சனி, 18 மார்ச், 2023

சுமேரியர்களும் தமிழும் … [ பகுதி 2 ]

 

சுமேரியர்களும் தமிழும் … [ பகுதி 2 ]

 

மதுரை தமிழர் வாழ்வியல் : ஜிக்குரட் முதல் மீனாக்ஷி அம்மன் கோயில் வரைதமிழர் நாகரீகம் சிகரம் தொட்டு .

 


கட்டுரை ஆக்கம் -  புருஷோத்தமன் பெ - ( பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் , ஓய்வு பெற்றவர் ), ஆராய்ச்சி மாணவர் , நேஷனல் டெக்னிக்கல் டீச்சர்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடுயூட் , தரமணி , சென்னை . மற்றும்

 

முன்னுரை :



    மதுரையின் சிறப்பு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததும் , வான் அளவு உயர்ந்து நிற்கும் மீனாட்சி அம்மன் கோயிலும் ஆகும் . இது போன்ற சிறப்பு சுமேரியாவில் வாழ்ந்த மக்களுக்கும் இருந்ததாகத் தெரிகிறது . லோகநாதன் ( 1 ) தமிழர் கலாச்சாரத்தை பற்றிக் கூறும் போது அது கோயில் ஆன்மீகத்தைத் தொடர்பு கொண்டே இருந்தது என்பார் . அத்துடன் சுமேரியரின் மொழி தமிழரின் முதலாம் சங்கத் தமிழாக இருக்கக் கூடும் எனவும் , இந்தி மொழிகள் அனைத்திற்கும் மூலமான ஒரு தாய்  மொழியாகவும் இருக்கக்கூடும் என பல ஆதாரங்களை வைத்துள்ளார் .

    முதல் தமிழ்ச் சங்கம் கி . மு . 9600 முதல் கி . மு . 5200 ஆண்டு வரை அமைந்ததாகக் கூறுவர் . சுமேரியர்  ஆரம்ப காலம் கி . மு . 5000 முதல் கி . மு . 1600 வரை என்பர் ( விக்கி தகவல் ) அத்துடன் அறிஞர் பலர் ( 2 , 3 ) சுமேரியர் திராவிடர் இனமே என்றும் , அவர்கள் மெசபொட்டோமியாவில் கிழக்கு பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து குடியேறியவர் என்பர் . ஆனால் பின்பு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து , அவர்தம் மொழி அழிந்து பட்டதாகவும் , அவர்கள் எங்கு இடம் பெயர்ந்து சென்றனர் என உறுதியாகக் கூற இயலாது என அயல் நாட்டு அறிஞர்கள் கூறுவர் . சுமேரியர் திராவிடர் மொழி பேசியவர் எனவும் , அவர் கொடி கட்டி வாழ்ந்த காலம் முதலாம் சங்க காலத்திற்கு அருகாமையில் கி . மு . 5000 ஆண்டு ஆக இருந்ததும் கவனிக்கத் தக்கது . அது உண்மை எனின் அவர் விட்டுச் சென்ற களிமண் தட்டுகளில் கீறிப் பொறித்த எழுத்துக்கள் ( cuneiform tablets ) ஆவணங்கள் நமக்கு அரிய தகவல்கள் அளிப்பவையாக இருக்கக்கூடும் . அத்துடன் பிற்காலத்து மதுரையில் தமிழ் வளர்த்த மக்களுக்கும் , சுமேரியாவிலிருந்து இடம் பெயர்ந்தவருக்கும் தொடர்பு இருக்கக்கூடும் . லோகநாதன் போன்ற வெகு சிலரே ( 1 , 2 & 3 ) அக்களிமண் தட்டு ஆவணங்களை ஆராய்ந்த தமிழ் தெரிந்த அறிஞர் . இவ்வாராய்ச்சி மேலும் தொடரவும் மதுரை வாழ் மக்களுக்கும் சுமேரியாவில் வாழ்ந்த மக்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என அறியவும் வேண்டிள்ளது .



    இக்கட்டுரை , சுமேரிய மொழியில் களிமண் தட்டில் கீறி எழுதியிருந்த ஜிக்குரட் ( ziggurat ) கோயில் பற்றிய கவிதை தொகுப்பிலிருந்து வெறும் ஏழு வரிகளை ஒரு முன்னோட்டமாக ஒரு தேடலாக அணுகுகிறது . தமிழரின் வாழ்வியல் , மொழியியல் , ஆன்மீக இயல் தொடர்பான ஒரு அறிமுகமாக அமைகிறது .

 

ஜிக்குரட் :



    சுமேரியாவின் நகரமானஊர் என்ற இடத்தில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் குன்று போல் உயர்த்தி அமைக்கப்பட்ட திண்மையான அடித்தளம் கொண்ட மண்ணையும் , வின்ணையும் இணைக்கும் சுமார் 50 மீட்டர் உயரமுள்ள கோயில் அமைந்து இருந்தது . ( விக்கி தகவல் )

    இங்கு எடுத்துக் கொண்ட கவிதைத் தொகுப்பு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது ( 4 ) அங்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பொருளை முதல் ஏழு வரிகளுக்கு தமிழில் கொடுக்கப்படுகிறது .

 

ஜிக்குரட் நீர் வானளவு வளர்ந்துள்ளது .

 

தரைக்கும் ஆகாயத்திற்கும் அஸ்திவாரமாக உயர்ந்த ஆடல் தளமாக உள்ளது .

 

அப்சூ ( இளவரசனுக்காக ) கோயில் இது .

 

அங்கு உயர்ந்த மண் மேடும் நல்ல உணவும் சாப்பிட கூடமும் உள்ளது .

 

குடிக்க நன்நீர் ஓடைகள் வழியாக வருகிறது .

 

பொட்டாஷ் தாவரம் இடத்தை தூயதாக வைத்துள்ளது .

 

அப்சூ உன் மேளங்கள் இறை சக்தியை பெற்றுள்ளன .

 

கவனிக்கவும் , 500 க்கும் மேற்பட்டவரிகள் இத்தொகுப்பில் இருப்பினும் இக்கட்டுரைக்காக முதல் ஏழு வரிகளை மட்டிலும் எடுத்துள்ளோம் .

இதே ஏழு வரிகளுக்கு லோகநாதன் ( 1 ) அளித்த தமிழ் ஒலி வடிவமும் பொருளும் இங்கு கொடுக்கப்படுகிறது .

 

ஓலி வடிவம் :

இல் ஊநீர் வான்கீ ஒது மூவ்வா

 

திம்மேய் வான்கீ உண்ணுகாள் எரிதூ

 

உப்பு சூர் ஈசா நுண்பியர் ஆம் குப்ஊ

 

இல்தூக்கு சுகில எரிக்க

 

பாய் சுகில நுண்னக ஆல் நக்கு

 

குன்று கீ சுகில நாக(ம்) டபு தூங்க

 

உப்புசூர் தீங்கியு மெய் காம்

 

 

மேற்கண்ட ஒலி வடிவத்திற்கு அவர் தந்த பொருள் :

 

மிக உயர்ந்த கோயில் கோபுரம் வானம் , உலகம் இவையுடன் சேர்ந்து நகருவது போல பிரமிப்பு .

 

வானத்திற்கும் , உலகத்திற்கும் அஸ்திவாரம் தூய எரிதூ .

 

கோயில் மிளிர்ந்தும் , தேவர்கள் வாழுமிடம் அளவிற்கு உயர்ந்தும் உள்ளது .

 

கோயில் தூய்மையும் அருளும் அடங்கி ஒளி மிளிர்கிறது .

 

விண்ணுலக தூயநீர் அருகும் வகையில் வாசல் .

 

தூய குன்று , இங்கு பாம்புகள் நிறைந்து உள்ளது .

 

உயரமான இந்த உப்பு சூர் இடம் மெய் சக்தியானது .

 

மேற்கண்ட அதே ஏழுவரிகளுக்கு நான் மொழிக் கொணர்வாக , முன்னோடியாக கொடுப்பது . இது புருசோத்தமன் மற்றும் ; சுரேஷ் ( 5 ) இணைந்து கையாண்ட முறையைச் சார்ந்து அளிக்கப்படுகிறது . இதில் அடைப்பு குறிக்குள்   சி டி எஸ் எல் ( ECTSL ) இணையதளத்தில் தரப்பட்டுள்ள ஒலிக் குறிப்புடன் அளிக்கப்படுகிறது .



 

கோயில் ( e2 ) உயர்ந்து ( u6 ) நிற்க ( nir ) வான் ( an ) கிட்ட ( ki-da ) முட்ட ( mu-a )

 

திம்மண்  ( temen ) வான்-கை ( an ki ) ஊன்று கோல் ( u-un-gal ) ஏறி தூக்கி  ( eridugti )

 

அப் ( gh ) சூர் ( ab zu ) ஈஸ்வர் ( es3 ) நுண் ( என் ) பீர் ( nun-bi-ir ) ஆம் ( am3 )

 

கோயில் ( e2 ) தூவும் ( du6 ) குகன் - வெள்ளி ஒளிர ( kug ) உயர உயர ( u2 )

 

சிகில்  ( sikil ) என எல்லாப் பக்கமும் ( la ) விரிக்க ( rig7 – ga )

 

பாயும் ( pa5 ) சிகில் ( sikil ) நுண் ( nun ) நாக ( na-ka ) ( a ) நங்கை ( nag – ga2 )

 

கூறும் ( kur ) கை ( ki ) சிகில் ( sikil ) எல்லாம்  ( la ) நாகம் ( naga ) தூக்கி ( dug4 )  என பேசுக ( ga )

 

மேற்கண்ட  மொழிக் கொணர்வு உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது . இது நாம் மேற்கொண்டு செய்ய வேண்டிய ஆராய்ச்சியின் தேவையை நிலைநாட்டுகிறது . நாம் நேரடியாக சுமேரிய களிமண் தட்டெழுத்து ஒலி வடிவங்களை பார்த்து வார்த்தை கூட்டினோம் என்றால் , அது தமிழ் தான் என்று உடனடியாக தெரியாது - சில வெளிப்படையான வார்த்தைகளைத்  தவிர்த்து . ஆதலின் சுமேரியர் களிமண் தட்டு எழுத்துக் களஞ்சியங்களை தமிழர் , மொழி வல்லுனர் அனைவரும் நாடிச் செல்ல வேண்டும் . மேற்கண்ட மொழிக் கொணர்வில் , ஒலி வடிவங்கள் குறிப்பு வடிவில் இருப்பதால் சிறிது கடினமே . நமது தமிழ் வழக்குச் சொல் ஒன்றும் கவனிக்கத் தக்கது , “ தட்டுத் தடுமாறி படித்தான் ” . இங்கு தட்டு என்பது சுமேரியர்  களிமண் தட்டில் வடித்த பாடத்தையே குறிக்கும்  எனக் கருதலாம் . இவ்வடிவிற்கு சுமேரியர் மொழிக் குறிப்பு ஒலி ’ , ‘ ,  

‘ da ’ என்பதாகும் .

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :



    இங்கு மதுரையில் கோயிலும் , மக்கள் வாழ்வும் நன்றாகப் பிணைந்த ஒன்று . கோயில் இவ்வுலகையும் வானுலகையும் பிணைக்கும் மனித இனத்தின் ஒரு பெருமிதம் . நாம் சோர்ந்து தலை குனியும் போதெல்லாம்  கோயிலின் கோபுரம் காண நம் தலைநிமிர்ந்து சக்தி சேர்க்கும் சாதனை .

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தமிழரின் அடையாளம் . மக்களின் மனதையும் , இருதயத்தையும் , வாழ்வாதாரத்தையும் ஒன்றுடன் ஒன்றுப் பிணைந்து 2500 வருடங்களுக்கு முந்தியது ( விக்கி தகவல் ) .

 

 

விளக்கவிரிவாக்கம் :

    சமீபத்தில் 2004 - ல் ஏற்பட்ட சுனாமியில் கொடிப் பள்ளம் என்ற கடல் பகுதியில் இருந்த ஒரு கிராமம் அனைத்து மக்களுடன் மொத்தமாக அழிந்துவிட்டது . அதில் தப்பியவர் எவரும் இல்லை . ஆனால் அது பற்றி அறிவு அதன் அருகில் இருந்த மக்களுக்கு இருந்தது . இது போல்  நமது லெமூரியா கண்டம் அழிந்த போதும் , அதன் விளிம்பில் இருந்த மக்களுக்கு அந்த விபரம் இருந்திருக்கக் கூடும் . லெமூரியா கண்டத்தின் விளிம்பில் இருந்த மக்கள் எங்கு சென்றனர் ? இது பற்றி தகவல்கள் சிறிது இருந்தாலும் , கடல் ஆராய்ச்சிகள் சில செய்தாலும் முழு விபரம் நாம் அறிய முடியாமல் இருக்கிறோம் . லோகநாதன் மற்றும் ஏனைய ஆராய்ச்சியாளர்கள் ( 1 , 2 , 3 ) நமக்கு ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றனர் . அது சுமேரியரின் வாழ்வாதாரம் , வாழ்வியல் , களிமண் எழுத்து தொகுப்புகள் இவற்றிலிருந்து நமக்கு தகவல் ஏதும் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதே .



 

புருஷோத்தமன் மற்றும் சுரேஷ் ( 5 ) இவர்களின் சுமேரியரின் துப்பில்லபயிலகம் ( e-dub-ba-a ) என்ற தொகுப்பின் தமிழ் மொழி  கொணர்வு வியப்பை அளிக்கிறது . நாம் இன்றும் ஆரம்ப பள்ளிகளில் படம் பார்த்துக் கதை சொல் அல்லது பாடம் படி என்ற முறையில் ஆரம்பித்து களிமண் தட்டில் எழுதும் முறை உருவாகி இருக்கிறது . இது திண்ணைப் பள்ளிக் கூட முறையை ஒத்து இருந்திருக்கிறது .

 

அக்கால கவிதை , பாடல் , எழுதும் முறைக்கு சில  இலக்கணங்கள் கூறப்பட்டிருந்தன . பாடல்களை  சீர் என்று அழைத்தனர் . நூலில் மணி கோர்ப்பது போலவும் , குருவி கூடு கட்டுவது போலவும் பாடல் இயற்றவும் , மக்களுக்கு  மகிழ்ச்சி அளிக்கவும் , இதமாக பாட ஏதுவாகும் அமைக்கும்படி குறிப்பிட்டனர் . பாடலின் தலைப்பிற்கும் அதன் பின் வரிகளுக்கும் உரிய தொடர்பு உள்ளதாகவும் , பிழை என்றால் , களிமண் தட்டை உடனே அழிக்கும் படியும் முறை செய்திருந்தனர் . மொழியின் வளர்ச்சியுடன் , மனித வாழ்விற்கு ஆதாரமான விவசாயத் தொழில் , நீர்வளம் பெருக்கவும் , புகழ் பாடவும் , புலவர் தொழிலையும் போற்றி வளர்த்தனர் . இவற்றை காணும் பொழுது மதுரைச் சங்கம் போன்ற மொழியும் , புலமையும் , தொழில் நுணுக்கங்களையும் துப்பில்லங்கள் மூலம் துப்பு பயிலகங்கள் , இல்லங்கள் மூலம் வளர்த்துள்ளனர் . இதில் பயின்றவர்கள் துப்பு சார் , துப்பு சாரணர் , பாணர் என்று பலவாறாக அழைக்கப்பட்டனர் . இவற்றையும் உறுதிபடக் கூற நமக்கு மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது .

 

மேலும் சுமேரிய மொழி ஆராய்ச்சி செய்த அயல்நாட்டு அறிஞர்களுக்கு மிகவும் கடமைபட்டுள்ளோம் . அவர்கள் தமிழ் அறிந்தவர்கள் அல்ல . அக்காடிய , அசிரீய மொழி துணை கொண்டு ஒலி வடிவமும் , பொருளும் அறிந்தனர் . சுமேரிய மொழி அழிந்து விட்டது என்று நம்பினர் . அது திராவிடர் மொழி என ஒத்துக் கொள்ளவில்லை . ஆதலின் அவர்களின் மொழி பெயர்ப்பு ஏறக்குறைய பொருள் கொடுத்தாலும் அக்காலத்து கவிஞனின் மொத்த கருத்தும் அறிய முடியவில்லை . பின் லோகநாதன் ( 1 ) சுமார் ஐம்பது வருட ஆராய்ச்சியில் சுமேரியர் மொழி , சமஸ்கிருதத்திற்கும் இன்றைய தமிழுக்கும் முந்திய மூல மொழி என்றார் . இதன் சார்பாகவும் நாம் சுமேரியாவின் அனைத்து எழுத்து களஞ்சியங்களையும் ஆராய வேண்டியுள்ளது .



 

வருங்காலத்தில் , சுமேரிய மொழி ஆராய்ச்சியாளர்கள் கீழ்கண்ட குறிப்பையும் கவனத்தில் கொள்ளலாம் . சுமேரியர் நன்கு தமிழ் பேசினர்  ஆனால் குறுக்கெழுத்து முறை கொண்டு , சங்கேதக் குறியீடுகள் கொண்டு எழுதினர் . ஆதலின் அதன் வழியான இன்றைய வழக்குத் தமிழ் கொண்டு , மொழிக் கொணர்வு செய்ய அவற்றுக்கு பொருளும் மெருகும் கூடும் .  மேற்கண்ட குறிப்புகளைக்  கொண்டே ஜிக்குரட் காப்பியத்தின் முதல் ஏழு வரிகளை முன்னோட்டமாக மொழிக் கொணர்வு பெறப்பட்டது .

 

லோகநாதன் ( 1 ) தனது குறிப்பில் ஜிக்குரட் என்னும் சொல் தமிழ் சொல்லான சிகரம் என்பதிலிருந்து மருவி வந்திருக்கலாம் என்பார் . இங்கு நாம் எடுத்துக் கொண்ட ஏழு வரிகளில் சிகில் ( sikil ) என்ற சீர் ( sir ) மிக அருமையானது . சுமேரிய .பி.எஸ்.டி. ( ePSD ) அகராதியில் ( 6 ) இதற்கு மரம் , பெண் , அருமை என பலவாக பொருள்படும் . அதுவேசிகி என நம் தமிழ் அகராதியில் ( 7 ) பார்க்கும் போது மயில் , நெருப்பு , ஆமணக்கு என்று பல பொருள் கிடைக்கிறது . மற்றும் தற்போது உள்ள ஒலி வடிவமாகசிகில் எனவும் தெரிகிறது .  இது தமிழுக்கும் சுமேரிய சீர்களுக்கும் உள்ள தொடர்பை நிலை நிறுத்துகிறது . அத்துடன் நில்லாது ஜிக்குரட் என்ற சொல் ஒலி வடிவம் சிகில் இரதம் என்ற இரண்டு சொற்களின் புணர்தலாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது . இதுவே பிற்காலத்தில் மருவி சிகரம் ஆகி இருக்கலாம் என்றும் தோன்றுகிறது . இது லோகநாதனின் கூற்றான சுமேரிய மொழி தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் முந்திய  மூல மொழி என எடுத்துக் கொள்ளக் கூடியது . இதுவும் மேற்கொண்டு ஆராய்ச்சிக்கு உரியது .

 

மற்றும் நாம் எடுத்துக் கொண்ட ஏழுவரிகளும் சுமேரிய கோயிலின் வர்ணனைகள் என்பதை மறந்து அது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு என்று எடுத்து கொண்டால் , அதுவும் மிகப் பொருந்தும் .

ஆக சுமேரிய மக்களும் , மதுரை வாழ் மக்களும் காலத்தாலும் , தூரத்தாலும் பிரிக்கப்பட்டு இருந்தாலும் , அவர்களின் இடைவெளி குறைந்து இருவரும் தமிழ் பேசினர் . கவிதைகள் பூட்டினர் . சங்கம் கல்வி கூடங்கள் வளர்த்தனர் . கோயில் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தனர் . இருவாழ் மக்களும் தமிழ் நாகரீக சிகரம் தொட்டனர் . இது இன்றும் தொடரும் நாகரீகம் .

 


முடிவுரை :

லெமூரியா கண்டத்தின் விளிம்பில் இருந்த மக்கள் , சுமேரிய தமிழ் பேசிய மக்கள் , மதுரை மக்கள் இவர்களுக்கான இடைவெளி குறைந்து காணப்படுகிறது . இவர்கள் தமிழ் வளர்த்தனர் . ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கினர் . சுமேரியரின் எழுத்துக்கள் , கவிதைகள் , களஞ்சியங்கள் , லெமூரியாவின் விளிம்பில் வாழ்ந்தவர்கள் விட்டுச் சென்றதாக இருக்க கூடும் . தமிழ் ஆர்வலரும் , அறிஞரும் இதன் சார்பான சுமேரிய மொழி ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் , ஊக்குவிப்பதும் முக்கியமாகப் படுகிறது .

 

காண்க :

 

1.     Loganathan.K, Sumerian Tamil, Tovered temple in Sumeria ( இணையதளம் )

2.     கந்தையா பிள்ளை ந . சி . - வரலாற்று காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர் , புரொகிரசிவ் அச்சகம் , 1948 .

3.     Sathasivam . A .  Sumerian – A Dravidan Language , Berkeley California – 1965 .

4.     ETCSL , Electronic Text Corpus of Sumerian Literature . , The temple hymns ,  C . 4 . 80 . 1 ( இணையதளம் )

5.     Purushothaman . P. ;  Suresh , E . S . M .  Reflecting on pedagogical issues of e-dub.ba.a of Sumeria linking to our present times , Journal of engineering , science , management and education , vol-7(II) , 136 -141 , 2014 ,  NITTTR , Bhopa l.

6.     ePSD , The Pennsylvania Sumerian Dictionary  ( இணையதளம் ) 

7.     dsal , Digital Dictionary of South Asia , Tamil Texicon . University of Madras  ( இணையதளம் )

 

 


 

 

****************