” மகாத்மா காந்தி “ இருந்தாலும் ஆயிரம் பொன் ; இறந்தாலும் ஆயிரம் பொன் “
படத்தில் உள்ளது 23 , செப்டம்பர்
1926 அன்று மகாத்மா காந்தியால் எழுதப்பட்ட அவரது இறுதி உயில் . சபர்மதி சத்யாகிரக
ஆசிரமத்தில் வைத்து எழுதப்பட்ட இந்த உயில் அவரது தாய்மொழியான குஜராத்தி மொழியில்
எழுதப்பட்டு ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . அவர் ஏற்கனவே 1921 ல்
எழுதிய இன்னொரு உயிலை இரத்து செய்து இது எழுதப்பட்டுள்ளது . இதில் சாட்சியாக கையெழுத்திட்டவர்கள்
இருவர் , 1 ] கிஷோர்லால் கஹன்ஷ்யாம்லால் மஷ்ருவாலா 2 ] சோட்டேலால் ஜெயின் .
” நான் எழுதிய அனைத்து புத்தகங்கள் மற்றும்
என்னால் எழுதப்பட்ட மற்ற படைப்புகளுக்கும் , இனி என்னால் எழுதப்பட உள்ளவைகளுக்கும்
மேல்கண்ட ஐவரையே உரிமையாளர்களாக நியமிக்கிறேன் . அவற்றின் காப்புரிமையையும்
அவர்களுக்கே அளிக்கிறேன் . எனது
மரணத்திற்குப் பிறகு அவற்றாலும் மற்றும் எனக்குச் சொந்தமான பொருள்களாலும் வரும் வருமானம்
முழுவதும் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு அவை சத்யாகிரக ஆசிரமத்தின் வளர்ச்சிக்காகப்
பயன்படுத்தப்பட வேண்டும் . நான் உயிருடன் இருக்கும்போதே இந்த ஐவரில் யாரேனும் விலகிக்
கொண்டாலோ அல்லது இறந்து விட்டாலோ மீதி இருப்போருக்கு இந்த உயிலின்படி நடந்து கொள்ள
உரிமை உள்ளது . அவர்கள் விரும்பினால் புதிய பொறுப்பாளர்களையும் நியமித்துக்
கொள்ளலாம் . இதில் மாறுதல் செய்ய எனக்கும் உரிமை உள்ளது . இந்த உயில் எனது நல்ல
மனநிலையிலும் முழுப் புரிதலோடும் எழுதப்பட்டது . “ என்று எழுதப்பட்டு காந்தியால்
கையெழுத்திடப் பட்டுள்ளது .
இந்தப் பிரதி காந்தியின் குடும்பம் மற்றும் அவருக்கு
வேண்டியவர்களால் பலமுறை வாசிக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டு , திருத்தங்கள்
காந்தியின் கையால் செய்யப்பட்டு சாட்சிகளாலும் கையெழுத்திடப்பட்டுள்ளது .
இந்த ஆவணம் 2013 , நவம்பர் 6 அன்று ஷ்ராப்ஷயரில் உள்ள முல்லக்
ஏல நிறுவனத்தில் நடந்த “ வரலாற்று முக்கியமுள்ள ஆவணங்கள் மற்றும் பொருட்களுக்கான “
சிறப்பு ஏலத்தில் 20000 பவுண்டுகளுக்கு [ அன்றைய மதிப்பில் இருபது இலட்ச ரூபாய் ]
ஏலத்தில் வாங்கப்பட்டது . வாங்கியவர் பெயரை நிறுவனம் வெளியிடவில்லை .
அதே ஏலத்தில் விற்பனையான
இன்னொரு முக்கியமான பொருள் காந்தி பயன்படுத்திய “ சர்க்கா “ எனப்படும் நூல் நூற்கும்
சக்கரம் . அது ” வெள்ளையனே வெளியேறு ” இயக்கப் போராட்டத்தின் போது எரவாடா சிறையில்
அவர் பயன் படுத்தியது . இந்திய தேக்கு மரத்தால் செய்யப்பட்ட அதைப் பின்னர் காந்தி
1935 ல் ரெவரண்ட் ஃப்ளாயிட் ஏ பஃப்பர் என்ற அமேரிக்கருக்கு அன்பளிப்பாக வழங்கி
விட்டார் . பின்னர் அது பல கைகள் மாறி அப்போதைய உரிமையாளர் கைக்கு வந்ததாக ஏல
நிறுவனக் குறிப்பு சொல்கிறது .
அந்த நூல் நூற்கும்
சக்கரம் காந்தியின் விருப்பமான பொருட்களில் ஒன்று . அது குறித்து அவர் ஒரு தடவை கூறியது
– “ எனது கனவுகளில் , எனது தூக்கத்தில் , நான் சாப்பிடும் போது கூட நான் அந்த
சக்கரம் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பேன் . அதுதான் என்னுடைய வாள் .
என்னைப் பொறுத்தவரை அது இந்திய சுதந்திரத்தின் குறியீடு . “
அந்த ஏலத்தில் அது
வாங்கப்பட்ட தொகை – 110 , 000 பவுண்டுகள் . [ 1.10 கோடி ரூபாய் ] அன்றைய ஏலத்தில்
மட்டும் காந்தியோடு தொடர்பு உள்ள அறுபதுக்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டதாம்
.
காந்தி “ மதிப்பு ” உள்ளவர்தான் எப்போதும் .
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக