” வதை ”
[ நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2019 மற்றும் தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை ]
-
குக்கூ … குக்கூ …. சீனா கடிகாரம் எழுப்பிய உரத்த குரல் கேட்டு கண் விழித்தான் பிரபு . கீதா ” மணி ஐந்தாயிட்டுதா
? “ என்றாள் கண்களைத் திறக்காமலே .
“ ஆமாம் . நான் போய் வர்த்தினியை எழுப்புகிறேன்
. நடன வகுப்புக்கு போய்ட்டு வந்து குளிச்சிக்கிடறோம் . காஃபி வழியில் குடிச்சுக்கிறேன் . வெளியே பூட்டிட்டு சாவியைக் கையில் கொண்டு போயிடறேன் . “
“ இன்னைக்கு புதன் கிழமைல்ல . ஏழு மணிக்கு ம்யூசிக் வகுப்பும் உண்டு . “ கீதா படுக்கையில் இருந்து எழாமலே பதில் கொடுத்தாள் .
பிரபு வர்த்தினி படுத்திருந்த அறைக்குச் சென்று கதவைத் திறந்து நுழைந்தான் . வர்த்தினி கழுத்து வரை போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்
. பிரபு அருகில் சென்று மெதுவாக குரல் கொடுத்தான் . “
குட்டிம்மா எழுந்திரு . டான்ஸ் க்ளாஸ் போகணுமில்ல . “ வர்த்தினி எழவில்லை . இரவு வெகுநேரம் உட்கார்ந்து படித்த அசதி . “
தூக்கமா வருதுப்பா . கொஞ்ச நேரம் கழிச்சு எழுந்திருக்கவா
? “ என்றாள் மெல்லிய குரலில் .
“மணி ஐந்தாயிடுச்சு . இப்போ எழுந்தாத்தான் ஐந்தரை மணிக்கு டான்ஸ் க்ளாஸிற்குப் போக முடியும் . ஏழு மணிக்கு ம்யூசிக் க்ளாஸ் வேற போகணும் . அப்புறம் வந்து ஸ்கூலுக்கு போகணும் . எல்லாத்துக்கும்
சேர்த்து வச்சு ஞாயிற்றுக்கிழமை பத்து மணி வரை தூங்கலாம் குட்டிம்மாவும்
, அப்பாவும் . சரியா ? “
சரியாக தூக்கம் கலையாமல் எழுந்து குளியல் அறை நோக்கி நடந்த எட்டு வயது வர்த்தினியைப் பார்க்கையில் பிரபுக்கு மனம் சங்கடப் பட்டது . வர்த்தினி தயாராவதற்குள் அவனும் குளியலறைக்குச் சென்று தயாராகி உடைகளை மாற்றிக் கொண்டான் . மீண்டும் வர்த்தினியின் அறைக்கு வந்தபோது வர்த்தினி தயாராக இருந்தாள் .
அதிகாலை என்பதால் சாலையில் போக்குவரத்து அதிகமில்லை . பத்தே நிமிடங்களில் நடனப் பள்ளியை அடைந்து விட்டது கார் . வர்த்தினியை உள்ளே அனுப்பிவிட்டு அருகில் இருந்த தேநீர் கடைக்குச் சென்று சூடாக காஃபி சாப்பிட்டுவிட்டு
வாகனத்தை அருகில் இருந்த மரத்தின் நிழலில் நிறுத்தி இருக்கையில் சாய்ந்தவாறே தூங்கி விட்டான் .
“ அப்பா , போகலாமா ? “ வர்த்தினியின் குரல் கேட்டதும் விழித்துக் கொண்டு முன் கதவைத் திறந்து விட்டான் . வர்த்தினி ஏறிக் கொண்டாள் .
வீட்டையடைந்து இருவரும் குளித்துவிட்டு கீதா பரிமாறிய இட்லிகளைச் சாப்பிட்டு முடித்தபோது மணி ஆறே முக்கால் . மீண்டும் பயணித்து நடன வகுப்பை அடைந்தபோது மணி ஏழு . வர்த்தினி அவசரமாக உள்ளே போனாள் . பிரபு நிழல் பார்த்து வாகனத்தை நிறுத்தினான் . கைபேசி அழைத்தது .
“ ஹலோ … மிஸ்டர் பிரபுவா ? நான் இயக்குனர் ராம் சங்கர் பேசறேன் . இப்ப பண்ணிக்கிட்டு இருக்கிற படத்தில ஒரு சின்ன குழந்தைப் பாத்திரம் . உங்க மகள் ஞாபகம் வந்துச்சு . இன்னைக்கு சூட்டிங் இருக்கு . வர முடியுமா ? மகாபலிபுரம் போற வழியில கடற்கரை ஸ்பாட் . மத்தியானம் ஒரு மணிக்கு அங்கே இருந்தால் போதும் . நல்ல ரோல் . நல்லா பண்ணுவாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு . ”
“ ஓ… நன்றி சார் . முன்னதாகவே வந்து விடுகிறோம் “ என்றான் . இயக்குனர் இடம் குறித்து சரியான அடையாளங்களைச் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தார் . பிரபு கைபேசியில் கீதாவை அழைத்தான் . கீதாவின் குரலிலும் பரபரப்பு . “ பள்ளிக்கூடத்திற்கு போன் செய்து விடுமுறை சொல்லிவிடு . வகுப்பு முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்திடறோம் . கொஞ்சம் முன்னாடியே கிளம்பி போயிடலாம் . நீயும் தயாராக இரு . வழியில சாப்பிட்டுக்கிடலாம் . “
வகுப்பு முடிந்து வர்த்தினி வந்ததும் விஷயத்தைச் சொன்னான் . வர்த்தினியின் முகத்தில் மகிழ்ச்சியும் குழப்பமும் . “ அப்ப ஸ்கூல் …. ? “ “ லீவ் சொல்லிடலாம் “ சொல்லியவாறே வாகனத்தைக் கிளப்பினான் .
வர்த்தினி அடையப்போகும் உயரம் குறித்து கற்பனைகளில் மிதந்தவாறே வாகனத்தை ஓட்டினான் . வர்த்தினி முதல் வகுப்பு படிக்கையில் நடந்த பள்ளி ஆண்டு விழாவில் அவள் ஆடிய தனி நடனம்தான் எல்லாவற்றிற்குமே ஆரம்பம் . பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டும் அளவிற்கு அழகாக ஆடினாள் . இன்னொரு விழாவில் பாடிய போதும் அதே அளவிற்கு வரவேற்பு . பிரபுவும் கீதாவும் அவளை நடன வகுப்பு , இசை வகுப்பு எனச் சேர்த்துவிட அவளது திறமை மெருகடைந்து கொண்டே போனது . பள்ளியில் மட்டுமில்லாது வெளி இடங்களிலும் அவளது திறமை வெளிப்பட ஆரம்பித்ததும் , எதிர்பாராமல் ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியதும் , தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் அவளுக்கு வாய்ப்புகள் கிடைத்ததும் …. எல்லாமே ஒரு கனவு போல தொடர்ந்தன . முத்தாய்ப்பாக சில மாதங்களுக்கு முன் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக வந்த இயக்குனர் ராம் சங்கர் வர்த்தினியின் திறமையை பாராட்டியதோடு , தனது அடுத்த படத்தில் குழந்தைப் பாத்திரத்தில் அவளுக்கு வாய்ப்பு உண்டு என்று உறுதி அளித்தார் . இயக்குனரின் வாக்குறுதி இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என எதிர்பார்க்கவில்லை .
வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள் கீதா . வர்த்தினியை வாரி அணைத்து முத்தமிட்டாள்
.
“ லீவ் சொல்லிட்டியா ? “
“ தலைமை ஆசிரியரிடமே பேசி விட்டேன் . உடனே சரி சொன்னதும் இல்லாமல் வர்த்தினிக்கு வாழ்த்துகளையும் கூறினார் . “
இயக்குனர் சொன்ன இடத்திற்குப்போக
இரண்டு மணி நேரம் ஆகும் எனக் கணக்கிட்டு சற்று முன்னதாகவே கிளம்பினார்கள் .
அந்த இடம் ஒரு படப்பிடிப்பிற்கு தயாராவதற்கான பரபரப்பில் இருந்தது . இரவு அடித்த பனிக்கு மாறாக மதியப்பொழுது சூரியன் கொதித்துக் கொண்டிருந்தான்
. ஒரு குடையின் கீழ் உட்கார்ந்திருந்த
இயக்குனருக்கு பிரபுவும் , கீதாவும் வணக்கம் வைத்தார்கள் . இயக்குனர் புன்சிரிப்போடு பதில் வணக்கம் சொன்னார் . “
வாம்மா … வருங்கால சூப்பர் ஸ்டார் “ என்று புன்னகைத்தார் . பக்கத்தில் இன்னொரு குடையின் கீழ் கதாநாயகிக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தார்கள் . “ ஹீரோ இப்போ வந்திடுவார் . வந்ததும் ஆரம்பிச்சிடலாம்
. சாப்பிட்டீங்களா ? “
பிரபு ஆமென்று தலையாட்டினான்
. மூவருக்கும் குளிர்ச்சியான பானம் கொடுத்தான் சிறுவன் ஒருவன் . மூவரையும் தன் அருகிலேயே உட்கார வைத்துக் கொண்டார் . “
தன்யா ….. பாப்பா ரொம்ப சூட்டிகை . நீயேதான் பார்க்கப் போறியே . “ கதாநாயகி புன்னகை செய்தாள் .
“ பாப்பா … சீன் என்னான்னு சொல்றேன் . கேட்டுக்க . அதோ அந்த அம்மாதான் உன்னோட சித்தி . உன்னைப் பிடிக்காது . உங்க அப்பா , அதாவது சினிமா அப்பா … நம்ம ஹீரோ , சித்தி , நீ மூன்று பேரும் பிக்னிக் வந்திருக்கீங்க
. உன்னோட விருப்பமான பூனைக் குட்டியையும் நீ சித்திக்குத் தெரியாமல் ஒரு கூடையில வச்சு கொண்டு வந்திருக்கே . சித்திக்கு உன்னையும் பிடிக்காது , அந்த பூனைக் குட்டியையும் பிடிக்காது . அது திடீர்னு சத்தம் கொடுத்ததும் சித்திக்கு தெரிஞ்சு உன்னைத் திட்டறா . கூடையைத் திறந்து பூனைக்குட்டியை விரட்டி விடுகிறாள் . சூடான மணலில் பூனைக்குட்டி கத்தியவாறே ஓடுகிறது . நீயும் அதன் பின்னாலேயே ஓடறே . அவசரத்தில செருப்பு கூட போடாம ஓடறே . சூடு தாங்காமல் வெளிப்படற வலியை உன் முகத்தில் காட்டணும் . ரொம்ப இயற்கையா இருக்கணும் . ரொம்ப தூரம் ஓடுனப்புறம் அதைப் பிடிச்சிடறே . வாரித் தூக்கி முகத்தோடு வச்சு அணைச்சுக்கிறே
. அப்ப உன் மகிழ்ச்சியை அப்படியே பார்க்கிறவங்க உணர்கிற மாதிரி காட்டணும் . ஜமாய்ச்சுடணும் . “ இயக்குனர் வலியையும் , மகிழ்ச்சியையும்
தன் முகத்தில் உருவாக்கிக் காட்டியதை வர்த்தினி ஆச்சரியமாகப் பார்த்தாள் . இவ்வளவு உணர்ச்சிகளைத் தன்னால் வெளிப்படுத்த முடியுமா என்று யோசித்தாள் . இயக்குனர் ஒப்பனைக்காரர் ஒருவரிடம் வர்த்தினிக்கு ஒப்பனை செய்யச் சொன்னார் .
தூரத்தில் ஓர் ஆள் கையில் ஒரு பூனைக்குட்டியோடு நின்று கொண்டிருந்தான் . வெள்ளை நிறத்தில் புசு புசுவென்று முடியோடு இருந்தது . மின்னும் கண்கள் . அதைப் பார்க்கையில் வர்த்தினிக்கு ஓடிச் சென்று அதை வாங்கி கையில் வைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது . “
கெட்டிக்கார பூனைக்குட்டிம்மா
. அந்த ஆள் சொல்றா மாதிரி கேட்கும் . இதோட நாற்பது படத்திற்கு மேல நடிச்சிருக்கு
. “
திடீரென்று இடம் பரபரப்பானது . விலை உயர்ந்த வெளிநாட்டுக்கார் ஒன்று வந்து நின்றது . கதவைத் திறந்து கதாநாயகன் இறங்கினார் . ஏற்கனவே ஒப்பனை செய்து பள பளவென்று இருந்தார் . இயக்குனர் தவிர உட்கார்ந்திருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள் . கதாநாயகன் நேராக இயக்குனரின் அருகில் வந்து காலியாக கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார் . “ சார் , நாலு மணிக்கு கிஷோர்குமார் பட ஷூட் இருக்கு . சட்டுன்னு முடிச்சு அனுப்பிடுங்க . “
இயக்குனர் பலரைக் கூப்பிட்டு ஏதேதோ சொன்னார் . ஒளிப்பதிவாளர் காமிராவைத் தயார் நிலைக்கு கொண்டு வந்தார் . இயக்குனர் காட்சி குறித்து மற்றவர்களுக்கும்
விளக்கினார் .
படப்பிடிப்பு ஆரம்பமானது . கதாநாயகன் , நாயகி , வர்த்தினி மூவரும் கதாநாயகன் வந்த காரில் இருந்து இறங்குகிறார்கள்
. வர்த்தினி கையில் பூனைக்குட்டி இருந்த கூடை . கதாநாயகன் காரில் இருந்து பெரிய குடை ஒன்றை எடுத்து மணலில் குத்தி நிறுத்துகிறான் . கதாநாயகி காரில் இருந்து சாப்பாட்டுக்கூடை , குளிர்பான பாட்டில்கள் எல்லாம் எடுத்து மணல் தரையில் பரப்புகிறாள்
.
“ சிந்து …. நைஸ் ப்ளேஸ் இல்லே . “
“ ஆமா டார்லிங் . இயற்கை எப்பவுமே அழகுதான் . “
கதாநாயகியின் தமிழில் ஆங்கில வாடை .
“ ப்ரவீனாக்குட்டி
, கடல் எவ்வளவு அழகா இருக்கு பாரு . அலைகள் எப்படி கரையில வந்து மோதுது . “
“ ஆமா டாடி . ரொம்ப நல்லா இருக்கு . கடல் பக்கமாப் போய் அலைகள் காலில படற மாதிரி நிற்கலாமா ? “
வர்த்தினி இயக்குனர் சொன்ன மாதிரியே உச்சரித்தாள் . இயக்குனர் பிரபு பக்கம் திரும்பி திருப்தி கலந்த புன்னகையை பரிமாறினார் .
சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பூனைக்காரன் மெல்லிய குரலில் ஏதோ கூற , அதுவரை கூடைக்குள் இருந்த பூனைக்குட்டி மெல்லியதாக இரு தடவைகள் “ மியாவ் … “
என்று குரல் கொடுத்தது . கதாநாயகி கோபத்தோடு வர்த்தினியின் கையில் இருந்த கூடையைப் பிடுங்கினாள்
. “ எத்தனை தடவைச் சொன்னாலும் கேட்க மாட்டியே நீ . இந்தச் சனியனையும் எனக்குத் தெரியாமல் தூக்கிட்டு வந்திட்டியா ? “
கோபத்தோடு வர்த்தினியைப் பார்த்து முறைத்தாள் . பின்னர் கூடையைத் திறந்து பூனைக்குட்டியைத்
தூக்கி வெளியே போட்டாள் . மணலில் கலந்து கிடந்த சிறு கற்களைப் பொறுக்கி அதன் மீது எறிந்தாள் . பூனைக்குட்டி பயந்து மணலின் சூடு தாங்காமல் அலறியவாறே ஓடியது . வர்த்தினிக்கு உண்மையிலேயே பாவமாக இருந்தது . சட்டென்று எழுந்தவளின் கையைப் பிடித்து இழுத்தாள் கதாநாயகி .
வர்த்தினி தன் கையை உருவிக் கொண்டு பூனைக்குட்டியின் பின் ஓடினாள் . மணலின் அதீத சூடு செருப்பு போடாத அவள் கால்களைப் பொசுக்கியது . சூடு தாங்காமல் கால்களை மாற்றி மாற்றி உதறியவாறு ஓடினாள் . முகத்தில் கால்களைப் பொசுக்கிய சூட்டின் வலி தெரிந்தது . சிறிது தூரம் ஓடியதும் நின்று கால்களை மாற்றி மாற்றி தூக்கி கைகளால் தடவிக் கொண்டாள் . முழுப் பாதங்களும் மணலில் பதியாதவாறு விரல் நுனிகளை மட்டும் ஊன்றி ஓடினாள் . பூனைக்குட்டிக்கும் சூட்டின் வலி . அதுவும் வலியோடு கத்தியவாறே ஓடிக் கொண்டிருந்தது
. இயக்குனர் பிரபுவை பார்த்து விரல்களைக் காட்டினார் . “ க்ளாஸ் … !
“ பிரபுவுக்கும் , கீதாவுக்கும் உள்ளுக்குள் பெருமிதம் .
வர்த்தினி பூனைக்குட்டியை நெருங்கப் போகும்போது வேகமாக வந்த வேன் ஒன்று அங்கு வந்து நின்றது . மூன்று பேர்கள் இறங்கி நேராக இயக்குனரிடம் போனார்கள் . வந்தவர்களில் ஒருவர் இளம் வயதுப் பெண் . மூவருமே இயக்குனரிடம் ஏதோ கோபமாகப் பேசினார்கள் . தூரத்தில் இருந்ததால் வர்த்தினிக்கு அவர்கள் பேசியது கேட்கவில்லை . இயக்குனரும் அவர்களிடம் ஏதோ கூறினார் . படப்பிடிப்புக் குழுவினரும் அந்த இடத்திற்கு வந்து சூழ்ந்து கொண்டனர் .
இயக்குனர் ஒளிப்பதிவாளரை நோக்கி ஏதோ சொல்ல அவரும் காமிராவை நிறுத்திவிட்டு அங்கே போனார் . வர்த்தினியையும்
வந்து விடுமாறு கை காட்டினார் இயக்குனர் . ஏற்கனவே மணலின் சூட்டால் கொப்பளிக்கத் தொடங்கியிருந்த காலகளின் வலி பொறுக்காமல் அவள் ஓடி வந்து குடைக்குள் நின்று கொண்டாள் . அவளது முகத்தைப் பார்த்ததும் அவள் வலி புரிந்த பிரபு அவளைத் தூக்கிக் கொண்டான் . கீதா வர்த்தினியின் மெல்லிய பாதங்களை வருடி விட்டாள் . ஏற்கனவே ஏற்பட்டிருந்த கொப்புளங்களில் கை பட்டதும் வர்த்தினிக்கு வலி தாங்காமல் அழுகை வந்து விட்டது . பிரபு கைக்குட்டையை நனைத்து பாதங்களில் ஒத்தடம் கொடுத்தான் . பூனைக்காரன் பூனைக்குட்டியைத்
தூக்கிக் கொண்டு வந்து நின்றான் .
வேனில் வந்த பெண் அவனிடம் இருந்து பூனைக்குட்டியைப் பிடுங்கி வேனின் பின் பக்க இருக்கையில் வைத்து விட்டு அவளும் ஏறிக் கொண்டாள் . பூனைக்காரன் அவளிடம் சென்று கெஞ்சுவது போல ஏதோ பேசினான் . அவள் அவனை மிரட்டுவது போலப் பேசி விரட்டி விட்டாள் .
வேனில் வந்த இன்னொருவர் சில காகிதங்களை இயக்குனரிடம் காட்டி கையெழுத்து வாங்கினார் . முதலில் மறுத்த இயக்குனர் பின்னர் கையெழுத்திட்டார் . பூனைக்காரரிடமும்
கையெழுத்து வாங்கிய பின்னர் இன்னும் சிலரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டபின் இயக்குனரிடம் ஏதோ ஆங்கிலத்தில் கூறிவிட்டு வேனில் ஏறிப் புறப்பட்டனர் . பூனைக்காரன் அழாத குறையாக வேனையே பார்த்துக் கொண்டிருந்தான் .
“ சாரி …. இப்படி ஓர் இடைஞ்சல் வரும்னு எதிர்பார்க்கல . என்ன பண்றதுன்னு யோசிச்சு அப்புறம் சொல்றேன் . “
இயக்குனர் எல்லோரிடமும் சொல்வதைப் போலப் பொதுவாகப் பேசினார் . நாயகனும் , நாயகியும் அவரவர் கார்களில் ஏறி உடனே கிளம்பி விட்டார்கள் .
இயக்குனர் பிரபு பக்கம் திரும்பினார் . “ சாரி , எதிர்பாராத இடைஞ்சல் . குட்டியோட முகபாவம் , நடிப்பு எல்லாமே ரொம்ப இயற்கையாக பிரமாதமாக இருந்தது . எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிடானுங்களே இவனுக . நான் திரும்பக் கூப்பிடறேன் . இதை அட்வான்ஸாக வச்சுக்குங்க . “ பிரபுவின் கையில் உறை ஒன்றைக் கொடுத்தார் . வர்த்தினியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டி “ பிரமாதமாக வருவம்மா ” என்றார் .
பிரபு காரில் ஏறினான் . வர்த்தினியைத் தூக்கிக் கொண்டு கீதாவும் ஏறிக் கொண்டாள் . கைக்குட்டையால் பாதங்களை வருடிக் கொடுத்தாள் .
“ ரொம்ப வலிக்காம்மா ? “ பிரபுவின் குரல் கம்மியிருந்தது
.
“ ஆமாப்பா …. ரொம்ப சூடு மணல் . பாவம் இல்ல . எனக்கே இப்படி இருந்தால் அந்த பூனைக் குட்டிக்கு எப்படி இருந்திருக்கும் . “
மீண்டும் அவள் விழித்தபோது வாகனம் அவளது பள்ளியைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது
. வளாகத்துக்குள் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்
. உற்சாகமான குரல்கள் நகரத்தின் இரைச்சல்களையும்
மீறி ஒலித்தன .
வர்த்தினி முன் பக்கம் சாய்ந்து பிரபுவின் தோளைத் தொட்டாள் . “
அந்த பூனைக்குட்டியை ஏம்பா தூக்கிட்டுப் போனாங்க . அவங்கல்லாம் யாருப்பா ? “
“ அவங்கல்லாம் மிருக வதை தடுப்பு இயக்கக்காரங்கம்மா . மிருகங்களைக் கொடுமைப் படுத்தினால் அதைத் தடுக்க சட்டம் இருக்கு . அதனால மிருகங்களைக் கொடுமைப் படுத்தறது தெரிஞ்சால் அவங்க வந்து அந்த மிருகங்களை காப்பாற்றிக் கூட்டிட்டுப் போய் ஓரிடத்தில வச்சு வளர்ப்பாங்க . கொடுமைப் படுத்தினவங்க மேல வழக்கு போட்டு தண்டனையும் கொடுப்பாங்க . எஸ் பி ஸி ஏ ன்னு சொல்லுவாங்க . “
வர்த்தினி பின்னால் சாய்ந்து கொண்டு ஏதோ யோசிப்பதுபோல இருந்தாள் . பின்னர் மீண்டும் முன்னால் குனிந்தாள் .
“ ஏம்பா …. மிருகங்களை வதை பண்ணினால் மட்டும்தான் அவங்க தடுப்பாங்களா
? அந்த சட்டம் மிருகங்களை வதை பண்றதை மட்டும்தான் தடுக்குமா ? “
பிரபு சட்டென்று வாகனத்தின் வேகத்தைக் குறைத்து ஓரமாக நிறுத்தினான்
. வர்த்தினியின் கேள்வி அவனையும் கீதாவையும் உறைந்து போக வைத்திருந்தது .
“ ஆமாம்மா …. அப்புறம் நாளையில இருந்து நீ எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் போக வேண்டாம் . காலையில மெதுவா எழுந்திருச்சு பள்ளிக்கூடம் போனால் போதும் . மற்றது எல்லாம் மெதுவாக் கத்துக்கலாம் . நாளைக்கு இந்த பணத்தையும் திருப்பிக் கொடுத்திடலாம்
. சினிமால்லாம் இப்ப வேண்டாம் . “ பிரபு மீண்டும் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்தான்
. கீதா வர்த்தினியின் பாதங்களைத் தன் மடியில் வைத்து வருடிக் கொடுத்தவாறே வந்தாள் . வர்த்தினியின் முகத்தில் வலி குறித்த அறிகுறிகள் காணாமல் போயிருந்தன .
-----------------------------------------------------------------------------------------------------