டால்கூட என்னை அழைத்துப் புத்தகம் கொடுப்பவர்கள் இன்று இப்படி சொல்வதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, “லேசா அங்கங்கே இருக்குற கவிதையெல்லாம் புரட்டிப் படிச்சோம் சார்.படிச்ச வரைக்கும் எல்லாமே நல்லா இருந்தது.அதனால முழுசாப் படிச்சுட்டு குடுக்குறோம் சார்..!”என்று சொல்ல,அதனைக் கேட்கவே எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
காரணம்,அன்றாட உடலுழைப்பில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் நூல்களை வாசிப்பதே அபூர்வம்,அதிலும் கவிதை என்றாலே காததூரம் ஓடும் தலைமுறையைச் சேர்ந்த இருவர் மிக விருப்பமாக ஒரு நூலை வாசிக்கிறேன் எனும்போது நாம் அதை கெடுக்கலாமா..என்று நினைத்தபடி,“சரிப்பா.. அப்புறமா வந்து வாங்கிக்கறேன்..” என்று கிளம்பிவிட்டேன்.
அதற்குப்பிறகு இன்றைய நிலையில் வீட்டுக்கு ஒருவர் அவசியம் செய்தே தீரவேண்டிய அதிமுக்கிய வேலைகளுள் ஒன்றான, வங்கி வாசலுக்கு சென்று மூன்று மணிநேரம் வரிசையில் நின்று,இருந்த குறைவான தொகையையும்,முழுதாக எடுத்துக்கொண்ட பின்,திரும்பக் கடைக்குச் சென்று புத்தகத்தை வாங்கிவந்தேன்.
இந்த சம்பவத்தின் மூலம்,தினத்தந்தி அதிபர் சி.பா.ஆதித்தனார் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் படித்தது நினைவுக்கு வந்தது.
ஒருமுறை அவரிடம் இலக்கண இலக்கியங்களைக் கரைத்துக்குடித்த,மெத்தப்படித்த மேதாவி ஒருவர்,தனக்கு அவரது நிறுவனத்தில் செய்தியாளராக வேலை வேண்டும் என்றுபோய்க் கேட்டபோது,அவரைப் பற்றி பொதுவாக விசாரித்துத் தெரிந்து கொண்ட ஆதித்தனார், ஏதோவொரு சம்பவத்தை அவரிடம் வாய்மொழியாகச் சொல்லி,இதனை செய்தியாக மாற்றி எழுதிக் கொண்டு வா.என்று சொல்ல,அவரும் மாங்கு மாங்கென்று ஒற்றுப்பிழை சந்திப்பிழை,குற்றியலுகரம்,ஐங்காரக்குறுக்கம் என எதுவும் விட்டுப் போகாமல்.தூயதமிழுக்கு எவ்விதக் குறையுமில்லாமல் செய்தியை எழுதி முடித்தபின்,ஆதித்தனாரிடம் காட்ட எடுத்துச் சென்றிருக்கிறார்.
ஆதித்தனார்,செய்தி எழுதப்பட்ட தாளை கையில்கூட வாங்கவில்லை.நமது நிறுவன வாசலில் நிற்கும் காவலாளியிடம் சென்று,இதனைப் படிக்கக் கொடு.அவர் அதைப்படித்தபின் என்ன சொல்கிறார் என்று திரும்ப வந்து சொல்லுங்கள் என்று சொல்ல,இவருக்கோ பெரும் அதிர்ச்சி.!,
நாம் புலவர் பட்டம் பெற்ற பெரிய படிப்பாளி ஆச்சே..காவலாளிகிட்டேயா போய் அபிப்ராயம் கேட்பது..? என்று அந்தப்புலவருக்குள் பெரும் மனச்சிக்கல்.லேசாய் ஆணவம்கூட..
இருந்தாலும் அப்போதைக்கு அவரது குடும்பப் பொருளாதார நிலைமை,அந்த ஆணவத்தின் தலையில் ஒரு போடுபோட.. சரி,இதில் ஏதாவது விஷயம் இருக்கும். என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் என்று எண்ணமிட்டபடி,காவலாளியிடம் சென்று அய்யா இதைப்படித்துவிட்டு,நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டுவரச் சொன்னார்
என்று சொல்ல,அவரும் வாங்கி நிதானமாகப் படித்தார்.மீண்டும் இன்னொருமுறையும் படித்தார்.
பின்னர் சொன்னார். நிறைய இடத்துலே புழக்கத்துலே இல்லாத வார்த்தையைப் போட்டு இருக்கீங்க,நேரடியாச் சொல்ல வேண்டியதை பட்டுன்னு சொல்லாம ரங்கராட்டினம் மாதிரி சுத்தி சுத்தி எழுதிருக்கீங்க.இந்தச் செய்தி எதைத்தான் சொல்ல வருதுன்னு சரியாப் புரியலைங்க..” என்று காவலாளி சொல்ல,
புலவருக்கு பெரும் குழப்பம்,தாளை வாங்கி அவரும் ஒருமுறை பார்த்துக் கொண்டார்.
நல்ல தமிழில்தான் எழுதியிருக்கிறோம்.காவலாளிக்கு நன்றாகப் படிக்கவும் தெரிகிறது.பின் ஏன் இவருக்குப் புரியவில்லை.? புலவரின் மனசுக்குள் கேள்விகளோடு,மீண்டும் ஆதித்தனாரிடம் சென்று நடந்ததைச் சொல்ல,அவரும் சிரித்துக் கொண்டே சொன்னார். இதுதான் யதார்த்தம்,நமது செய்தித்தாளை வாசிப்பவர்களில், பெரும்பான்மை ஏழைமக்கள்தான்.ஆரம்பக்கல்வி மட்டுமே பெற்ற அவர்களுக்கும் புரியும்படியாக எழுதினால்தான் நாம் செய்தித்தாள் நடத்துவதில் ஒரு அர்த்தம் இருக்கும்.என்று ஆதித்தனார் சொல்லியிருக்கிறார்.
அந்தவகையில்,டீக்கடைத் தம்பிகள் வாசிக்க விருப்பம் தெரிவித்த இந்தக் கவிதைத் தொகுப்பு,அங்கேயே வெற்றிகரமான ஒரு தொகுப்பாக நிறுவப்பட்டு விட்டது என்பதற்கான வாழ்த்துக்களையும் கவிஞர் சுப்ராவுக்கு மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி இந்தக்கவிதைத் தொகுப்பின் தன்மை குறித்து,என்னைப் போல சில புலவர்களின் வார்த்தைகளெல்லாம் கூடுதலான அலங்காரங்கள் அவ்வளவே..!
சாமானியர்களாக நாம் நினைக்கின்ற ஒருவருக்கு பிடிக்கின்ற எழுத்து எனில்,அப்படி என்னதான் இருக்கும் இந்தத் தொகுப்பில் என நானும் அங்கேயே நின்று புரட்டியதில் முதலில் கண்ணில் பட்டது இரகசியம் என்ற கவிதை.
“வெள்ளைநிறத்தில் சில தாடிகள்
முழுக்கறுப்பாக பல தாடிகள்
வெள்ளையும் கறுப்பும் கலந்து வேறு சில
மை தடவி உருமாறியும் உள்ளன பல
சில நீண்டு தொங்குகின்றன
பல தினம் தினம் களையெடுக்கப்பட்டு
அலங்காரத்தோடு மிளிர்கின்றன.
ஒவ்வொரு தாடிக்குள்ளும் ஒளிந்திருக்கிறது
அறிவோ அல்லது அரிப்போ
கவலைகளோ அல்லது காயங்களோ..,
பக்தியாகவும் இருக்கலாம்
பாவப் பரிகாரமாகவும் இருக்கலாம்
பசி தீரா பரிதாபத்தினாலும் இருக்கலாம்.
வேதனையாகவும் இருக்கலாம்
வெறுமையாகவும் இருக்கலாம்
ஏதேனும் வெறுப்பினாலுமிருக்கலாம்.
சமயங்களில் சோகத்தாலும் இருக்கலாம்
தாடிகள் மட்டுமே அறியும்,
தனக்குள் புதைந்திருக்கும்
அதனதன் இரகசியங்களை..!”
--இந்தக்கவிதையைப்படித்தவுடன்,வருடுவதற்கு சுகமான குறுந்தாடி வைத்திருக்கும் இந்த கவிஞருக்குள்,இனி வண்டறிந்த ரகசியமாக என்னவெல்லாம் இருக்கும் என்று அறிந்துகொள்ள ஆசை மிகுந்துவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.
பொதுவாக கவிஞர்கள் என்றாலே இச்சமூகத்தை விட்டு விலகிநின்று கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்ற பிம்பத்தை இன்னும் முழுதாக உடைக்க முடியவில்லை.
மாறாக,மக்கள் அன்றாடமும் தான் சந்திக்கின்ற பார்க்கின்ற கேள்விப்படுகின்றவைகளை ஒருவன் படைப்பாக்கும்போது அவன் மக்களின் கவிஞனாக மாற்றம் பெற்றுவிடுகிறான்.
சுருக்கமாகச் சொன்னால்,ஊரின் கழிவுகள் அத்தனையும் வாசலையொட்டிப் போகும் சாக்கடையோரம் அன்றாடமும் வசிக்கும் அன்னாடங்காய்ச்சிகள் குறித்த எவ்வித கவலையுமற்று,அவர்களுக்காக நான் ஏன் கவலைப்படவேண்டும் என எதிர்க் கேள்வியையும் கேட்பவர்களாகவே பெரும்பாலான கவிஞர்கள் இருக்கிறார்கள்.
மேலும்,அதெல்லாம் அவரவர் விதி என்று சொல்லவும் தயங்குவதில்லை.
இன்னும் உதாரணமாகச் செல்லவேண்டுமானால்,,500,1000 ரூபாய் செல்லாது என மத்திய அரசு கொண்டுவந்த திட்டம் குறித்து,கடந்த இருதினங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத அரங்கத்தில் கலந்து கொண்ட,சூட்டும் கோட்டும் போட்டுக் கொண்ட மனிதர்,தனது உரையின்போது,கறுப்புப் பண மீட்பென்பது சாதாரண மீன்காரிக்கும்,பூக்காரிக்கும் கூட பயனளிக்கும் திட்டம் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில்,ஆட்டோ ஓட்டுனராக உள்ள ஒருவரும் கலந்து கொண்டார்.
அவர் பேசும் முறை வந்தபோது,அவர் குறிப்பிட்டது என்ன தெரியுமா..? மீன்காரி,பூக்காரி என்று குறிப்பிடும் இடத்தில் நின்று கொண்டு இந்தியாவின் நிலையை நீங்கள் பார்க்கிறீர்கள்,மீன்காரம்மா,பூக்காரம்மா என்று குறிப்பிடும் இடத்தில் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம்.
இப்படி இருவேறுபட்ட நிலையில்தான் நம்நாடு இருக்கிறது. எனவே எந்தத் திட்டம் கொண்டுவந்தாலும் எல்லோருக்கும் பயனுள்ள,சிரமப்படுத்தாத திட்டத்தைக் கொண்டு வாருங்கள் என் தெரிவித்தார்.
இப்படி நம் நாட்டில் அம்பானிகளைவிட ஆட்டோ டிரைவர்கள் அதிகம் இருக்கும்போது, யாருடைய நலனுக்காக நாம் எழுதவேண்டும்..? என்ற ஒரு கேள்வியும் நமக்கு இயல்பாகவே எழுகிறதே.!
அம்பானிகளுக்காக எழுதுவதைவிட,அப்பிராணிகளின் நிலைமையை மாற்றுவதற்காக எழுத வேண்டும் என்று எழுதத் தெரிந்த ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
அவ்வாறு நினைக்கும் நல்ல இலக்கியவாதிகளுள் ஒருவராகவே நமது கவிஞர் சுப்ரா அவர்கள் இருக்கிறார்.அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றி,தனது எண்ணவோட்டத்தை முகநூலில் தொடர்ந்து பதிவு செய்து வருவதின் மூலம்,இந்த சமூகத்தைவிட்டு விலகி நிற்காதவர் என்று நமக்கும் அறிவிக்கிறார் என்பதற்கு உதாரணமாக,அவர் எழுதிய கவிதை ஒன்று மிகுந்த கவனத்தை ஈர்த்தது.
அந்தக்கவிதை வருமாறு
-பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே..!
“நீ எனக்கு நூறுரூபாய்த் தாள் ஒன்று தா..!”
- என்று கேட்கிறார்.
இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம், திடுமென்று ஒரு இரவில் 500,ஆயிரம் ரூபாய்கள் செல்லாதென மத்தியஅரசின் ஒரு அறிவிப்பு வருகிறது.இது கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட கடல்போன்ற மாபெரும் திட்டம் என்று கூறப்படுகிறது.
அதனை அறிவித்தபிறகுதான் நடைமுறைச்சிக்கல்களால் பொதுமக்கள்பொதுமக்கள் படும்துன்பங்களை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.
திட்டத்தை அறிவித்தவர்கள் இந்தச்சிக்கலைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையும்,இதனை சமாளிக்கும் விதத்தில் ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.
இந்த யதார்த்த நிலையை நான் இவருடைய கவிதை ஒன்றில் பொருத்திப் பார்த்துக் கொண்டேன் அந்தக்கவிதை என்னவெனில்,
-கடல் வரைந்து முடித்தபின்தான் கண்டுபிடித்தேன்-அதில்
உப்பைக் கரைக்க மறந்துபோனதை ..”-
-----என்ற கவிதை இப்போதைய யதார்த்தத்தடன் நன்கு பொருத்திப் பார்க்கமுடிகிறது.
மக்களுக்காக திட்டங்கள் போடுவதை நாம் குறை சொல்லவில்லை.ஆனால்,யாருக்காக அந்தத் திட்டம் என்று சொல்லப்படுகிறதோ..அவர்களுக்கு அந்தத் திட்டத்தினால் பயன் ஏற்படுவதற்கு பதிலாக துன்பம் ஏற்பட விடலாமா..? கடல் என்றால் அதில் உப்பு இருக்க வேண்டாமா..?
உப்பைக் கரைக்க மறந்து போன கடலை.எவ்வளவு பெரிதாய் வரைந்தாலும் என்ன பயன் இருக்கப்போகிறது.
அதேபோல,
-அகத்தியரின் கமண்டலத்தை அலட்சியமாகப் பார்க்கின்றன
அக்குவாஃபினா போத்தல்கள்..!
-என்றொரு கவிதையும் நடப்பு நிலையை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
இதுபோல பல உதாரணங்களை கூறிக் கொண்டே போகலாம்.
இத்தொகுப்பின் முன்னுரையில், “இக்கவிதைகளை வாசிக்கும் உங்களுக்கு அந்த வரிகளில், நான் ஒளித்துவைத்திருக்கும் பொருளில் இருந்து வேறுபட்ட பொருளைக்காண முடிந்தால் நான் பாக்கியவான்” -என்று கவிஞர் சுப்ரா குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த வகையில் அவர் பாக்கியவான்தான் என்று குறிப்பிடும்படியாக இத்தொகுப்பில் ஏராளமான கவிதைகள் உள்ளன.
தெளிவு என்று தலைப்பிட்ட ஒரு கவிதை..,
-நேற்று என்னவோ அதுவே இன்றும்,
இன்று எதுவோ நாளையும் அதுவே
தெளிவு என்பது தேடிவருவதல்ல
உதிர்ந்ததும் இலைதான்
உதிரப்போவதும் இலைதான்
பச்சையும் பழுப்பும் காலஇடைவெளியே
மண்ணில் புதைந்து மரமாகுமென்பதால்
கனிகள் புசிக்கப்படாமலா போகின்றன..?
--இந்தக்கவிதையை பல்வேறு விதமாக யோசித்தாலும் அதற்கு கச்சிதமாகப் பொருந்திப்போவது வெகு சிறப்பு.
இன்னொரு கவிதை..,
இடமாற்றம் என்ற தலைப்பில் ஒரு சிறிய கவிதை,
தேடித்தேடி நடந்துவந்த பாதையில்
ஒதுக்கி வந்த முட்களும்
தேடலின் முடிவில் மனதில்;..,
- வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு போவதில் முனைப்பு காட்ட வேண்டியவர்கள்,பல சமயங்களில் இதுவரை தனக்கு ஏற்பட்ட இழப்புகளைக் குறித்து கவலைப்பட்டே,தனது வேகத்தை முடக்கிக் கொண்டு,தானும் முடங்கிப் போய் சிறுமைப்பட்டுக் கொள்வதுண்டு.
இதற்கு உதாரணமாக ஒரு குரு சிஷ்யன் கதையை நீங்கள் வாசித்திருக்கலாம்.
தங்கள் பயணத்தின் வழியே ஒரு ஆற்றைக் கடப்பதற்காக ஒரு குருவும் சீடனும் செல்லும்போது,ஒரு அழகான இளம்பெண் ஆற்றைக்கடக்க முடியாமல் அவதிப்பபடுகிறாள். அவளுக்கு உதவ நினைத்த சீடன் அவளைச்சுமந்து கொண்டுபோய் அக்கரையில் இறக்கிவிடுகிறான்.
அவரவர் வழியில் பயணம் தொடர்கிறது. தன்னுடன் நடந்து வரும் குரு,வெகுநேரமாக மௌனமாகவே உடன் வருவதைக் கண்ட சீடன்,என்ன குருவே ஒன்றும் பேசாமலே வருகிறீர்களே..என்று கேட்டபோது,
குரு சொல்கிறார். துறவு வாழ்க்கையில் இருக்கும் நீ,ஒரு இளம்பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம் என்று கேட்கிறார். அதற்கு சீடனோ.. “குருவே..அவளை நான் அங்கேயே இறக்கி வைத்துவிட்டேன். நீங்கள் தான் இன்னும் அவளை சுமந்து கொண்டே வருகிறீர்கள்..”என்று சொல்ல குரு,அங்கே சிறுமைப்பட்டார்.
இப்படியாகத்தான் வாழ்க்கையின் போக்கில் எதை எங்கே விட்டுவிட வேண்டும் என்று அறிந்தவன் ஞானியாகிறான்.அறியாதவன் மூடனாகிறான் என்ற அனுபவத்தை அந்தக்கவிதை அழகாகப் புரியவைக்கிறது.
இதேபோலப் பொருள் தரும் இன்னொரு கவிதை தீர்வு எனும் தலைப்பில் இருக்கிறது.
தீர்வு
உளிகளின் மனஉளைச்சலால்
சிதைந்துபோன சிற்பங்களின் சிதறல்கள்,
தூரிகைகளின் கோபத்தால்
கலைந்துபோன ஓவியத்தின் கோடுகள்,
வார்த்தைகளின் குழப்பத்தால்
பாதியில் நின்றுபோன கவிதை வரிகள்
நரம்புகள் முறுக்கிக் கொண்டதால்
ஸ்வரம் தவறிய சங்கீதங்கள்,
தோலில் துளைவிழுந்ததால்
தடுமாறிய தாளங்கள்,
எல்லாவற்றையும் வாரி அள்ளி
தெருவோரக் குப்பைத் தொட்டியில் போட்டபின்பு
மேலும் அதிகமாக
ஓளிரத்துவங்கியது நிலா..!-
-இதுபோல பல அனுபவங்களையும்,நமக்குள் ஊர்வலமாக வரிசை கட்டும் அளவில் ஏராளமான கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.
வெற்று வெட்டு..” என்ற கவிதை நமக்குத் தரும் சிந்தனைகளும் படிப்பினைகளும் மிக அபாரம் என்றே சொல்லலாம்.
குறிப்பாக இந்தக் கவிதையை படித்து முடித்தவுடன் எனக்கு புரூஸ்லியும், ஜாக்கிசானும், ஜெட்லீயும்தான் நினைவுக்கு வந்தனர்.சொல்லப்போனால்,நமது கவிஞரைக்கூட,குறுந்தாடி வைத்திருக்கும் சற்றே வயதான ஒரு ஜாக்கிசானாகவே கற்பனை செய்து பார்த்துக் கொண்டேன்.
இந்தக்கவிதை என்னவென்று சொல்வதற்கு முன்,உங்களுக்கு ஒரு சங்கதியை நினைவூட்டுகிறேன். குங்பூ எனும் தற்காப்புக் கலையை மையப்படுத்தி வருகின்ற சில திரைப்படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.
குங்பூ என்பது சீனாவில் மிகப்புராதனமான மிகப்பழமையான கலை என்றாலும்,இன்றுவரை அதற்குள்ள வரவேற்பு குறையவே இல்லை. நவீன ஆயுதங்கள் எத்தனையோ புழக்கத்திலிருந்தாலும்,குங்பூ கலையைக் கற்றவனாகவே அவர்களின் திரைப்படக் கதாநாயகன் இன்றும் உலா வருகிறான்.
இது ஏன் என்று ஆலோசித்துப் பார்த்தீர்களானால் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ளலாம்.
அந்தக்கலையைக் கற்றவர்கள்,தனது எதிரியோடு மோதும்போது கையில் கிடைக்குமம் எதுவானாலும் அதுவொரு சங்கிலியாக இருக்கலாம்,சிறிய இருக்கையாக இருக்கலாம். கம்பாக இருக்கலாம்,துடைப்பக் கட்டையாக இருக்கலாம்,ஏன் சைக்கிளாகக் கூட இருக்கலாம்.இவ்வாறு நாம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தனையும் தனக்கு வாகான ஆயுதங்களாக அவர்கள் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கலாம்.
ஒரு எதிரியை சமாளிக்க ஏகே 47 துப்பாக்கி வாங்கத் தேவையில்லை.வெறும் கைபோதும், மீறினால் கையில் சுலபமாகக் கிடைக்கும் ஏதோவொரு பொருள் போதும் என்ற வசதி இருப்பதனால்தான் அந்தக் கலையைப் பயில்பவர்களின் பட்டியலில் சாமானியர்கள் பெரும்பாலும் இருக்கின்றனர்.
அதைப்போலவே மிகச்சாதாரணமாக நாம் பார்க்கின்ற அல்லது நடைபெறுகின்ற ஒரு சில சம்பவங்கள் மூலம் ஒரு மிகப் பெரும் படிப்பினையை சொல்லும் கவிதையாக,ஒரு பிரமிப்பைத் தரும் கவிதையாக,சொல்லப் போனால்,இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை என குறித்துவைத்துக் கொண்ட 50 கவிதைகளுள் முதன்மையானதாக இந்த “வெற்று வெட்டு” என்ற கவிதை இருக்கிறது.
வெட்டுதல்கள் நடைபெற்றுக் கொண்டேதான்
இருக்கின்றன.
அவ்வப்போது நானும் வெட்டுவதுண்டு நகங்களை
அளவுக்கு மீறி வளர்ந்ததினால்,
தினமும் மனைவி வெட்டுகிறாள்
விதவிதமான காய்கறிகளை உணவுக்காக
நேஷனல் சலூன் நயினார்
வெட்டிக்கொண்டெ இருக்கிறார்
தலைமயிர்களை அழகுபடுத்த,
வீதிவீதியாக கூவித்திரியும் வீரராகவன்
ஏதேனும் ஒருவீட்டு மரமேறி வெட்டித்தள்ளுகிறார்
தேங்காய்க் குலைகளை பயன்பாட்டிற்காக
நூற்றுக்கணக்கில் வெட்டித்தள்ளப்படுகின்றன
ஆடுகளும் கோழிகளும் அம்மன் கோயில் கொடையன்று
படைப்பவர்கள் வீட்டில் விருந்தாவதற்கு,
ஒட்டகங்கள் கூட வெட்டுப்படுகின்றன
குர்பாணி நோக்கத்தோடு..,
ஒவ்வொரு வெட்டுக்குப் பின்னும்
ஏதொவொரு காரணமும்
ஏதோவொரு தேவையும் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் சிலசமயங்களில்
மனிதர்கள் ஒருவரையொருவர்
வெட்டிக் கொள்வதும் வெட்டிக் கொல்வதும்
ஏன் என்றுதான் புரியவேயில்லை எத்தனை யோசித்தும்..!-
-சாதி மத மோதல்களை,அதன் தீமைகளை எத்தனையோ கவிஞர்கள் பலவிதங்களில் எடுத்துரைத்திருந்தாலும்,அந்த மோதல்கள் எத்தனை அநாவசியமானது என,இத்தனை அநாயசமாகச் சொன்ன எந்தக்கவிதையையும் நான் இதுவரை வாசித்ததே இல்லை.
இப்படி ஒவ்வnhரு கவிதையையும் குறித்து ஏராளமாய் சொல்லிக் கொண்டே போகவேண்டும் என்ற ஆசைதான் எனக்கு.ஆனால்,காலத்தின் அவசியம் கருதி சுருக்கமாகவும் முடிக்கவேண்டியதிருக்கிறது.
மிக எளிமையான சூத்திரங்களைப் போல அழகாய் தத்துவங்களைச் சொல்லிச் செல்லும் கவிதைகளும்,
விடையோடு சேர்ந்தே வரும் விடுகதைகளைப் போல சில கவிதைகளும், வார்த்தை ஜாலங்களினால் அழகு காட்டுகின்ற ஆனால் வாழ்க்கையை தரிசிக்க வைக்கும் சில கவிதைகளும்..என இத் தொகுப்பு முழுக்க உங்களுக்கு உற்சாகம் அளிக்கின்ற கவிதைகளாகவும் இருக்கின்ற வண்டறிந்த இரகசியம் கவிதைத் தொகுப்பு ஏராளமான மறுபதிவுகளையும் காணவேண்டும் என்ற எனது விருப்பத்தையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
இறுதியாக,..
இடது பக்கம் பயணிக்கத்தான் விருப்பம்
அந்தப்பக்கமும்
இரண்டாய் பிளந்து நிற்பதுகண்டுதான்
பயணத்தில் சற்றே குழப்பம்..!
.என்று இவர் எழுதியிருந்த ஒரு கவிதையைக் கண்டேன்.
நமது நாட்டைப் பொறுத்தவரை,பாதைகள் எப்படிப் பிரிந்தாலும் இடது பக்கமே செல்வது என்பது வாகனப் பயணத்திற்கு மட்டுமல்ல..வாழ்க்கைக்கும் நல்லதே..! என்று சொல்லி வாய்ப்பளித்த தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.!
---------- பொள்ளாச்சி அபி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக