மணலும் , மணல் சரிந்த இடங்களும் .....
” என்ன வேலண்ணே ....இங்கே படுத்துக் கிடக்கீக . அங்கே அண்ணாச்சி
உங்களைக் காலையில இருந்தே வலை போட்டுத் தேடிக்கிட்டு இருக்காக . போனையும் எடுக்க
மாட்றிகங்கன்னு சத்தம் போட்டுட்டு கிடக்காக . எப்படியாவது கண்டு பிடிச்சுக்
கூட்டிட்டு வாலேன்னு என்னை அனுப்பி வச்சாக. நானும் காலையில இருந்தே ஊரு முழுக்கச்
சுத்திட்டு எங்கேயும் காணாம எதுக்கும் பார்ப்போமின்னுதான் இங்கே வந்தேன் . நீங்க
என்னடான்னா செல்லி அம்மன் கோவில் ஆலமரத்தடியில இப்படி துண்டை விரிச்சு ஹாயாத்
தூங்கிட்டு இருக்கீக . சரி , கெளம்புங்க . அண்ணாச்சி கையோட கூட்டிட்டு வரச்
சொல்லியிருக்காக . “ சின்னத்துரை மூச்சு விடாமல் பேசி முடித்தான் .
வேலு எழுந்து
துண்டை உதறினான் .
“ நாலு நாளா
நாள் முழுக்க அலைஞ்ச களைப்புடா . ராத்திரி லேட்டாத்தான் தூங்கினேன் . காலையில
நேரமா எழுந்திரிச்சு நாலு இட்லியத் தின்னுட்டு கிளம்பினேன் . அசதியில கொஞ்ச நேரம்
படுக்கலாம்னு படுத்தேன் . ஆலமரத்து காத்து இதமா இருந்திச்சு . அப்படியே
கண்ணசந்திட்டேன் . நீ போ , நான் வந்திடுதேன் . “
“ நீங்க
கிளம்புங்க . நான் நிற்கிறேன் . அண்ணாச்சி உங்களைக் கையோட கூட்டீட்டு வரச்
சொல்லியிருக்காக . தனியாப் போனா ஏச்சு விழும் . அதோட நான் நடந்துதான்
வந்திருக்கேன் . உங்க வண்டியிலயே வந்திடறேன் . “
வேலு கிணற்றுப்
பக்கம் இருந்த தொட்டியில் இருந்து தண்ணீரைக் கையில் அள்ளி முகத்தைத் துடைத்துக்
கொண்டான் . துண்டால் ஈரம் போக துடைத்தான் . தள்ளி நிறுத்தியிருந்த பைக்கைக்
கிளப்பினான் . சின்னத்துரை பின்னால் ஏறிக் கொண்டதும் வண்டியை உதைத்துக்
கிளப்பினான் .
“ அண்ணாச்சி
ஏன்னே இப்படி உங்களைத் தேடுதாக ? அவரு இவ்வளவு கோவப்பட்டு நான் பார்த்ததில்லை .
நீங்க போனைக்கூட எடுக்கலைன்னுதான் ரொம்ப சத்தம் போடுதாக . “
வேலு எதுவும்
பேசாமல் வண்டியை மிதமான வேகத்தில் ஓட்டினான் . வெயில் நன்றாக உறைத்துக்
கொண்டிருந்தது .
*
வண்டியை
அண்ணாச்சி வீட்டின் முன் நிறுத்தியதும் சின்னத்துரை இறங்கி உள்ளே போனான் .
“ என்னல தனியா
வாற ... வேலு வரலியா ? “ உள்ளிருந்து வந்த அண்ணாச்சியின் குரலில் பதட்டம்
தெரிந்தது .
“ கண்டு
பிடிச்சுக் கையோட கூட்டிட்டுதான் வந்திருக்கேன் அண்ணாச்சி . “ துரையின் குரலில்
மகிழ்ச்சி தெரிந்தது .
வேலு வண்டியை
நிழலில் நிறுத்தி விட்டு உள்ளே போனான் .
“ எங்கேடே
போயிட்டே வேலு ? என்னாச்சு , இடம் கண்டு பிடிச்சியா இல்லியா ? “ அண்ணாச்சியின்
குரலில் பதட்டம் தணியவில்லை . “ போன் போட்டாலும் எடுக்கல . என்னடே ஆச்சு ? உடம்பு
கிடம்பு சரியில்லயா ? சரி , உட்காரு
முதல்ல . துரை , உள்ளே போய் மோரு இருந்தா வாங்கிட்டு வா .வேலு களைப்பா இருக்க
மாதிரி இருக்கு . “ துரை வீட்டிற்குள்
போனான் .
“ என்ன வேலு ,
ஏதாவது தோதான இடம் கிடைச்சுதா இல்லியா ? இன்னும் ஒரு வாரத்துக்குதான் லோடு
தேறும்னு தவசி சொன்னான் . அதுக்குள்ள இடம் பார்த்து மத்த ஏற்பாடுல்லாம்
பண்ணினாத்தான் தொடர்ந்து சரக்கு அனுப்ப முடியும் . “ அண்ணாச்சியின் குரலில்
பதட்டம் கொஞ்சம் தணிந்திருந்தது .
“ நானும் ஒரு
வாரமா ஒரு இடம் விடாம அலைஞ்சு தேடிட்டேன் அண்ணாச்சி . தொடர்ந்து அள்ளுற மாதிரி
தோதான இடம் எதுவும் கண்ணில படல அண்ணாச்சி . எல்லா இடத்திலயும் நாமளும் எதிர்
பார்ட்டியும் தோண்டி எடுத்த பள்ளம்தான் இருக்கு . மணல் கண்ணில படற எடத்தில ஒரு அடி
அல்லது ரெண்டு அடிதான் இருக்கு . “ வேலுவின் குரல் மெல்லியதாக ஒலித்தது .
“ என்னடே
இப்படிச் சொல்லறே . எங்கேயிருந்தாலும் மோப்பம் பிடிச்சுடற நீயே இப்படிச் சொன்னா
எப்படி . எங்கேயாவது தோதான இடம் இல்லாமயா போயிடும் ? “ அண்ணாச்சியின் குரலில்
மீண்டும் பதட்டம் .
“ ஏன் அண்ணாச்சி
, நான் என்னைக்காவது அரைகுறை வேலை பார்த்திருக்கேனா ? அந்தக் கோடியில இருந்து
இந்தக் கோடி வரைக்கும் தேடி அலைஞ்சுட்டேன் . தோதான இடம் ஒன்னும் கண்ணில படல . அதை
எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியாமத்தான் போனையும் எடுக்கல . இன்னும் ரெண்டு
மூனு இடம்தான் பாக்கியிருக்கு . அதையும் பார்த்துட்டுப் பேசிக்கலாம்னுதான்
இருந்தேன் . ஆனால் அந்த இடத்துக்கெல்லாம் வண்டி கொண்டு போக தோதுப் படாதுன்னுதான்
யோசிச்சுக்கிட்டு இருக்கேன் . “
“ அதெல்லாம்
பார்த்துக்கிடலாம் . நீ போய் தொடர்ந்து அள்ளுற அளவுக்கு மணல் இருக்கான்னு மட்டும்
பார்த்துட்டு வந்து சொல்லு . அது போதும் . எதிர் பார்ட்டிக்காரன் இடத்தில இன்னும்
ஒரு மாசம் சரக்கு எடுக்கலாம் போல இருக்குன்னு தவசி சொன்னான் . விட்டுட்டோம்னா நம்ம
பார்ட்டியை எல்லாம் அவன் வளைச்சுப் போட்டுருவான் . உனக்குத் தெரியாதது இல்ல .
இந்தத் தொழில்ல இடத்தை விட்டுட்டா திருப்பிப் பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு . அதோட
பத்து ஜேசிபி , முப்பது லாரிகளும் சும்மா நின்னா வட்டி இதுவரைக்கும்
சம்பாதிச்சதையெல்லாம் தின்னுடும் . எப்படியாவது இடத்தைக் கண்டு பிடி . வழியெல்லாம்
எப்படியாவது சரி பண்ணிக்கலாம் . “
துரை சொம்பு
நிறையக் கொண்டு வந்த மோரை வாங்கிக் குடித்தான் வேலு . ஜில்லென்ற மோர் உள்ளே
இறங்கியதும் உடம்பு குளிர்ந்தது போல இருந்தது .
“ சரி நீ
கிளம்பு . இந்தா செலவுக்கு வச்சுக்க . “ அண்ணாச்சி அருகில் இருந்த தோல் பையில்
இருந்து நூறு ரூபாய் கட்டில் இருந்து பாதியை அவனிடம் கொடுத்தார் . “
காத்துக்கிட்டே இருப்பேன் . இடம் பார்த்ததும் சொல்லு . நானும் வந்து பார்த்துட்டு
மத்த வேலையைப் பார்த்துடுவோம் . “
வேலு
தயக்கத்துடன் பணத்தை வாங்கி சட்டையின் உள் பைக்குள் வைத்துக் கொண்டு வெளியே
வந்தான் . வண்டியைக் கிளப்பியவன் போகும்போதே எந்தப் பக்கம் போவது என்று
யோசித்தவாறே சென்றான் . இன்னும் நாலைந்து இடங்கள்தான் பாக்கி .
*
நாலு நாளாக மணல்
உள்ள இடம் தேடி அலைந்தபோது பார்வையில் பட்ட ஆற்றின் நிலை அவன் மனதை உறுத்திக்
கொண்டே இருந்தது . மணல் இருந்த இடமெல்லாம் பாறைகள் கண்ணில் படும் அளவிற்கு
மணலற்றுப் போயிருந்தன . எல்லாம் அண்ணாச்சியும் , எதிர் பார்ட்டியும் சேர்ந்து
செய்த மணல் வியாபாரம்தான் காரணம் என்பது அவனுக்குத் தெரியும் . பேசாமல்
அண்ணாச்சியிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது அந்தத் தொழிலில் இருந்து வெளியேறி விடலாமா
என்றுதான் நாலு நாட்களாகவே யோசித்துக் கொண்டிருக்கிறான் . மணல் அள்ளும் அந்தத்
தொழில் மூலம் ஒன்றுமில்லாமல் இருந்த அண்ணாச்சியும் , எதிர் பார்ட்டியும் இன்று
கோடீஸ்வரர்களாகி விட்டது ஊரறிந்த விஷயம்தான் . அவர்கள் இருவர் மட்டுமில்லை ,
அவர்களிடம் வேலை பார்க்கும் தன்னைப் போன்றவர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தற்கும்
காரணம் மணல்தான் என்ற உண்மை அவனை முடிவெடுக்க விடாமல் வைத்திருந்தது . இதை விட்டு
விட்டு வேறு வேலைக்குப் போய் அதன் மூலம் இவ்வளவு சம்பாத்தியம் கிடைக்குமா என்ற
அச்சமும் மனதில் இருக்கத்தான் செய்தது .
வண்டியோடு
சேர்ந்து மனதிற்குள் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன . அவனை அறியாமலே வண்டி சொல்லூர்
விலக்கிற்கு வந்து விட்டது . இன்னும் தேடாத இடங்கள் அந்தப் பகுதியின் உள்ளேதான்
இருந்தன . இஸ்மாயில் கடை எதிரில் நிறுத்தி இறங்கினான் . இஸ்மாயிலும் , கடையில்
இருந்த சிலரும் அவனைப் பார்த்ததுமே சிரிப்போடு விசாரித்தார்கள் . அவனது தொழில்
காரணமாக அவனைத் தெரியாதவர்கள் சிலர்தான் இருப்பார்கள் .
அவன் கேட்காமலே
இஸ்மாயில் சூடான டீயை நீட்டினான் . டீயில் இஞ்சி
சுவை தூக்கலாக இருந்ததை ரசித்துக் குடித்தவாறே அன்று பார்க்க வேண்டிய இடங்களைக்
குறித்து யோசித்தான் வேலு .
உள்ளே தள்ளி
உள்ள இடங்கள் . போனால் திரும்ப சாயங்காலம் ஆகிவிடும் . சாப்பாட்டிற்கு திரும்பி
வந்தால் நேரம் வீணாகலாம் .
“ இஸ்மாயில்
...பிரியாணி ரெடியாயிட்டுதா . இருந்தால் ஒரு பொட்டலம் கட்டு . சம்பல் கொஞ்சம்
கூடுதலா வச்சுக் கட்டு . “
இஸ்மாயில்
கொடுத்த பொட்டலத்தை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி விலக்கில் இருந்து ஆற்றுக்குப்
போகும் பாதையில் செலுத்தினான் . உள்ளே ஊர் எதுவும் இல்லாததால் மண் தடம்தான் .
சமீபத்திய மழையால் குண்டும் குழியுமாகக் கிடந்த பாதை இரண்டு மைல் தாண்டி
ஆற்றங்கரையில் இருந்த சுடுகாட்டை அடைந்தது . சுற்று வட்டாரம் முழுவதற்கும் அதுதான்
சுடுகாடு .
வண்டியை
நிறுத்தி இறங்கியபோது அந்த ஜீப் கண்ணில் பட்ட்து . குடிநீர் வாரிய ஜீப் . கொஞ்சம்
தள்ளி நின்று புகைத்துக் கொண்டிருந்த ஓட்டுநர் வேலுவிற்கு பழக்கமானவர்தான் .
“ என்ன சார் ...
இந்தப் பக்கம் ? “
“ ஏ ஈ உள்ளே
புரோபிங் போட்டு பார்த்துக்கிட்டிருக்காரு . நீங்க என்ன இந்தப் பக்கம் ? “
ஓட்டுநர் வேலுவிடம் இருந்து பதிலை எதிர்பாராமல் பதில் சொன்னார் .
“ எந்தப் பக்கம்
இருக்காரு சார் ? “ பொறியாளரும் வேலுவிற்கு தெரிந்தவர்தான் . புரோபிங் போடுகிறார்
என்றால் மணல் இருக்கின்றது என்பது வேலுவிற்குத் தெரியும் .
“ இந்தப்
பக்கம்தான் . ஒரு அரை மைலு உள்ளே . “ ஓட்டுநர் கை காட்டிய திசையில் நடந்தான் வேலு
. ஆற்றில் ஒரு ஓரமாக வழக்கத்தைவிட அதிகமாக தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது . மழைதான்
காரணம் . பரவலாக மணல் கண்ணில்பட்டது .
ஓட்டுநர்
சொன்னது போலவே அரை மைலில் குடிநீர் வாரிய பொறியாளர் நின்று கொண்டிருந்தார் .
நாலைந்து ஆட்கள் இரும்புக் கம்பிகளை மணலில் சொருகிச் சொல்லிக் கொண்டிருந்த அளவுகளை
கையில் இருந்த நோட்டில் குறித்துக் கொண்டிருந்தார் .
“ வணக்கம் சார்
. என்ன ஏதாவது புதுத் திட்டம் வருதா ? “
வேலுவின் குரல்
கேட்ட்தும் திரும்பினார் .
“ வாங்க....
ஆமாம் ஒரு நானூறு ஊர்களுக்கு ஒரு திட்டம் போடச் சொல்லியிருக்காங்க . எப்படியும்
இருபது கிணறாவது போடணும் . இங்கே மட்டும்தான் கொஞ்சம் மணல் இருக்கு . மத்த இடம்
பூராவுந்தான் நீங்க.. “ பொறியாளர் பாதியில் நிறுத்திக் கொண்டார் . வேலுவையும் ,
அண்ணாச்சியையும் நன்கு தெரிந்தவர் .
“ இங்கே மணல்
நிறைய இருக்கோ ? “ வேலுவின் கேள்வி அவருக்குப் புரிந்து விட்டது .
“ ஆமாங்க .
கிணறு போடற அளவிற்கு இங்கே மட்டும்தான் இருக்கு . சுமாரா பதினைந்து லட்சம்
பேருக்கான திட்டம் . கிணறு போட இடம் கிடைக்கலைன்னா திட்டம் ரத்தாயிடும் . தயவு
செஞ்சு இந்த இடத்தில மணல் எடுக்க திட்டம் போட்ராதீங்க . “
“ நானும் மணல்
தேடிதான் அலையறேன் . ஆனால் நீங்க இப்படிச் சொல்றப்ப எப்படி பண்ணுவோம் .
பயப்படாதீங்க . “ வேலுவின் மனதில் இருந்துதான் வந்தன வார்த்தைகள் .
“ இங்கேன்னு இல்லை
, இந்தப் பக்கத்திலேயும் கை வச்சிடாதீங்க . குடிநீர் கிணறுக்கு ஐநூறு மீட்டர்
சுத்துல மணல் எடுக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு . ஆனால் எங்கே விடறாங்க .
ஒன்னுமில்லை , உங்க ஏரியாவுக்கு குடிநீர் வழங்க நாலு வருஷம் முன்னாடி போட்ட
திட்ட்த்தில கிணறு வேலைகளை நான்தான் பார்த்தேன் . கிணறு போட்டப்ப பதினைந்து அடி
ஆழம் மணல் இருந்துச்சு . ஒவ்வொரு கிணறும் நிமிஷத்திற்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர்
கொடுத்துச்சு . இப்ப பாருங்க சுத்திலும் மணலை எடுத்திட்டதால வெறும் அஞ்சடிதான்
மணல் இருக்கு . நீர் சுரப்பும் பாதியாயிடுச்சு . ‘ பொறியாளரின் குரலில் வருத்தம்
தொனித்தது .
“ சார் நீங்க
இவ்வளவு சொன்னப்புறம் இந்தப் பக்கம் எப்படி வருவோம் . சரி , இந்த திட்டம்
பாதிக்காதவகையில வேறு இடம் இருந்தாச் சொல்லுங்களேன் . அண்ணாச்சி துளைச்சு
எடுக்கிறாரு . ”
சற்று நேரம் யோசித்தார் பொறியாளர் . “ சரி , ஒன்னு பண்ணுங்க . இன்னும் மேல இரண்டு கிலோ மீட்டர் போனிங்கன்னா ஆயிரம் அடி தூரத்திற்கு ஏழெட்டு அடி மணல் பரவலா இருக்கு . அதில எடுத்திங்கன்னா இந்தத் திட்டத்திற்குப் பாதிப்பு இருக்காது . தயவு செய்து இந்தப் பக்கம் வரவேண்டாம் “
“ வரமாட்டோம் சார் . ரொம்ப நன்றி . நான் போய் அந்த இடத்தையே பார்க்கிறேன் . வரட்டுமா ? “ வேலு அவர் சொன்னதுபோல ஆற்றின் மேல்புறம் நோக்கி நடந்தான் . அந்த இடத்திற்கு வண்டியில் போக முடியாது . மணல் சூடாகிப் போயிருந்ததால் செருப்புகளையும் மீறி சூடு தாக்கியது .
அவர் சொன்ன இடத்திற்கு வருவதற்குள் வேலு சோர்ந்து போனான் . ஆனால் பரந்து கிடந்த மணல் கொடுத்த திருப்தியில் சோர்வு காணாமல் போனது . இடுப்பில் சொருகியிருந்த அருவாளை எடுத்து நாலைந்து க்ருவேலங்குச்சிகளை வெட்டி முனையைக் கூராக்கினான் . பரவலாக குச்சியைச் சொருகிப் பார்த்தான் . பொறியாளர் சொன்னதுபோல ஏழெட்டு அடிகளுக்கு மணல்தான் . இது போதும் இப்போதைக்கு . ஆறு மாதங்கள் தாக்குப் பிடிக்கும் . ஆயிரம் அடி தூரத்திலும் குச்சி சொருகிப் பார்த்து முடித்தபோது உச்சியாகி விட்டது . கைகளைக் கழுவி விட்டு நிழல் பார்த்து உட்கார்ந்து பொட்டலத்தைப் பிரித்து வைத்து பிரியாணியைச் சாப்பிட்டதும் தெம்பு மீண்டு விட்ட்து . அந்த இடத்திலேயே துண்டை விரித்து ஒரு குட்டித் தூக்கம் போட்டான் .
தூக்கம் கலைந்து எழுந்தபோது வெக்கை தணிந்திருந்தது . இனி அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும் . ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள ஊர்களைப் பார்த்து வண்டிகளைக் கொண்டுவர வழி தோது பண்ண வேண்டும் . அதுதான் முக்கியம் . இரு பக்கம் உள்ள பகுதிகளைப் பார்வையிட்டு , விசாரிப்புகளை முடித்தபோது மாலை ஆகிவிட்டது .
கரை ஓரமாகவே நடந்து வண்டி நிறுத்தியிருந்த இடம் அடைந்தபோது ஜீப்பைக் காணவில்லை . வண்டியில் ஏறிக் கிளம்பி மீண்டும் இஸ்மாயில் கடையில் நிறுத்தினான் . டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சாமி வந்தான் . அண்ணாச்சிக்கு வேலு எப்படியோ அதே போல எதிர் பார்ட்டிக்கு சாமி . அண்ணாச்சியும் , எதிர் பார்ட்டியும் அந்த தொழிலில் மட்டும்தான் எதிர் எதிர் . மற்ற விஷயங்களில் அவர்களுக்குள் எந்தப் பகையும் கிடையாது . ஒன்னுக்குள் ஒன்னுதான் . அதேதான் வேலுவிற்கும் சாமிக்கும் ஆன உறவும் .
“ என்ன சாமி ...இந்தப் பக்கம் ? “
சாமியும் டீயை வாங்கிக் கொண்டதும் இருவரும் சற்று ஓரமாக ஒதுங்கினார்கள் .
“ உங்கிட்ட சொல்றதுக்கென்னண்ணே . நம்ம ஏரியாவில இன்னும் பத்து நாளைக்குதான் மணல் தேறும் . வேற இடம் பாரு , பாருன்னு நச்சரிக்காரு நம்மாளு . நானும் நாயா பேயா அலையறேன் . எங்கே பார்த்தாலும் நாம தோண்டிப் போட்ட பள்ளம்தான் கண்ணில படுது . மணலுக்கு எங்கே போறதுன்னு புரியாமதான் அலைஞ்சுட்டிருக்கேன் . “ சாமியின் குரலிலும் சலிப்பு தெரிந்தது .
“ நம்ம பாடும் அதுதான் . “ வேலு அடக்கியே வாசித்தான் . வாயை விட்டு இடத்தை விட்டு விடக்கூடாது என்ற உள்ளுணர்வுடன் .
*
அண்ணாச்சியின் வீட்டை அடைந்தபோது துரை வெளியில் நின்று கொண்டிருந்தான் .
“ அண்ணாச்சி
உங்களுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்துட்டு இப்பதான் ....” துரை கை சைகை
காட்டியதைப் புரிந்து கொண்டான் வேலு .
அண்ணாச்சி அடிக்கடி தண்ணி அடிக்க மாட்டார் . எப்போதாவதுதான் , அதுவும் வீட்டில் தனியாகத்தான் .
“ அப்ப நான் போயிட்டு காலையில வாறேன் . “
“ அய்யய்யோ ... நீங்க எப்ப வந்தாலும் உள்ளே வரச் சொன்னார் . “ துரை பதறினான் .
வேலு உள்ளே போனபோது அண்ணாச்சி சோடா பாட்டிலைத் திறந்து கொண்டிருந்தார் . வேலுவைப் பார்த்ததும் சோடா பாட்டிலை எதிரில் பொன்னிற திரவம் நிரம்பிய கண்ணாடி தம்ளர் அருகில் வைத்தார் .
“ என்னடே ஆச்சு வேலு ... “
“ இடம் பார்த்துட்டேன் அண்ணாச்சி . ஒரு ஆயிரம் அடி தூரத்துக்கு ஏழெட்டு அடி மணல் இருக்கு . ஆறு மாசம் வரும் . “
அண்ணாச்சியின் முகத்தில் தெளிவு தெரிந்தது .
“ அதானே , வேலுன்னா சும்மாவா ? சரி , விவரமாச் சொல்லு . “
வேலு இடம் குறித்த விபரங்களைச் சொன்னான் . மிக கவனமாக அந்தப் பொறியாளரைப் பார்த்ததைத் தவிர்த்துவிட்டு .
“ ஆனால் ஒரே ஒரு
சிக்கல்தான் அண்ணாச்சி . ரெண்டு பக்கமும் வயல்தான் இருக்கு . வண்டி உள்ளே போறதுதான் சிரமம் . ”
“ அதெல்லாம் வழிக்கு கொண்டு வந்திடலாம் . யாரு வயலுன்னு விசாரிச்சியா ? “
“ விசாரிச்சிட்டேன் அண்ணாச்சி . எல்லாமே எதிர் பார்ட்டிக்கு வேண்டிய ஆளுங்க . அதான் சிக்கல் . “
அண்ணாச்சி சிறிது நேரம் பேசவில்லை .
“ அப்புறம் வழியில
அந்த சாமிப்பயலைப் பார்த்தேன் . அவங்களுக்கும் இன்னும் பத்து
நாளைக்குதான் தேறுமாம் . அவங்களும் வேற இடம் தேடித்தான்
அலையறானுக . ”
“ அவன்கிட்ட இதைப் பத்திச் சொல்லிட்டியா ... “ அண்ணாச்சி பதறினார் .
“ சொல்லுவேனா நான் . எனக்கு ஒரு யோசனை தோணுது . பேசாம அந்த பார்ட்டிக்கிட்ட நேராப் பேசிடுங்க அண்ணாச்சி . ஆளுக்குப் பாதியா பிரிச்சுக்கலாம் . அவரை வச்சுப் பேசி வழியும் தோது பண்ணிடலாம் . “
“ அதுவும்
சரியாத்தான்படுது . ஒன்னுமில்லாமப் போறதுக்கு இது
பரவாயில்லைன்னு அவனும் ஒத்துக்குவான் . இந்தா இப்பவே
பேசிடறேன் . ” . அண்ணாச்சி அருகில் இருந்த போனை எடுத்து எண்களை அனுப்பினார் . வேலு
சற்று தள்ளி நின்று கொண்டான் .
பத்து
நிமிஷங்கள் பேசிவிட்டு போனை கீழே வைத்தார் .
“ சரின்னுட்டான்
வேலு . நாளைக்கு காலையிலயே போய் இடத்தைப் பார்த்துட்டு அடுத்த வேலைகளில்
இறங்கிடலாம்னு சொல்லிட்டான் . “
“ அப்ப கொஞ்சம்
விடியலிலேயே கிளம்பிடுவோம் . வெயில் ஏறிட்டுதுன்னா ஆத்தில நடக்கறது சிரமம் .. ”
“ அதெல்லாம் சொல்லிட்டேன் . சரி , நீ போயிட்டு காலையிலயே வந்திடு . அப்படியே வெளியே வண்டியில ஸ்டீபன் இருந்தா அவனையும் இப்ப போயிட்டு காலையில சீக்கிரமா வரச் சொல்லிடு . “ அண்ணாச்சி மீண்டும் சோடா பாட்டிலைத் திறந்தார் . சற்று உற்சாகத்துடன் இருப்பதாக வேலுவிற்குத் தோன்றியது .
“ சரி அண்ணாச்சி . “ சொல்லிவிட்டு வேலு வெளியே வந்தபோது இருட்டி விட்டிருந்தது . வண்டியில் உட்கார்ந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்த ஸ்டீபனிடம்
விபரம் சொல்லிவிட்டு தன் வண்டியில் ஏறினான் . ” சரி வாரேன் துரை
. “
போகும்
வழியிலேயே லட்சுமிக்கும் , குழந்தைகளுக்கும் சேர்த்து டிபன் வாங்கிக் கொண்டான் .
சாப்பிட்டவுடனேயே தூக்கம் வர அலாரம் வைத்துவிட்டு அசந்து தூங்கிப் போனான் .
காலையில் எழுந்து லட்சுமியை எழுப்பி கதவைப் பூட்டிக் கொள்ளச் சொல்லிவிட்டு இருட்டிலேயே கிளம்பினான் . அண்ணாச்சி வீட்டை அடைந்தபோதும் சரியாக விடியவில்லை . ஸ்டீபன் வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்தான் . வேலுவின் வண்டி சப்தம் கேட்டு அண்ணாச்சியே வெளியே வந்துவிட்டார் . துரை உள்ளே போய் எடுத்துவந்த காபியைக் குடித்து விட்டு காரில் முன் பக்கம் ஏறிக்கொண்டான் வேலு . அண்ணாச்சி பின்னால் ஏறிக் கொண்டதும் ஸ்டீபன் காரைக் கிளப்பினான் .
விலக்கிற்கு வந்தபோது இலேசாக வெளிச்சம் வந்திருந்தது . இஸ்மாயில் கடையில் இருந்து சற்று தள்ளி நின்ற கார் அருகில் ஸ்டீபன் வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினான் .
நின்று கொண்டிருந்த காரில் உட்கார்ந்திருந்த எதிர்பார்ட்டி கண்ணாடியை இறக்கி விட்டார் . “ அப்ப போலாமா ? “
வேலு சொன்ன பாதையில் ஸ்டீபன் வண்டியை திருப்பினான் . அந்த காரும் பின் தொடர்ந்து வந்தது . சுடுகாட்டருகில் வந்து நின்ற போது நன்றாக வெளிச்சம் வந்திருந்தது . வேலுதான் முதலில் இறங்கினான் .
“ இனிமே நடந்துதான் போகணும் அண்ணாச்சி . “
அண்ணாச்சி இறங்கினார் . அடுத்த வண்டியில் இருந்து சாமிதான் முதலில் இறங்கினான் . தொடர்ந்து எதிர் பார்ட்டி இறங்கினார் . அந்தக் காலை நேரத்திலும் மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி சட்டையுடன் பொதுக் கூட்டத்திற்குப் போவது போல இருந்தார் .
“ என்னடே வேலு , நல்லாயிருக்கியா ? பார்க்கவே முடியல . “
“ இருக்கேன் ரெண்டு அண்ணாச்சி புண்ணியத்திலும் . நீங்க நல்லாயிருக்கீகளா ? “
“ உன்னை மாதிரி ஆளுங்கல்லாம் இருக்கும்போது நமக்கு என்ன குறை வரப் போகுது . “ அவர் பேச்சு மேடையில் பேசுவதுபோலவே இருந்தது .
“ அப்ப ஸ்டீபன் , நீங்க ரெண்டு பேரும் வண்டியிலயே இருங்க . யாராவது கேட்டா ஒன்னும் சொல்ல வேண்டாம் . “
நான்கு பேரும் மேல் பக்கம் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள் . வேலுதான் வழி காட்டினான் . சாமி அவன் கூடவே வந்தான் .தூரம் போகப் போக பின்னால் வந்தவர்கள் இருவருக்கும் சோர்வு ஏற்பட்டதை வேலுவால் உணர முடிந்தது . துணிப் பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை ஆளுக்கொன்றாக கொடுத்தான் .
இடத்தை அடைந்தபோது அண்ணாச்சிக்கும் அவருக்கும் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது . “ தூரம்தாண்டே வேலு . ஆனாலும் பொன்னு விளையற இடமாச்சே , நடந்துதானே ஆகணும் . “
வேலு நேற்று கரையில் ஒளித்து வைத்திருந்த சீவிய குச்சிகளை எடுத்தான் . சாமியும் அவனும் சேர்ந்து ஆற்றின் பல இடங்களிலும் குத்திக் காண்பித்தார்கள் . அன்ணாச்சி முகத்திலும் அவர் முகத்திலும் திருப்தி தெரிந்தது .
“ இடம் நல்லாத்தான் இருக்கு . ஆறு மாசம் தாங்கும் . என்ன சொல்லறே ? “ அண்ணாச்சி சொன்னதைக் கேட்ட அவர் தலையாட்டினார் .
“ ஆனால் , வண்டி வர தோது இல்லாம ரெண்டு பக்கமும் வயலுங்க . அதுவும் நல்லா விளைச்சல் உள்ள இடம் . தடம் போடறதுதான் சிரமம் . உன் கையிலதான் இருக்கு . வேலு விசாரிச்சிட்டான் . எல்லாமே உனக்கு வேண்டிய பார்ட்டிங்கதான் . எப்படியாவது பேசி இடம் பிடிச்சிட்டேன்னா இன்னும் ஆறு மாசம் கவலை இல்லை . “ அண்ணாச்சி நைச்சியமாகப் பேசினார் .
“ அதை நான் பார்த்துக்கிடறேன் . கவலையை விடுங்க . ஏரியாவை பாதிப் பாதியா பிரிச்சிக்கிடுவோம் . “
“ இடம் திருப்திதானே ரெண்டு பேருக்கும் . சரி , கிளம்புவோம் . இன்னும் வெயில் ஏறினா ஆத்தில நடக்கறது சிரமம் தண்ணியும் சூடாயிடும் . “ வேலு கிளம்பலாம் என்பதுபோல கையை முன்னால் நீட்டினான் . இருவரும் நடக்க ஆரம்பித்தனர் .
“ அப்படியே ஓரமா தண்ணி ஓடற தடத்திலயே நடங்க . மணல் ரொம்ப சூடாயிட்டுது . செருப்புல்லாம் சூடு தாங்காது . “
இருவரும் வேலு காட்டிய தடத்தில் வேட்டியை சற்று உயர்த்திப் பிடித்தவாறு பேசிக் கொண்டே நடந்தனர் . அவர்கள் பேசிக் கொள்வது காதில் விழாத தூரத்தில் வேலுவும் , சாமியும் சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தனர் . தண்ணீரும் இலேசாக சூடாகத்தான் இருந்தது .
*
கிளம்பி கால் மணி நேரம் ஆகியிருக்கும் .
“ வேலு.... ஏய் ... வேலு..... “ மனதைப் பிளப்பதுபோல அண்ணாச்சியின் குரல் ஒலித்தது . கூடவே எதிர் பார்ட்டியின் குரலும் அதே தொனியில் .
முப்பதடி இடைவெளியில் பின் தொடர்ந்த வேலுவும் , சாமியும் அந்தக் குரல்லாலும் , முன்னால் கண்களில் பட்ட காட்சியாலும் அப்படியே உறைந்து போய் விட்டனர் .
சற்று முன் நிமிர்ந்து நடந்து கொண்டிருந்த அந்த இருவருடைய பாதி உடம்புதான் கண்ணில் பட்டது . இடுப்புக்குக் கீழ் மணலில் புதைந்திருந்தது போலத் தோன்றியது . சில விநாடிகளில் தலையும் , உயர்த்திய கைகளும்தான் பார்வைக்குத் தெரிந்தது .
“ வேலூ .... அப்படியே உள்ளே இழுக்குதுடா ... ஏதாவது கயிறு கட்டை இருந்தா எடுங்கடா .... ஏய்ய் ... வேலூ ...”
தலை மட்டும் வெளியில் தெரிந்த நிலையில் இருவரின் கண்களிலும் மரணபயம் . கைகள் உதறிக் கொண்டிருந்தன .
வேலுவும் , சாமியும் ஓடிப் போய் அவர்களை நெருங்குவதற்குள் அந்த இடத்தில் சற்று முன்னால் இருவர் இருந்த அடையாளமே இல்லை . தலைகளும் , கைகளும் கூட மூழ்கி விட்ட நிலையில் அந்த இடத்தில் நீரில் இலேசான அசைவுகள் மட்டும்தான் கண்ணில் பட்டன .
கண் முன் நடந்ததைப் பார்த்த சாமி கண்கள் வெளியே பிதுங்கி உறைந்து போயிருந்தான் . அவன் உடல் உதறிக் கொண்டிருந்தது .
“ புதைகுழி இருந்திருக்கும் போல இருக்கு . இப்ப என்னடா பண்றது ? “ வேலுவின் குரலிலும் பதட்டம் .
சில விநாடிகளில் நீரில் காணப்பட்ட அசைவுகளும் அடங்கிவிட , ஆற்று நீர் மீண்டும் அதன்போக்கில் ஓடிக் கொண்டிருந்தது அந்த இடத்தில்.
செல்போனை எடுத்து ஸ்டீபனின் எண்களை அழுத்தியபோது வேலுவிற்கு ஆறும் , அதில் ஓடும் நீரும் , பரந்து கிடந்த மணலும் ஏதோ சொல்வது போலத் தோன்றியது .
குரலில் பதட்டத்துடன் விஷயத்தை சொல்லி முடித்த சில நிமிடங்களில் ஸ்டீபனும் , இன்னொருவனும் தூரத்தில் ஓடி வருவது வேலுவின் கண்களுக்குத் தெரிந்தது . ஆனால் மனதில் நேற்று அதே இடத்தில் மாட்டிக் கொண்டு காணாமல் போன அந்த மாட்டின் கடைசி நேர ஓலமும் , உதறல்களும் அவனை அறியாமலே வந்து போயின .
*************************************************************
[ புதுப்புனல் மார்ச் 2016 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக