சனி, 15 ஜூலை, 2023

ஒப்பனை செய்யும் மாயம் .

 ஒப்பனை செய்யும் மாயம் .


1950 களில் தென்னிந்திய சினிமா தொழில் நுட்பக் கலைஞர்கள் சங்கம் [ Cine Technicians’ Association of South India – CTA ] என்றொரு சங்கம் இருந்திருக்கிறது . [ இப்போதும் இருக்கிறதோ ? ] அதன் உறுப்பினர்களுக்காக  என்று ஒரு இதழும் வெளியாகிக் கொண்டிருந்திருக்கிறது . Journal of The Cine Technicians’ Association of South India . 46 பக்கங்கள் – விலை 1 ரூபாய் .



1956 ஜனவரி இதழில் ஒப்பனைக் கலைஞர் ஹரிபாபு குறித்த ஒரு சிறு கட்டுரையில் [ அல்லது தகவல் ] ஒரு படம் அவர் எஸ் . வி . ரங்காராவுக்கு ஒப்பனை செய்வது போல உள்ளது . இணைத்துள்ள பிரதியை வாசித்தவர்களில் யாரோ ரங்காராவை அடித்து முக்காலா கிருஷ்ணமூர்த்தி என்று எழுதியுள்ளார்கள் . கீழேயே ஒப்பனை முடிந்தபின் என்று இரு படங்கள் உள்ளன . ஒன்று எஸ் . வி . ரங்காராவ் இன்னொன்று முக்காலா கிருஷ்ணமூர்த்தி . எது சரி என்பதை முகஜாடை வைத்து கண்டு பிடிக்க முடியவில்லை என்றாலும் படங்களில் தென்படும் மாற்றம் ஹரிபாபுவின் தொழில் திறமைக்குச் சான்றாகவே உள்ளது .  இன்னொரு தகவல் . அதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிக் கொண்டிருந்த பொய்த் தலைமுடியை [ Wig ] இங்கேயே தயாரித்தது ஹரிபாபுதானாம் .



செப்டம்பர் , அக்டோபர் 1956 இதழில் ஒரு பக்கத்தில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் T . ஜானகிராம் என்றொரு பெயர் உள்ளது . அநேகமாக எழுத்தாளர் தி . ஜானகிராமனாகத்தான் இருக்க வேண்டும் . இன்னொரு சுவாரசியமான பெயர் – ரஜனிகாந் . ஆனால் அவர் இயக்குநர் ரஜனிகாந்தாம் .


புதன், 12 ஜூலை, 2023

தந்தை குறித்து மகளின் நினைவுக் குறிப்புகள் .

 

மலேயாவில் இருந்து வெளிவந்த “ நேசன் “ அவர் மறைந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு [ 1960 ] அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒரு சிறப்பிதழை [ புதுமைப்பித்தன் நினைவு மலர் ] வெளியிட்டது . மு . வ . , கு . அழகிரிசாமி , ரகுநாதன் , சி . சு . செல்லப்பா , அகிலன் , கைலாசபதி , அ . சீனிவாசராகவன் உட்பட பலரும் எழுதியக் கட்டுரைகளோடு புதுமைப்பித்தனின் மனைவி திருமதி கமலா புதுமைப்பித்தன் தனது கணவர் குறித்து எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது . 





அந்த இதழில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கட்டுரை புதுமைப்பித்தனின் மகள் திருமதி தினகரி சொக்கலிங்கம் [ அப்போது செல்வி தினகரி ] எழுதியது .  அப்போது அவருக்கு 14 அல்லது 15 வயது இருக்கலாம் . மனத்தில் உள்ளதை வெளிப்படையாகக் காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் முழு வடிவம் கீழே .