வெள்ளி, 19 அக்டோபர், 2018


வாசிப்போம் குழு - தினம் ஒரு பதிவு அக்டோபர் 18 , 2018
முன் நிலவும் பின் பனியும் – [ சிறுகதை ] - ஜெயகாந்தன் .

தனக்கென்று தனித்துவமான நடை என்றெல்லாம் எதையும் தத்தெடுத்துக் கொள்ளாமல் , உத்திகளில் பரிசோதனை முயற்சிகள் செய்யாமல் , தேவைக்கு அதிகமான வர்ணனைகளை புகுத்தாமல் , மனித உறவுகளையும் , மனித மனத்தின் உணர்வுகளையும் மட்டுமே தன் எழுத்துகளின் மூலதனமாய் வைத்துக் கொண்டு எழுதிக் குவித்தவர் ஜே கே . சமூகத்தின் மேல்தட்டு மனிதர்களின் வாழ்வைச் சொன்ன அளவுக்கு கீழ்த்தட்டு மற்றும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை தன் எழுத்துகள் மூலம் வாசகனோடு பகிர்ந்து கொண்ட ஜேகேயின் படைப்புகள் எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் வாசகனைக் கட்டிப் போடவே செய்தன . வெறுப்பையும் அன்பாக மாற்றிக் காட்ட முடியும் என்ற உணர்வை வாசிப்பவர்களின் மனத்தில் உருவாக்கக் கூடிய கதை மாந்தர்கள்தான் அவரது படைப்புகளின் பெரும் பலம் .
முன் நிலவும் பின் பனியும் “ – 1962 ல் அவர் எழுதிய ஒரு சிறுகதை .
பெரிய கோனாரும் , சின்னக் கோனாரும் அண்ணன் தம்பிகள் . ஊருக்கே அவர்களது பெயர் அவைதான் . மனைவி இறந்துவிட , ஒரே மகன் சபாபதியும் ஆடாத ஆட்டம் போட்டு சொத்துகளைத் தொலைத்து பட்டாளத்தில் சேர நினைத்து ஊரை விட்டு ஓடிவிட , பெரிய கோனார் மனம் வெறுத்து வடதேசம் நோக்கிப் போகும் பக்தர்கள் கோஷ்டியோடு செல்ல முயற்சிக்கையில் , தம்பி சின்னக் கோனார் கண்டு காலில் விழுந்து புலம்பி திருப்பிக் கூட்டி வந்து விட்ட பின் பெரியவர் தோட்டத்தில் ஒரு பகுதியில் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கிறார் . தம்பியின் குடும்பம் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது .
ஓடிப் போன சபாபதி ஒருநாள் திரும்பிவர பெரியவர் புத்துணர்வு அடைகிறார் . மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணமும் செய்து வைக்கிறார் . பேரன் பிறக்கிறான் . ஆனால் பேரனைக் கண்ணில் காணும் முன்பே கிழவரின் கண்பார்வை காணாமல் போய்விடுகிறது . எனினும் வருடத்திற்கு ஒரு முறை தன்னைப் பார்க்க வரும் பேரனோடு கொஞ்சி மகிழும் நினைவுகளைச் சுமந்தே வாழ்ந்து வருகிறார் கிழவர் . சபாபதி மனைவியை இரண்டாவது பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்கையில் கிழவரைப் பார்க்க வர இயலாமல் போய்விட , பேரனைப் பார்க்க இயலாமல் போய்விட்ட சோகத்தில் கிழவர் . மீண்டும் ஊருக்கு அழைத்துச் செல்கையில் பேரனையும் கூட்டிக் கொண்டு பார்க்க வருவதாக சபாபதி சொல்லியதில் சமாதானம் அடைந்து , பேரனைச் சந்திக்கப்போகும் மகிழ்ச்சியில் இருக்கும் கிழவருக்கு இடியாக வந்து இறங்குகிறது. அவசரமாக பட்டாளம் அழைத்ததால் நேராகப் போய் விடுகிறான் சபாபதி என்ற செய்தி .
ஆனாலும் கிழவர் விடாமல் நேரடியாக இரயில் நிலையத்திற்கே போய் பேரனைக் கொஞ்சிவிட வேண்டும் என்ற ஆசையில் முந்திரிக் கொட்டைகளை உடைத்து வைத்து தயாராகிறார் . நடுச்சாமம் கழிந்து முதல் கோழி கூவியதுமே , கூட வருகிறேன் என்று சொன்ன சின்னக் கோனாரின் மகள் வழிப் பேரன் தம்பையாவையும் கூட்டிக் கொண்டு தாங்க முடியாத குளிரில் நடுங்கியவாறு இரயில் நிலையம் அடைகிறார் கிழவர் .ஒரு நிமிடம் மட்டுமே நிற்கும் இரயில் வந்ததும் ஆளுக்கொரு திசையில் பெட்டிகளில் தேட சபாபதியையோ , பேரனையோ காண முடியாமல் பரிதவிக்கிறார் கிழவர் . வண்டி கிளம்பி விட்டது . அந்த கடைசி கணத்தில் ஒரு பெட்டியில் இருந்து குழந்தை முகம் ஒன்று மங்கலாகத் தெரிய தள்ளாடி ஓடிச் சென்று , தெரிந்த முகம் பேரனுடையது என்று மகிழ்ந்து , கையில் இருந்த முந்திரிக் கொட்டைகளை அந்தக் குழந்தையின் கைகளில் திணித்து , ஞாபகம் வந்தவராய் கொண்டு வந்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் கொடுக்கிறார் . வண்டி கிளம்பி விரைந்து விடுகிறது அந்தக் குழந்தை பேரன் பாபு இல்லையென்பதையும் , தாயுடன் பயணம் செய்யும் வட இந்தியக் குழந்தை ஒன்று என்பதையும் கிழவர் உணராமலே .
கதை இப்படி முடிகிறது ….      
வண்டி மறையும் வரை தம்பையாவும் கிழவரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். கிழவர், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு, ஒரு நிம்மதி உணர்வில் சிரித்தார். "அடுத்த தடவை பாபு வரும் போது நான் இருக்கேனோ, செத்துப் போயிடறேனோ" என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டார். தம்பையா தும்மினான்.
"இதென்ன, அபசகுனம் மாதிரித் தும்முகிறானே" என்று கிழவர் அவனைப் பார்த்தபோது, தம்பையா இரண்டாவது முறையும் தும்மி சுப சகுனமாக்கினான்...
தம்பையாவைக் கிழவர் மார்புறத் தழுவிக் கொண்டார். இனிமேல் பதினோரு மாதங்களுக்கு அவன்தானே அவருக்குத் துணை!...
ஒரு சிறுகதையில் அன்பு சார்ந்த எத்தனை உணர்வுகளைப் பொதிந்து தந்து விடுகிறார் ஜேகே . அண்ணன் தம்பி ; அப்பா மகன் ; தாத்தா பேரன் ; கடைசியில் யாரென்றே தெரியாத வட இந்திய பெண் கிழவரது அன்பு கண்டு கண் கலங்கி நிற்கும் தருணம் . சின்னச் சின்ன விஷயங்களில் பெரிய பெரிய உணர்வுகள் .
கொஞ்சம் கொஞ்சமேயான வார்த்தைகள்மூலமே சில இடங்களில் கதையின் கனத்தைக் கூட்டி விடுகிறார் ஜேகே ,
- அது சரி, அவர்தான் பாபுவைப் பார்த்ததே இல்லையே? அவர் கண்களில் அவன் உருவம் தெரிவதெப்படி?
தன் குழந்தை என்று பந்தம் பிறக்கவும், சொந்தம் கொண்டாடவும்தான் தன் குழந்தையின் முகம் தெரிய வேண்டும். குழந்தை மீது கொண்ட பாசத்தைக் கொண்டாட, அந்த பக்தியை வழிபட ஒரு முகம்தான் வேண்டுமா, என்ன?...
-  " ம்... அவருக்குத்தான் கண்ணு தெரியலியே... நீ சுருட்டுக் குடிக்கிறேனு அவரு எப்படிப் பாப்பாரு?"
"அவருக்குக் கண்ணு தெரியலேன்னா என்ன?... எனக்குக் கண்ணு தெரியுதே... அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை... சரி, நீ போய் விளையாடு!"
கதையில்  ராந்தல் கம்பம் கூட ஜேகேயின் கைவண்ணத்தில் ஒரு கதை மாந்தராகிவிடும் அற்புதங்களும் உண்டு .
எப்போதோ படித்த கதையை இப்போது மீண்டும் வாசிக்கையில் புதுப்புது பரிமாணங்களோடு மிளிர்வதுதான் ஜேகே படைப்புகளின் தனித்துவம் .
வாசிப்போம் ..... தொடர்ந்து !