” வல்லினம்
நீ உச்சரித்தால் . ” [
ஒரு கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
-------------------------------------------------------------------
” வல்லினம்
நீ உச்சரித்தால் “ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – முகமது மதார் . [ 95970 69069 ]
வெளியீடு – வாசகன் பதிப்பகம் , சேலம் .
விலை – ரூபாய் 50 /
அறிமுக உரை – கவிஞர் ஆத்மார்த்தி .
முகமது மதார் எழுதுவதில் ஆர்வம் உள்ள
இளைஞர் . பொறியியல் பட்டதாரி . இவரது இந்தக் கவிதைத் தொகுப்பு அவர் கல்லூரியில்
படித்துக் கொண்டிருக்கும் போதே [ 2014 ] வெளியிடப் பட்டது என்ற எண்ணத்தை மனதில்
வைத்துக் கொண்டே வாசிக்கப்பட வேண்டியது . முதல் கவிதையில் தொடங்கி கடைசிக் கவிதை
வரை காதல்தான் கருப் பொருள் . அதிலும் பொதுப்படையான காதல் கவிதைகள் அல்ல . காதலியை
முன்நிறுத்தி வைத்து எழுப்பப்படும் ஒரு இளைஞனின் மனக்குரலாகவே இருக்கிறது . [ சங்க
காலப் பாடல்களில் தோழியை முன்நிறுத்துவது போல ] அதனாலேயே வாசிக்கும் போது ஒரு
கவிதைத் தொகுப்பு என்பதையும் மீறி , காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் இரகசிய
நாட்குறிப்பை அவனறியாமல் படிக்கும் உணர்வுகள் எழுவதைத் தடுக்க இயலாது .
“ வல்லினம் நீ உச்சரித்தால்
மெல்லினமாய் மாறுதடி !
மெல்லினம் நீ உச்சரித்தால்
மயிலினமாய் வருடுதடி ! ”
என்ற முதல் கவிதையிலேயே வாசிப்பவனையும்
வருடிச் செல்கிறார் .
” மருதாணி
வைத்துவிட்டு
வாசம் வருகிறதா ? என்றாய்
வரவில்லை , அதன் வாசம் – உன் கையில் !
வருகிறது , உன் வாசம் – மருதாணியில் ! “
என்ற கவிதையில் கற்பனையின் உச்சம்
தொடுகிறார் .
பொதுவாக எல்லாக் கவிதைகளுமே ஐந்து அல்லது
ஆறு வரிகளுக்குள்தான் எனினும் மூன்று நீள்வரிக் கவிதைகளும் உள்ளன . அதில் ஒன்றான “
கல்லூரிப் பேருந்து “ கவிதை இப்படி முடிகிறது ...
” முன்
இருக்கையில் நீ !
பின் இருக்கையில் நான் !
நீ பார்த்து விட்டு ,
எனக்கு அனுப்பும் அந்த
வெளிப்புறக் காட்சிகள்
அன்று மட்டும் என்னவோ
அத்துணை அழகாய்
தோற்றம் தருகிறது ...
என் விழிகளுக்கு ... “
வாசித்து முடிக்கையில் அவருக்குப் பின்
இருக்கையில் நாம் அமர்ந்திருக்கும் உணர்வை உருவாக்குகிறது வரிகள்.
” உன்
ஞாபகமாய்
எதுவுமில்லை என்னிடம் !
உன் ஞாபகங்களைத் தவிர ... “
**************************************
உன் கண்ணீர்த்துளிகளைக்
காணும்போதெல்லாம்
என் உதடுகளுக்கு
உப்புத்தண்ணீரின் மீது
ஆசை வந்து விடுகிறது ... !
என்ற கவிதைகள் காதலில் கவித்துவம்
தவிர்க்கப்பட இயலாது என உணர்த்துகிறது .
முகநூலின் இன்னொரு முகத்தைக் காட்டிச்
செல்கிறார் ஒரு கவிதையில்
” போதுமான போலி
அக்கவுண்டுகள் அவசியமாகின்றன !
ஒற்றை ‘ லைக் ‘ குடன்
எப்படிக் கடப்பது ?
உன் ஃபேஸ்புக் புகைப்படப் புன்னகையை ... !
“
சொல் , பொருள் மயக்கம் சில கவிதைகளில்
இருப்பதாகவேப் படுகிறது .
” நிலவுகளில்
நிதம்
நீதான் ! “
வார்த்தை ஜாலம் நயம் . ஆனால் ஒரு நிலவு பல
நிலவுகளாக மாறி ஒரு மயக்கத்தை உருவாக்கி விட்டது போலும் .
”
காதல் தோல்விகள் –
நிறுத்தம் வந்தபின் கிடைக்கிற
பேருந்து இருக்கைகள் ... ! “
என்ற கவிதையிலும் இலேசான கருத்து மயக்கம் .
யதார்த்தத்தில் வேறு காதலோ அல்லது திருமணமோ நிகழ்ந்தபின் கிடைக்கும் முதல் காதலின்
வெற்றிதான் நிறுத்தம் வந்தபின் கிடைக்கிற பேருந்து இருக்கைகளுக்கு இணையானவை என்ற
எண்ணம் உருவாகுவதை வாசிக்கையில் தவிர்க்க இயலவில்லை .
வல்லினத்தில் ஆரம்பித்த தொகுப்பை ,
பெருமழையாய் முடித்திருக்கிறார் கடைசிக் கவிதையில் .
” சிறு
பிள்ளையின்
முதல் புன்னகையில் தொடங்கி ,
பெருமழையின்
கடைத்தூறலில் முடிகிறது
உனக்கான என் கவிதை ... ! “
காதல் வயப்பட்ட இளைஞர்களுக்கு நிச்சயமாய்
ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் இந்தக் கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் முகநூலில் “ காகிதக் கவிதைகள் “
என்று ஒரு பக்கத்தில் தன் கவிதைகளைப் பதிவிடுகிறார் . அந்தக் கவிதைகளிலும் ,
கல்லூரி நினைவுகள் குறித்த அவரது சமீபத்திய பதிவுகளிலும் அவர் தன் தளத்தை விரிவு
படுத்தி விட்டார் என உணர முடிகிறது . நிச்சயமாக அவரது அடுத்த தொகுப்பில் காதலைத்
தாண்டி வந்து பரந்த தளத்தில் கவிதைகளைத் தருவார் என நம்பலாம் . வாழ்த்துவோம் .
-----------------------------------------------------------------
அருமை
பதிலளிநீக்குஅருமையான மதிப்புரை.
பதிலளிநீக்குமகிழ்ச்சி சார்.